பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் 21 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் 2–0 என முன்னிலை பெற்றது.
ஹமில்டனில் நேற்று (14) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப வீரர் பின் அலன் 41 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 74 ஓட்டங்களை விளாசினார்.
அணித் தலைவர் கேன் வில்லியம்ஸன் 26 ஓட்டங்களை பெற்றிருந்தபோதும் காயத்துக்கு உள்ளாகி ஆட்டத்தை பாதியில் நிறுத்திக் கொண்டார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அஸாம் (66) மற்றும் பகார் சமான் (55) 3ஆவது விக்கெட்டுக்கு 87 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று நம்பிக்கை தந்தபோதும் அந்த அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதன்போது 7 ஓட்டங்களை பெற்ற மொஹமட் ரிஸ்வான் ஒரு சிக்ஸரை விளாசி பாக். அணிக்காக அதிக டி20 சிக்ஸார்கள் பெற்ற மொஹமட் ஹபீஸின் சாதனையை முறியடித்தார். ரிஸ்வான் மொத்தமாக 77 சிக்ஸர்களை பெற்றுள்ளார்.