Monday, April 29, 2024
Home » தமிழரசுக் கட்சி தலைமை தெரிவுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு
03 பேரிடமும் விட்டுக்கொடுப்பு இல்லாததால்

தமிழரசுக் கட்சி தலைமை தெரிவுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு

by sachintha
January 12, 2024 6:49 am 0 comment

இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் பதவிக்காக போட்டியிடும் மூவரும் விட்டுக்கொடுப்பு இல்லாததால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தெரிவு செய்வதென நேற்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் பதவிக்காக போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பியோகேஷ்வரன் மூவரும் நேற்று (11) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெல, சிறிதரனின் விடுதியில் கூடி பேசினர்.

இந்த சந்திப்பில் எவருமே வேட்பாளர் தெரிவிலிருந்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அவரவர் பக்க நியாயங்களைபேசினர். எனவே இதனையடுத்து எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலையில் பொதுக்குழு கூட்டத்தில் ஜனநாயமுறையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தி தலைவர் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைப் பதவிக்குபோட்டியிடும் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கூடிப்பேசுவதற்குநேற்று முன்தினம் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதற்கென, அவர்களுக்கு ஒருநாள் அவகாசமும் வழங்கப்பட்டது.

இதன் பின்னரே தேர்தலை நடத்துவதா? இல்லை இணக்கப்பாட்டுடன், சம்பிரதாய அடிப்படையில் தலைவரை ஏகமனதாக நியமிப்பதா? என்று தீர்மானிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் கொழும்பில் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் (11) பிற்பகல் மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போதே கால அவகாசம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், தவராசா கலையரசன்,வடமாகாண தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், பொருளாளர் கனகசபாபதி, கொழும்புக்கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் செயலாளர் துரைராஜசிங்கம், ஒழுக்காற்றுக்குழுத் தலைவர் சீனித்தம்பி யோகேஸ்வரன், திருமலை மாவட்டக்கிளைத் தலைவர் குகதாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

எதிர்வரும் 21ஆம் திகதி கட்சியின் புதிய தலைமைக்கான தெரிவு தொடர்பில் பேசப்பட்டது.

இந்த விடயம் சம்பந்தமாக, இரா.சம்பந்தன், மாவை, தவராசா,கனகசபாபதி, உள்ளிட்டவர்கள் கட்சியின் கடந்த காலச் சம்பிரதாயத்துக்கு அமைவாக இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய தலைமை தெரிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT