நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையானது தமது சபையினால் ஏற்பட்ட தவறு என, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளதாக, ஒரு சில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொது முகாமையாளர், பொறியியலாளர் நொயெல் பிரியந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 09ஆம் திகதி இடம்பெற்ற நாடளாவிய மின்சாரத் தடை தொடர்பில் விசாரணை செய்ய, மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் தலைமையில் உள்ளக குழுவொன்றும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் ஒரு குழுவும் என இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழுக்கள் உரிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
மின்சாரத் தடை ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிதல், தொழில்நுட்ப ரீதியான விசாரணை செய்தல், அச்சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் உள்ளிட்ட பணிக்குழாமின் செயற்பாடுகளை ஆராய்தல், மீண்டும் மின்சாரம் வழங்க எடுத்துக் கொண்ட நேரத்தை பகுப்பாய்வு செய்தல், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது தவிர்ப்பது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்த குழுக்களால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, மின்சார குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த விசாரணைகள் நிறைவு பெற்றதும் அக்குழுக்களினால் முன்வைக்கப்படும் முடிவுகள் தொடர்பில் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் சபை குறிப்பிட்டுள்ளது.