Friday, May 3, 2024
Home » IND vs SA முதல் டெஸ்ட் போட்டி : ரபாடாவின் வேகத்தில் சரிந்த முன்னணி வீரர்கள்

IND vs SA முதல் டெஸ்ட் போட்டி : ரபாடாவின் வேகத்தில் சரிந்த முன்னணி வீரர்கள்

- இந்திய அணி தடுமாற்றம்

by Prashahini
December 26, 2023 7:45 pm 0 comment

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 121 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது இந்திய அணி.

தென் ஆபிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து T20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற சர்வதேச T20 கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி கண்டது. இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (26) செஞ்சுரியனில் தொடங்கியது.

இதில் நாணயச் சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஜடேஜா இடம்பெறவில்லை. மாறாக ஷர்துல் தாகூரும், பிரசித் கிருஷ்ணாவும் அணியில் இடம்பிடித்தனர். பிரசித் கிருஷ்ணாவுக்கு முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட வந்த இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் ஓப்பனிங் செய்தனர். இந்த ஜோடி 5 ஓவர்கள் வரை மட்டுமே நீடித்தது. முதல் விக்கெட்டாக ரபாடாவின் வேகப்பந்து வீச்சில் ரோகித் சர்மா 4 ஓட்டங்களில் பிடிக்கொடுத்து வெளியேறினார்.

அடுத்த சில ஓவர்களில் ஜெய்ஸ்வாலும் 17 ஓட்டங்களில் நந்த்ரே பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டானார். ஷுப்மன் கில் 2 ஓட்டங்களில் நந்த்ரே பர்கர் ஓவரில் அவுட் ஆக 24 ஓட்டங்களுக்கே முதல் 3 விக்கெட்களையும் இந்திய அணி இழந்தது.

அதிர்ச்சியில் இருந்து இந்திய அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் விராட் கோலி ஈடுபட்டனர். இருவரும் நிதானத்துடன் விளையாடி ஓட்டங்களை குவிப்பதில் முனைப்பு காட்டினார். மதிய உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்த இக்கூட்டணி, அதன்பிறகு நீடிக்க தவறியது. ஸ்ரேயஸ் ஐயர் 31 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரபாடாவின் பந்துவீச்சில் போல்டானார். அதே ரபாடாவின் ஓவரில் 38 ஓட்டங்கள் எடுத்திருந்த விராட் கோலி அவுட் ஆனார். இதன்பின் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 ஓட்டங்களோடு நடையைக் கட்டினார்.

இதனால் 121 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது இந்திய அணி. தென் ஆபிரிக்கா தரப்பில் ரபாடா 4 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

முதல் நாள் ஆட்டம் முடிய 50 ஓவர்கள் இருக்கும் நிலையில் 133 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து இந்திய அணி தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. கேஎல் ராகுல் மற்றும் ஷர்துல் தாகூர் இருவரும் நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக களத்தில் பேட்டிங் செய்துவருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT