Monday, April 29, 2024
Home » பலஸ்தீன போராளிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடக்கு காசாவில் ‘போர் உக்கிரம்’

பலஸ்தீன போராளிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடக்கு காசாவில் ‘போர் உக்கிரம்’

- 24 மணி நேரத்தில் மேலும் 201 பலஸ்தீனர்கள் பலி

by Rizwan Segu Mohideen
December 25, 2023 11:40 am 0 comment

வடக்கு காசாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக இஸ்ரேலியப் படை பலஸ்தீன போராளிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளது. காசாவுக்கு மேலும் உதவிகளை வழங்கும் ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. எனினும் அந்தத் தீர்மானம் போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தத் தவறியுள்ளது.

வடக்கு நகரான ஜபலியாவில் கரும்புகை வெளிவந்த வண்ணம் இருந்ததோடு இஸ்ரேலின் வான் மற்றும் செல் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்ததாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் வீசிய வெடிக்காத இரு ஏவுகணைகளை பயன்படுத்தி அந்தப் பகுதியில் உள்ள ஐந்து இஸ்ரேலிய டாங்கிகளை அழித்ததாகவும் படையினரை கொன்று மற்றும் காயப்படுத்தியதாகவும் ஹமாஸ் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவை கட்டுப்படுத்தும் படை நடவடிக்கை கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டி இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேலிய தலைமை இராணுவ பேச்சாளர், தெற்கு காசா பகுதி மீது அவதானம் செலுத்தி தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிலைமை குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சனிக்கிழமை (23) பேச்சுவார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை கூறியது. இஸ்ரேலின் பிரதான கூட்டாளியான அமெரிக்கா இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகின்றபோதும், காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து அக்கறையை வெளியிட்டு வருகிறது.

நெதன்யாகுவுடன் பேசியதன் விபரத்தை செய்தியாளர்களிடம் கூற மறுத்த பைடன், “அது ஒரு தனிப்பட்ட உரையாடல்” என்றார்.

எனினும் “போர் நிறுத்தம் ஒன்றை கேட்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

காசாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறிய வெள்ளை மாளிகை, பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பிலும் பேசியதாக அது கூறியது.

எனினும் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை குறைவான தீவிரத்துடன் ஹமாஸ் தலைவர்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை இலக்கு வைக்கும் வகையில் மாற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என்ற நெருக்கடியுடன் பல நாட்கள் இழுபறி நீடித்த ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் அமெரிக்க நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை (22) நிறைவேற்றப்பட்டது. அதில் ‘காசாவிற்கு பாதுகாப்பான, தடையற்ற மற்றும் விரிவாக்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் செல்ல’ வலியுறுத்தப்பட்டதோடு நிலையான போர் நிறுத்தம் ஒன்றுக்கான நிபந்தனைகளையும் விதித்திருந்தது.

எனினும் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கும் போரை உடன் முடிவுக்குக் கொண்டுவரும்படி அழைப்பு விடுப்பதாக இந்தத் தீர்மானம் முன்னர் வரையப்பட்டபோதும் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அமெரிக்கா எதிர்ப்பை வெளியிட்டு வந்ததால் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

மனிதாபிமான இடைநிறுத்தங்கள் மற்றும் முழு போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த இரண்டு முந்தைய தீர்மானங்களை அமெரிக்கா வீட்டோ செய்த பின்னர், பாதுகாப்புச் சபை மூலம் நிறைவேற்றப்பட்ட போரின் முதல் தீர்மானம் இதுவாகும்.

எனினும் உதவிகள் செல்வதற்கு மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றே சரியான வழி என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார். ‘உதவி வாகனங்களின் எண்ணிக்கை பற்றிய பிரச்சினையல்ல இது, இஸ்ரேல் நடத்தும் இந்தத் தாக்குதல்கள் உதவி விநியோகங்களுக்கு பாரிய இடையூறாக உள்ளது’ என்று அவர் கூறினார்.

இதேநேரம் ‘இஸ்ரேல் தனது இலக்குகள் அனைத்தையும் அடையும் வரை தொடர்ந்து போர் நீடிக்கும்’ என்று இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 201 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று கூறியது.

இஸ்ரேல் இராணுவம் காசா நகரத்தில் உள்ள இரண்டு குடியிருப்புகளைத் தகர்த்தது. இந்தத் தாக்குதலில் 90க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்களும் அடங்கும்.

இதனால் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 20,258 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 53,688 பேர் காயமடைந்துள்ளனர். தவிர ஆயிரக்கணக்கான சடலங்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று பலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.

இடிபாடுகளிடையே சிக்கி இறந்த மனிதர்களின் உடல்களை பூனைகள் உண்பது போலான காட்சிகள் நிகழ்வதாகக் களத்திலிருந்து தகவல்கள் வெளியாகின்றன.

தெற்கு நகரான கான் யூனிஸில் இடிபாடுகளில் சிக்கி இருக்கும் உடல்களை உண்ணும் பூனைகளை விரட்டும் முயற்சியில் அந்த இடிபாடுகள் வழியாகச் செல்லும் மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் அவ்வாறான சடலம் ஒன்றை போர்வையால் போர்த்தியதோடு, மற்றொருவர் அம்புலன்ஸ் வண்டியை அழைக்க முயன்றபோதும் தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்டு காணப்படுவதாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையின் கிட்டத்தட்ட அனைவரும் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் மத்திய காசாவில் மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து புரைஜ் முகாம் மற்றும் மத்திய காசாவின் ஏனைய பகுதிகளில் இருந்து மக்கள் தெற்கு நகரான டெயிர் அல் பலாவை நோக்கி வெளியேற ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவு சுமார் 150,000 பேரை பாதித்திருப்பதாக ஐ.நா கணித்துள்ளது.

‘காசாவில் உள்ளவர்கள் மனிதர்களே’ என்று பலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணிகள் நிறுவனத்தைச் சேர்ந்த தோமஸ் வைட் குறிப்பிட்டார். ‘அவர்கள் சதுரங்க பலகையின் காய்கள் அல்ல. பலர் ஏற்கனவே பல தடவைகள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்’ என்றார்.

இந்த குறுகிய நிலப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற இஸ்ரேல் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பிக்கின்றபோதும் அவர்கள் வெளியேற்றப்பட்ட இடத்திலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துவதால் மக்கள் பல முறை இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் வடக்கு காசாவில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸில் அடைக்கலம் பெற்ற நிலையில் அந்த நகர் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதனை அடுத்து அந்த மக்கள் மேலும் தெற்காக எகிப்து எல்லை வரை தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதி காசாவின் சன நெரிசல் மிக்க இடமாக மாறியுள்ளது.

இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவரான மருத்துவர் நூர் வகுதி காசா நகரைச் சேர்ந்தவர் என்றபோதும் தற்போது அவர் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதியில் பணியாற்றி வருகிறார். ‘நோய்கள் பயங்கரமாக பரவி வருவதோடு உணவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது’ என்று அந்தப் பெண் மருத்துவர் குறிப்பிட்டார்.

புதிய வெளியேற்ற உத்தரவை அடுத்து மத்திய காசாவில் உள்ள மக்கள் தமது உடைமைகளை சுமந்தபடி கழுதை வண்டிகளில வீதி நெடுகவும் பயணித்து வருகின்றனர். குழந்தைகளை தள்ளு வண்டியில் தள்ளியபடியும் வயதானவர்கள் குளிர் காலத்தில் போர்வையை போர்த்தி தள்ளாடியபடியும் வீதிகளில் செல்வதை பார்க்க முடிவதாக அங்கிருப்போர் விபரித்துள்ளனர்.

எவ்வாறாயினும் காசாவில் இஸ்ரேலியப் படை தொடர்ந்தும் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஐந்து இஸ்ரேலிய வீரர்களும் சனிக்கிழமை மேலும் எட்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.

பல சந்தர்ப்பங்களில் சுரங்கப்பாதைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான சுரங்கப்பாதைகள் வழியாக தோன்றும் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலிய துருப்புகள் மீது சூடு நடத்துவதாக அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்ட எட்டு வீரர்களில் சிலர் ஏவுகணை மற்றும் ரொக்கெட் தாக்குதல்களால் பலியானதாகவும் சிலர் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டதாகவும் அந்த இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.

வடக்கு காசாவில் முன்னேற்றம் கண்டதாக இஸ்ரேல் கூறியபோதும் அங்கு இஸ்ரேல் தனது படைகளை தொடர்ந்து இழந்து வருவதோடு காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல்களும் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் பிற்பகுதியில் காசா மீது தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

மறுபுறம், பலஸ்தீனர்களில் ஹமாஸ் அல்லது இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் நபர்களை விசாரிக்க இராணுவம் கைது செய்து இஸ்ரேல் அழைத்துச் செல்கிறது. இப்படி அழைத்துச் செல்லப்படுபவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து கேள்வி எழுப்புமாறு ஹமாஸ் உலக அமைப்புகளை வலியுறுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT