Home » மிஹிந்தலையில் உள்ள 251 படையினரையும் மீளப்பெறும் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை

மிஹிந்தலையில் உள்ள 251 படையினரையும் மீளப்பெறும் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை

by Rizwan Segu Mohideen
December 11, 2023 8:25 am 0 comment

மிஹிந்தலை புனித பூமி பிரதேசத்திலிருந்து இராணுவத்தினர் உள்ளிட்ட 251 பாதுகாப்பு படை வீரர்களையும் மீளப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் சபையில் தெரிவித்த அவர்,தனது உயிருக்கு இராணுவத்தினராலும் பாதுகாப்பு தரப்பினராலும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மிஹிந்தலை விகாராதிபதி கருதும் பட்சத்திலேயே இராணுவத்தினர் உட்பட 251 பாதுகாப்பு அதிகாரிகளையும் மீளப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இராணுவத்தினர் மீது படுகொலைக் குற்றச்சாட்டை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதைச் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், மிஹிந்தலை புனித பூமி பிரதேசத்துக்கு கடமைக்காக செல்வதற்கு இராணுவத்தினர் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று அது தொடர்பில் மேலும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

மிஹிந்தலை விகாரைக்கும் அதன் விகாராதிபதிக்கும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது எனது பொறுப்பாகும். மிஹிந்தலை புனித பூமியில் 103 கடற்படையின் அதிகாரிகளும் 48 இராணுவத்தினரும் 100 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் ஏனைய அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விகாராதிபதியின் கோரிக்கைக்கமைய பல்வேறு செயற்பாடுகளுக்காக பாதுகாப்பு படைவீரர்களை மிஹிந்தலைக்கு வழங்கியுள்ளோம்.

கடந்த பொசன் உற்சவத்தின் போது 150 மண் மூடைகளை இராணுவத்தினர் தமது தோளில் சுமந்தவாறு விகாரைக்கு கொண்டு சென்று புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளார்கள்.

கடந்த அக்டோபர் மாதம் 07 ஆம் திகதிக்குப் பின்னர் மத வழிபாட்டு தலங்கள், சுற்றுலாத்துறை மையங்கள் உட்பட பொது இடங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிவில் உடையுடன் இராணுவத்தினர் விகாரைக்கு செல்ல முடியாது என்பதை நேற்று முன்தினமே எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது சபையில் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து கருத்துக்களை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சரின் தவறான தீர்மானம் தொடர்பில் கடும் அதிருப்தியை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரியாமல் இனந்தெரியாத இருவரையே குறித்த புனிதப் பிரதேசத்திலிருந்து பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.இவ்வாறான நிலையில் அங்கு பாதுகாப்பில் உள்ள 251 பேரையும் மீளப் பெறுவதாக குறிப்பிடுவது அநீதியாகும்.பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே தவறான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்,இந்த இரண்டு அதிகாரிகளும் 48 இராணுவத்தினருடன் இரண்டு வாரங்களாக மிஹிந்தலை புனித பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளார்கள்.

எனினும், பாதுகாப்பு தரப்பினர்களுக்கு தெரியாத நபர்கள் என்று அவர்களைக் குறிப்பிடுவது தவறு.இராணுவத்தினருக்கும் சுய கௌரவம் உள்ளது.அவர்களின் சுய கௌரவம் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT