அமானா வங்கி தனது 56 ஆவது வாடிக்கையாளர் சுய வங்கிச் சேவை நிலையத்தை கிழக்கு கரையோர நகரங்களில் ஒன்றான சாய்ந்தமருது பிரதேசத்தில் திறந்துள்ளது. இதனூடாக கிழக்கு மாகாணத்தில் தனது பிரசன்னத்தை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது. இந்த நிலையத்தை வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் திறந்து வைத்ததுடன், நிகழ்வில் வங்கியின் வைப்புகள் மற்றும் டிஜிட்டல் புத்தாக்க உதவி உப தலைவர் அர்ஷாத் ஜமால்தீன், கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கல்முனை கிளை முகாமையாளர் மொஹமட் சமீம், அப்பகுதி வியாபார பிரதிநிதிகள் மற்றும் வதிவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இல. 20A, அக்கரைப்பற்று வீதி, சாய்ந்தமருது எனும் முகவரியில் இந்த சுய வங்கிச் சேவை நிலையம் அமைந்துள்ளதுடன், 24/7 நேரமும் பண மீளப் பெறுகைகள், பண வைப்புகள் மற்றும் காசோலை வைப்புகள் போன்ற வசதிகளை வழங்கும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு கல்முனை கிளையின் உதவியில் அந்நிலையத்தில் காணப்படும் வாடிக்கையாளர் சேவை முகவர்களிடமிருந்து பல்வேறு வங்கிச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். இந்த நிலையத்தின் நாளாந்த செயற்பாடுகளை கல்முனை கிளை, AB Securitas (Pvt) Ltd. உடன் இணைந்து முன்னெடுக்கும்.
தமது சேவை விஸ்தரிப்பு தொடர்பில் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “சுய வங்கிச் சேவை நிலையங்களின் விஸ்தரிப்பு தொடர்பில் அறிவிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன், சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு எமது மக்களுக்கு நட்பான வங்கிச் சேவை மாதிரியை வழங்க முடிவதையிட்டும் மகிழ்ச்சியடைகின்றோம். முக்கிய நகரப் பகுதிகளுக்கு எமது மூலோபாய விரிவாக்கத்தினூடாக, எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பரந்தளவு சமூகத்தினரிடையே நிதிசார் உள்ளடக்கம் ஊக்குவிக்கப்படுவதுடன், பரந்தளவு வங்கிச் சேவைகளை இலகுவாக அணுகக்கூடிய தன்மை வழங்கப்படும். மேலும், இந்த SBCகளில் அர்ப்பணிப்பான வாடிக்கையாளர் சேவை முகவர்களை நாம் நியமித்துள்ளதுடன், அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு இதர வங்கிச் சேவைகளையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எம்முடன் அவர்களின் வங்கியியல் அனுபவத்தை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. 2023 ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட தேசிய நீண்ட கால தரப்படுத்தலில் BB+(lka) எனும் உறுதியான தோற்றத்தை வழங்கியிருந்தது.
OrphanCare அமைப்பின் ஸ்தாபக அனுசரணையாளர் என்பதற்கு அப்பால், எவ்விதமான துணை, இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.