வஸ்கடுவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்றை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் ரயில் சாரதிக்கு கண்ணில் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரவு 9.00 மணியளவில் புறப்படவிருந்த விமானத்தில் பயணிக்க இருந்த சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பஸ் செக் குடியரசிற்குச் செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகளை ஒரு ஹோட்டலில் இருந்து ஏற்றிக்கொண்டு, மற்றுமொரு ஹோட்டலில் இருந்த சுற்றுலாப் பயணிகளையும் ஏற்றிச்சென்றபோது அளுத்கமவில் இருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பஸ்ஸின் பின்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், ரயிலும் சேதமடைந்ததுள்ளது.
விபத்து காரணமாக அளுத்கமையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில் மாத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
ஏனைய ரயில் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.