Monday, April 29, 2024
Home » மக்கள் செலுத்தும் VAT வரியை அரசாங்கம் முறையாக பெறும் பொறிமுறையை உருவாக்கவும்

மக்கள் செலுத்தும் VAT வரியை அரசாங்கம் முறையாக பெறும் பொறிமுறையை உருவாக்கவும்

- இறைவரித் திணைக்களத்திற்கு கோபா குழு ஆலோசனை

by Rizwan Segu Mohideen
November 18, 2023 5:36 pm 0 comment

– 2023 இல் இதுவரை புதிய வரி செலுத்துபவர்கள் ஒரு இலட்சத்து 98 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பதிவு: இறைவரித் திணைக்களம்

பல்வேறு பொருட்களுக்கு பொதுமக்கள் செலுத்தும் பெறுமதி சேர் வரி (VAT) அரசாங்கத்துக்கு முறையான வகையில் கிடைக்கப்பெறுகின்றதா என்பது தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் வினவப்பட்டது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள், தற்போது சுமார் பதின்மூன்றாயிரம் நிறுவனங்கள் பெறுமதி சேர் வரி (VAT) செலுத்துவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் உரிய வரியை அரசுக்கு செலுத்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தனர். பொது மக்களிடமிருந்து VAT அறவிடும் நிறுவனங்கள், அந்த வரி முறையாக அரசாங்கத்துக்குக் கிடைக்கப்பெறுவதற்கான பொறிமுறையை தயாரிக்க வேண்டும் என இதன்போது குழு சுட்டிக்காட்டியது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பான 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அலகியவண்ண தலைமையில் 2023.11.15 ஆம் திகதி கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

RAMIS கணினிக் கட்டமைப்பை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொறுப்பேற்றுப் பராமரிக்க முடியுமா என குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். எனினும், இதுவரை சம்பந்தப்பட்ட மனிதவளம் முறையாகக் கிடைக்காத நிலையில் அந்தக் கட்டமைப்பைப் பொறுப்பேற்றுப் பராமரிக்க முடியாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் அறிவித்தனர்.

RAMIS கணினிக் கட்டமைப்புடன் 6 நிறுவனங்கள் இணைந்து செயற்படுவதுடன் கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் ஒருசில தொழில்நுட்பக் காரணங்களுக்காக RAMIS கட்டமைப்புடன் இணைவது தாமதமடைந்துள்ளதாக குழுவில் புலப்பட்டது. அதற்கமைய, உடனடியாக தமது கணினிக் கட்டமைப்பில் சம்பந்தப்பட்ட இற்றைப்படுத்தலை மேற்கொண்டு RAMIS கட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்துக்கு குழு பரிந்துரை வழங்கியது. அதன் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கையை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் குழுவுக்கு சமர்பிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

தற்பொழுது பல வகைப்படுத்தல்களின் கீழ் அறவிடப்படும் வரி தொடர்பான முழுமையான அறிக்கையொன்றையும், அறவிடப்படவுள்ள 943 பில்லியன் ரூபா நிலுவைத் தொகை தொடர்பான முழுமையான அறிக்கையையும் குழுவிற்கு வழங்குமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

புதிய வரி செலுத்துபவர்களின் பதிவு குறித்தும் அதிகாரிகளிடம் குழு வினவியது. அதற்கமைய, 2023 இல் இதுவரை ஒரு இலட்சத்து 98,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். 18 வயதுக்கு அதிகமான பிரஜைகள் சுமார் 16 மில்லியன் பேர் உள்ளனர் என இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை வரி செலுத்தும் செயற்பாட்டில் சேர்த்துக்கொள்வதற்கு விசேட வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர்களான கௌரவ (சட்டத்தரணி) மொஹான் பிரியதர்ஷன த சில்வா, கௌரவ பிரசன்ன ரணவீர, கௌரவ சாமர சம்பத் தசநாயக்க, கௌரவ டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ எம்.எல்.எம். அதாஉல்லா, கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க மற்றும் கௌரவ வீரசுமன வீரசிங்க ஆகியோரும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT