Sunday, April 28, 2024
Home » உள்ளூர் கலைஞர்களை மலினப்படுத்தும் தென்னிந்திய கலைஞர்களின் இறக்குமதி

உள்ளூர் கலைஞர்களை மலினப்படுத்தும் தென்னிந்திய கலைஞர்களின் இறக்குமதி

-TNA எம்.பி சிவஞானம் சிறீதரன் குற்றச்சாட்டு

by sachintha
November 17, 2023 6:34 am 0 comment

தென்னிந்தியக் கலைஞர்களை முன்னிலைப்படுத்தும் இறக்குமதிக் கலாசாரம் யாழ்ப்பாணத்தில் முனைப்புப் பெற்றுள்ளமை, இம்மண்ணின் கலைஞர்கள், இளைய தலைமுறைத் திறமையாளர்களை மலினப்படுத்துவதாக உள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ்.கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் 67ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கலைத்துவப் பாரம்பரியமும் அடையாளமும் மிக்க எங்கள் மண்ணின் கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்சார் கலைகள் அத்தனைக்கும், தென்னிந்தியக் கலைஞர்களை முன்னிலைப்படுத்தும் இறக்குமதிக் கலாசாரம் யாழ்ப்பாணத்தில் முனைப்புப் பெற்றுள்ளது. இந்நிலைமை, நம்மண்ணின் கலைஞர்களையும், இளைய தலைமுறைத் திறமையாளர்களையும் மலினப்படுத்துவதாகவே உள்ளது.

விடுதலைப் போரையும், தமிழர்களது தேசிய இயக்கத்தையும் கொச்சைப்படுத்தியோர் , எமது மக்கள் கொன்றொழிக்கப்படும் போது எந்தச் சலனமுமற்று தமது தனிமனித வளர்ச்சிக்காய் அயராதுழைத்தோரே இங்கு வரவழைக்கப்படுகின்றனர்.

இத்தகையர்வகளுக்கு எங்கள் மண்ணில் மதிப்பளிப்பதும், தனிப்பட்ட நலன்களுக்காக அப்பிரபலங்கள் உரைக்கும் பசப்பு வார்த்தைகள் என்பன இளைஞர்களைத் திசைதிருப்பும் ஓர் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரலோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இருப்பழிந்து போய்க் கொண்டிருக்கும் தமிழர்களது பண்பாட்டுத் தொடர்ச்சியை மீள நிலைநிறுத்துவதில் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. இத்தகையதோர் சூழலில் துறைசார் ஆர்வலர்கள் தம்மைத்தாமே நிலைநிறுத்துவதற்குரிய களங்களின்றி இருக்கின்றனர்.

எனவே, மண்ணின் கலைஞர்கள், இளைஞர்களது கலைத்திறனுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT