Monday, April 29, 2024
Home » விளையாட்டு சம்மேளனங்களின் அதிகாரிகள் பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அழைக்கப்படுவர்

விளையாட்டு சம்மேளனங்களின் அதிகாரிகள் பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அழைக்கப்படுவர்

- 2024 இல் தேசிய விளையாட்டு பல்கலையொன்றை ஆரம்பிக்கும் முன்னெடுப்புகள் ஆரம்பம்

by Rizwan Segu Mohideen
November 11, 2023 10:29 am 0 comment

விளையாட்டு சம்மேளனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வுகளை வழங்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு விளையாட்டுச் சம்மேளனங்களின் அதிகாரிகளை அழைக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் 2024 ஆம் ஆண்டில் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்நாட்டிலிருக்கும் 77 கிரிக்கெட் சங்கங்களில் 68 சங்கங்கள் மாத்திரமே செயற்பாட்டில் உள்ளன. அந்த சம்மேளங்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தாலும் 2024 க்கு முன்னதாக மீண்டும் ஒரு முறை அவர்களை சந்தித்து அவர்களின் பொறுப்புக்கள் தொடர்பில் வலியுறுத்தவிருக்கிறோம்.

விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு மேற்படி சம்மேளனங்களின் பிரதானிகளை அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனூடாக பேச்சுவார்தை ரீதியான இணக்கப்பாட்டுடன் அந்தப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

இதன்போது, 72 சம்மேளனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டவுள்ளதோடு, அதனூடாக விளையாட்டுத்துறை தொடர்பிலான பிரச்சினைகளை ஓரளவிற்கு மட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என நம்புகிறோம்.

சம்மேளனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வுகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். அதேபோல் விளையாட்டுத்துறை அபிவிருத்தியின் போது ஆவணங்களுக்கு மாத்திரம் மட்டுப்பட்டு கிடக்கும் விளையாட்டுச் சம்மேளனங்களை செயற்பாட்டு நிலைமைக்கு கொண்டு வரவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி 2024 ஆம் ஆண்டில் கிராமங்களுக்கும் விளையாட்டுக்களை கொண்டுச் செல்லும் வகையிலான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே அதன் நோக்கமாகும்.
அதேபோல் உத்தேச வேலைத்திட்டங்களுக்காக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு 125 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச நிதித் தொகையைக் கொண்டே அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

அதேபோல், 2024 ஆம் ஆண்டளவில் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பப் பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்விமானி பட்டம், விஞ்ஞானமானி பட்டம் வழங்கல் மற்றும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி வீதம் மற்றும் சுற்றாடல் தாக்கங்களை அளவிடுதல் தொடர்பிலான ஆய்வுப் பணிகள் என்பன முன்னெடுக்கப்படும்.

அது தொடர்பிலான தொழில்நுட்ப நிறுவனத்தை, 2024 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் மொறட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியின் பின்னர் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஒன்றிணைத்து இராணுவங்களின் கேர்ணல் நிலைக்கு மேற்பட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் 15 மோட்டார் சைக்கிள்கள் கொண்ட போட்டியொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 29 நேபாளத்தில் ஆரம்பித்து ஜனவரி 14 இந்தியாவின் ஊடாக இலங்கையை வந்தடைய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தைப்பொங்கல் (15) தினத்தில் யாழ். காங்கேசன்துறையில் ஆரம்பிக்கப்படவிருக்கும் போட்டி, காலி முகத்திடன் கலாசார கண்காட்சியுடன் நிறைவடையவுள்ளது.

அதேபோல், கீழ் மட்ட ஒழுங்குமுறைகள் மற்றும் பணிகள் தொடர்பிலான தெரிவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், பாராளுமன்றத்திலிருக்கும் இளம் எம்.பிக்களுக்கு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் பங்கேற்க வாய்ப்பளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் பின்னர் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் பங்கேற்கவும் வாய்ப்பளிக்கப்படவுள்ளது. அதனூடாக இளைஞர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT