Monday, April 29, 2024
Home » உலகக் கிண்ணத்தில் தனது கடைசிப் போட்டியில் நியூஸிலாந்துடன் இலங்கை அணி

உலகக் கிண்ணத்தில் தனது கடைசிப் போட்டியில் நியூஸிலாந்துடன் இலங்கை அணி

- மழை குறுக்கிட அதிக வாய்ப்பு

by Rizwan Segu Mohideen
November 9, 2023 11:46 am 0 comment

உலகக் கிண்ணத்தின் அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் தனது கடைசி போட்டியில் இன்று (09) நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

பெங்களூர், எம். சின்னசுவாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை அணி 2025 சம்பியன்ஸ் கிண்ண போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு முக்கியமானதாக உள்ளது. மறுபுறம் நியூஸிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்புக்கும் இன்றைய போட்டி தீர்க்கமாக உள்ளது.

எனினும் பெங்களூரில் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவரும் நிலையில் இன்றைய போட்டிக்கு மழை குறுக்கிட அதிக வாய்ப்பு இருப்பதாக காலநிலை அவதான நிலையத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இன்று பெங்களூரில் மழை பெய்ய 90 வீத வாய்ப்பு இருப்பதாக சர்வதேச காலநிலை எதிர்வுகூறல்களை வெளியிடும் அக்குவெதர் ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 8 போட்டிகளில் 2 வெற்றி 6 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்று 8 ஆவது இடத்தில் இருந்தது. பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சம்பின்யன்ஸ் கிண்ணத்திற்கு தகுதி பெற உலகக் கிண்ணத்தில் முதல் எட்டு இடங்களை பெறும் அணிகளுக்கே வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி இன்றைய தினம் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

மறுபுறம் இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் உலகக் கிண்ண அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றிருக்கு நிலையில் எஞ்சியுள்ள ஒரு இடத்திற்காக நியூஸிலாந்துடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த மூன்று அணிகளும் தலா 8 புள்ளிகளை பெற்றிருப்பதோடு மேலும் ஒரு ஆட்டம் எஞ்சியுள்ளது. எனினும் நியூஸிலாந்து அணி நிகர ஓட்ட விகிதத்தில் முன்னிலையில் இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளும். முன்னதாக நியூஸிலாந்து அணி பாகிஸ்தானையும் இதே சின்னசுவாமி மைதானத்திலேயே எதிர்கொண்டது. அந்த போட்டியில் மழையால் டக்வர்த் லுவிஸ் முறையில் நியூஸிலாந்து அணி தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இன்றைய தினத்திலும் மழை இடையூறு செய்தால் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி எதிர்பார்ப்பு மற்ற போட்டி முடிவுகளில் தங்கி இருக்க வேண்டி ஏற்படும்.

குறுகிய பெளண்டரி எல்லையைக் கொண்ட சின்னசுவாமி மைதானம் அதிக ஓட்டங்கள் குவிக்கும் மைதானமாக உள்ளது. எந்த ஓட்ட இலக்கும்இங்கு பாதுகாப்பானதாக இல்லை. கடந்த முறை நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 402 ஓட்டங்களை பெற்றபோதும் வெற்றி பெற முடியவில்லை.

இங்கு இடம்பெற்ற 41 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகள் 15 முறையும் பதிலெடுத்தாடிய அணிகள் 22 முறையும் வெற்றியீட்டியுள்ளன. எனவே, நாணய சுழற்சியில் வெல்லும் அணி பதிலெடுத்தாட தீர்மானிக்கும் வாய்ப்பு அதிகம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT