Home » அரிசி விலையைக் குறைப்பதற்காக நெற்செய்கையை அதிகரிக்க ஏற்பாடு

அரிசி விலையைக் குறைப்பதற்காக நெற்செய்கையை அதிகரிக்க ஏற்பாடு

by mahesh
November 8, 2023 6:00 am 0 comment

இலங்கையானது நெற்செய்கையைப் பிரதானமாகக் கொண்ட விவசாயப் பொருளாதார நாடாகும். நெற்செய்கைக்குத் தேவையான சீதோஷண நிலையையும் மண்வளத்தையும் இயற்கையாகவே பெற்றுக்கொண்டுள்ள இந்நாடு, மன்னராட்சிக் காலம் முதல் நெற்செய்கையில் முன்னணியில் திகழ்கிறது.

இந்நிலையில் நெற்செய்கையை அடிப்படையாகக் கொண்ட நீர்ப்பாசனப் பாரம்பரியம் இந்நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. வயலும், குளமும், வழிபாட்டிடமும் பின்னிப்பிணைந்ததாக இக்கலாசார மரபுரிமை உருவாகியுள்ளது.

ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு உள்ளாகாத காலப்பகுதியில் நெற்செய்கையில் தன்னிறைவு அடைந்து காணப்பட்ட இந்நாடு, ஒரு காலத்தில் தெற்காசியாவின் நெற்களஞ்சியமாகவும் விளங்கியது. அத்தோடு வெளிநாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

ஐரோப்பியரின் ஏகாதிபத்தியத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. பெருந்தோட்ட பயிர்ச்செய்கையைப் பிரித்தானியர் இலங்கைக்கு அறிமுகப்படுத்தினர்.

இந்நிலையில் இந்நாட்டின் நெற்செய்கைப் பாரம்பரியத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதோடு அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளும் பராமரிப்பற்ற நிலையில் கைவிடப்பட்டன. அதனால் நெற்செய்கையில் இருந்து பயிர்ச்செய்கையாளர்கள் தூரமாகும் நிலை உருவானது.

ஆனாலும் நாடு சுதந்திரமடைந்த பின்னர் நெற்செய்கையை மீண்டும் பழைய நிலைக்குக் கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. என்றாலும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு முற்பட்ட வளர்ச்சியை நெற்செய்கையில் இன்னும் அடையக் கிடைக்கவில்லை.

அதேநேரம் கடந்த ஆட்சியாளர்கள் முன்னெடுத்த இரசாயனப் பசளைத் தடையால் நெற்செய்கையாளர்கள் வேளாண்மைச் செய்கையைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் அறிமுகப்படுத்திய இயற்கை பசளையைப் பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உரிய விளைச்சலும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் நெற்செய்கையாளர்கள் பொருளாதார நஷ்டத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நாட்டுக்குத் தேவையான அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் நாட்டின் தலைமையைப் பொறுப்பெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நெற்செய்கையாளர்களுக்கு இரசாயனப் பசளையை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் ஊடாக குறுகிய காலப்பகுதியில் நாட்டின் நெற்செய்கை பழைய நிலைக்குத் திரும்பும் சூழல் உருவானது. இதன் பயனாக குறுகிய காலப்பகுதியில் நெற்செய்கையில் தன்னிறைவு அடைய முடிந்திருக்கிறது.

தற்போது நாட்டில் 8 இலட்சம் ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன் பயனாக வருடமொன்றுக்கு 5.2 மில்லியன் மெற்றிக்தொன் நெல் அறுவடையை நாடு பெற்றுக்கொள்கிறது. இதன் மூலம் 3.1 மில்லியன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் வருடமொன்றுக்கு 2.4 மில்லியன் மெற்றிக்தொன் அரிசி நாட்டின் நுகர்வுக்கு அவசியமானது.

தற்போது நாடு நெல்விளைச்சலில் தன்னிறைவு அடைந்துள்ள போதிலும் நாடெங்கிலுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு போகத்திலும் ஒரே மாதிரியான நெல்விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. ஹெக்டேயருக்கு 2.5 முதல் 4.5 மெற்றிக்தொன் நெல் அறுவடை கிடைக்கப்பெறுகின்ற போதிலும், சில மாவட்டங்களில் ஹெக்டேயருக்கு சுமார் 11 மெற்றிக்தொன் நெல் விளைச்சலையும் விவசாயிகள் பெற்றுக்கொள்கின்றனர். இது தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிகூடிய விளைச்சலாகும். இந்த விளைச்சலை முழுநாட்டிலும் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பரவலாக உணரப்பட்டுள்ளது. அதன் ஊடாக உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடிவதோடு, அரிசியைக் குறைந்த விலையில் மக்களுக்கு சந்தைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

இந்நிலையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரிசியில் தன்னிறைவு அடையும் வகையில் அடுத்துவரும் ஆறு போகங்களிலும் நெற்செய்கையை இரட்டிப்பாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு விவசாய அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய அறிவுறுத்தலாகும். அரிசியை பிரதான உணவாகக் கொண்ட நாடாக இருப்பதால், அரிசியை குறைந்த விலையில் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது இன்றியமையாததாகும். அதற்காக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ​வேண்டும். அப்போது அரிசி இறக்குமதிக்கான அந்நியச் செலாவணியையும் மீதப்படுத்திக் கொள்ள முடியும்.

ஜனாதிபதியின் இந்த அறிவுறுத்தலுக்கு அமைய நெற்செய்கையின் விளைச்சலை அதிகரிப்பதற்கு ஏற்ற தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதோடு, அது தொடர்பில் விஷேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். இவற்றுக்குத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அரசின் ஊடாக வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இத்திட்டங்களின் ஊடாக நெல் விளைச்சல் அதிகரிப்பதும் மக்கள் குறைந்த விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ளும் காலமும் வெகுதொலையில் இல்லை என உறுதிபடக் கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x