Tuesday, May 7, 2024
Home » இஸ்ரேலிய தரைப்படை காசாவில் ஊடுருவி தாக்குதல்; 7,000 பேர் இதுவரை பலி

இஸ்ரேலிய தரைப்படை காசாவில் ஊடுருவி தாக்குதல்; 7,000 பேர் இதுவரை பலி

by Rizwan Segu Mohideen
October 27, 2023 7:46 am 0 comment

இஸ்ரேலிய தரைப்படைகள் காசாவுக்கு முன்னேறி ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருக்கும் நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட தரைவழி ஆக்கிரமிப்புக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

“இது எப்போது, எப்படி அல்லது எத்தனை என்று நான் கூறமாட்டேன்” என்று கடந்த புதனன்று (25) தொலைக்காட்சியில் உரையாற்றிய நெதன்யாகு குறிப்பிட்டார்.

முழு முற்றுகையில் உள்ள காசா பகுதி கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில் ஏற்கனவே அந்தப் பகுதி பெரும் பேரழிவுகளை சந்தித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 200க்கும் அதிகமான பணயக்கைதிகளை பிடித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, அந்த பணயக்கைதிகளில் சிலரை கொல்லப்போவதாக எச்சரித்துள்ளது. இந்தப் பணயக்கைதிகளில் பாதிக்கும் அதிகமானவர்கள் 25 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றவர்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவில் உயிரிழப்பு ஏழாயிரத்தை தாண்டிய நிலையில் இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சுறுத்தல் குறித்து மத்திய கிழக்கு தலைவர்கள் அஞ்சுகின்றனர். ஏற்கனவே இஸ்ரேல் மீது மற்ற இடங்களில் இருந்து ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் குறித்து” பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பணயக்கைதிகள் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா நம்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதில் காசாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினர் அங்கிருக்கு பாதுகாப்பாக வெளியேறுவது, இஸ்ரேல் முடக்கி வைத்திருக்கும் அந்த குறுகிய கடலோரப் பகுதிக்கு தொடர்ந்து உதவிகள் செல்வது மற்றும் பலஸ்தீன மக்களுக்கு நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடக்கு காசா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று அதிகாலை பாரிய ஊடுருவலை மேற்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிக பாதுகாப்புக் கொண்ட எல்லையைத் தாண்டி இஸ்ரேலிய கவச வாகனங்கள் காசாவுக்குள் ஊடுருவுவது மற்றும் அடுத்த கட்ட போர் நடவடிக்கைக்கு தயாராவதற்கு கட்டடங்களை தகர்க்கும் வீடியோவை இஸ்ரேல் வெளிட்டது. காசாவில் தாக்குதல்களை நடத்தி விட்டு இஸ்ரேலிய தரைப்படை அங்கிருந்து வெளியேறியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

“டாங்கிகள் மற்றும் தரைப்படை பல பயங்கரவாத செல்கள், உட்கட்டமைப்பு மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஏவுதளங்களை தாக்கின” என்று இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இஸ்ரேல் தான் திட்டமிட்டிருக்கும் தரைவழி தாக்குதலை ஆரம்பிப்பதாக இது அமையவில்லை. அதற்கான முன்னேற்பாடாக இந்த ஊடுருவல் இருந்ததாக கூறப்படுகிறது.

மறுபுறம் காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் நேற்றைய தினத்திலும் நீடித்தது. புரைஜ் அகதி முகாமுக்கு அருகில் மத்திய காசா, கராரா கிராமத்தின் கிழக்கு பகுதி மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமாக இருந்துள்ளன.

இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்புக்கு ஹமாஸ் நேரடியாக பதில் கூறாதபோதும், கிழக்கு புரைஜில் இஸ்ரேலிய ஹெலிகொப்டர் ஒன்றின் மீது தமது ஆயுதப் பிரிவு தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது.

எனினும் உலகில் அதிக சனநெரிசல் மிக்க பகுதி ஒன்றான காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 250 இலக்குதல் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது. இதனால் அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7000ஐ தாண்டியுள்ளது.

காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 7,028 ஆக உயர்ந்திருந்ததோடு அதில் 2,913 சிறுவர்கள், 1,709 பெண்கள் மற்றும் 397 முதியவர்கள் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் வன்முறை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் இந்தப் போர் வெடித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. இஸ்ரேல் நேற்றைய தினத்திலும் சுற்றிவளைப்புகளை நடத்தி நூற்றுக்கணக்கானோரை கைது செய்தது.

வடக்கு காசாவில் ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேலிய போர் விமானம் வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதில் தாய் மூன்று மகள்கள் மற்றும் ஆண் குழந்தை ஒன்று கொல்லப்பட்டுள்ளது.

1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது தமது பெற்றோர் அங்கிருந்து வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் என்று குறிப்பிட்ட தந்தை, என்ன நடந்தாலும் இங்கிருந்து வெளியேறப்போவதில்லை என்று குறிப்பிட்டார். கொல்லப்பட்ட தனது ஆண் குழந்தையை சுமந்தபடி அழுதுகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

“இவனுக்கு இரண்டரை மாதங்கள் தான் ஆகிறது. இவன் என்ன செய்தான்? இவன் கொலைகள் செய்தானா? யாரையாவது காயப்படுத்தினானா? யாரையாவது பிடித்து வைத்திருக்கிறானா? தனது வீட்டுக்குள் இருந்த அப்பாவிக் குழந்தை இவன்” என்று அந்தத் தந்தை குறிப்பிட்டார்.

வடக்கில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் பெரும் எண்ணிக்கையான மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். இந்நிலையில் அந்தப் பகுதி மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் காசாவில் உள்ள அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தியாளர் வயில் அல் டவுதாவின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவரது மனைவி, மகன், மகள் மற்றும் பேரக் குழந்தையும் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் எரிபொருள் தீர்ந்து வரும் நிலையில் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது. இதனால் காசா பகுதியில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை பெரிய அளவில் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று காசாவுக்கு எகிப்துடனான ரபா எல்லைக் கடவை வழியாக உணவு மற்றும் மருந்து பொருட்களை ஏற்றிய மேலும் 12 லொறிகள் வந்ததாக பலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. போர் வெடித்தது தொடக்கம் காசாவுக்கு 74 உதவி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும் பெரும் உதவிகள் தேவைப்படும் நிலையில் இது கடலில் போட்டதற்கு ஒப்பானது என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

காசாவில் மனிதாபிமான விநியோகங்கள் மோசமான அளவுக்கு குறைந்துள்ளது. அங்கு மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் உலக நாடுகளின் முயற்சிகளும் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது.

நேற்று பாப்பரசர் பிரான்சிஸுடன் தொலைபேசியில் பேசிய துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் படுகொலைக்கு சமம் என்றும் சர்வதேச சமூகம் அமைதி காப்பது வெட்ககரமானது என்றும் தெரிவித்தார்.

காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நேற்று விவாதித்தனர். 27 நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற பலஸ்தீன ஆதரவு நாடுகள் மற்றும் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற இஸ்ரேல் ஆதரவு நாடுகள் இருக்கும் நிலையில் அந்த அமைப்பு இஸ்ரேல் மற்றும் காசா போரில் பிளவை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT