Friday, October 4, 2024
Home » தேன் எடுப்பதற்காக வனப்பகுதிக்கு சென்ற இளைஞன் மரணம்

தேன் எடுப்பதற்காக வனப்பகுதிக்கு சென்ற இளைஞன் மரணம்

- கற்பாறையிலிருந்து வழுக்கி விழுந்ததால் உயிரிழப்பு

by Prashahini
October 9, 2023 4:19 pm 0 comment

தேன் எடுப்பதற்காக நேற்று (08) மாலை வனப்பகுதிக்கு சென்ற இளைஞர் ஒருவர், கற்பாறையில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார் .

மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதோவ கீழ்ப்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தமது ஊரில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் தேன் எடுப்பதற்காக நேற்று மாலை மூவர் சென்றுள்ளனர்.

கற்பாறை பகுதியில் இருந்த தேனை எடுப்பதற்காக, மரத்தில் கயிற்றை கட்டி இளைஞர் ஒருவர் இறங்கியுள்ளார். அவர் தேன் ராட்டை வெட்டிபோடும்போது அதனை வாலியில் சேகரிக்க கீழ் பகுதியில் மற்றுமொருவர் இருந்துள்ளார்.

முதலாவது தேன் ராட்டை வெட்டி எடுத்து, வாலிக்குள் போட்டுள்ளார். இதன்போது தேன் பாறையிலும் ஒழுகியுள்ளது. இரண்டாவது ராட்டை வெட்டி போட்ட பின்னர், அதனை சேகரிப்பதற்காக கீழ் பகுதியில் இருந்தவர் முற்படுகையில் தேனில் கால் வைத்து வழுக்கி சுமார் 100 அடி பள்ளத்தில் அவர் விழுந்தார் என அவருடன் சென்றவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் ஆட்டோவில் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும், அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர்.

சடலம் பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பதுளை தினகரன் விசேட நிருபர் – எம். செல்வராஜா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x