Saturday, May 11, 2024
Home » வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச ‘மக்கா மாநாடு’

வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச ‘மக்கா மாநாடு’

by Rizwan Segu Mohideen
August 18, 2023 1:49 pm 0 comment

இரு புனிதத் தலங்களின் பணியாளர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் கண்காணிப்பின் கீழ், இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சின் ஏற்பாட்டில் ‘தொடர்பாடல் – ஒன்றிணைதல்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மக்கா மாநாடு கடந்த 13, 14ஆம் திகதிகளில் மக்காவில் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. உலகெங்கும் இருக்கும் பத்வா மற்றும் மார்க்க விவகார அமைப்புகள் மற்றும் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் தொடர்புகளையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி மாநாட்டில், உலகின் 85 நாடுகளிலிருந்து 150 அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் விதத்தில், மள்வானை பின் பாஸ் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் கலாநிதி அஸ்ஹர் ஹனீபா, பரகஹதெனிய தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீட உப அதிபர் கலாநிதி அம்ஜத் ராஸிக், கிந்தோட்டை அல்பயான் அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஸரூக் ஹஸனீ ஆகிய மூவரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பின்வருவன இம்மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்;

  1. உலகம் எங்கும் உள்ள மார்க்க விவகாரம் மற்றும் மார்க்க தீர்ப்பு வழங்கும் அமைப்புகளுக்கிடையிலான தொடர்புகளைப் பலப்படுத்தல்.
  2. இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் மற்றும் இஸ்லாமிய ஒற்றுமையைப் பலப்படுத்தவும் அவை செய்துள்ள பணிகளைத் தெளிவுபடுத்தல்.
  3.  குர்ஆன், சுன்னாவைப் பற்றிப் பிடிப்பதை வலியுறுத்துவதில் அவற்றின் பங்களிப்பை வெளிக்காட்டுதல்.
  4. நடுநிலை பேணல், பல்லின மக்களுக்கு மத்தியில் சகவாழ்வையும் சகிப்புத்தன்மையையும் விட்டுக் கொடுப்பையும் வளர்த்தல் போன்றவற்றில் மேற்கூறிய அமைப்புக்களின் பங்களிப்பைத் தெளிவுபடுத்தல்.
  5.  தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்தல், இறை மறுப்பிலிருந்து சமூகத்தைப் பாதுகாத்தல் என்பவற்றிற்காக மேற்கூறிய அமைப்புகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை தெரியப்படுத்துதல்.

இரு நாட்களாக நடைபெற்ற மேற்படி மாநாட்டில் ஏழு அமர்வுகளில், ஏழு முக்கிய கருப்பொருட்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.

  1. இஸ்லாமிய விவகார அமைப்புக்கள் மற்றும் அறிஞர்கள், இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் மற்றும் முஸ்லிம் உலக இஸ்லாமிய ஒற்றுமைக்கும் செய்துள்ள சேவைகள்; மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஸாலிஹ் அஸ்ஸுஹைமீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வில் மார்க்க விவகாரங்களுக்கான கௌரவ அமைச்சர் அப்துல் லதீப் அஷ்ஷெய்க் அவர்கள் கலந்துகொண்டதோடு, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் கலாநிதி அஸ்ஹர் ஹனீபா அவர்கள் இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சேவைகள் பற்றி விளக்கமளித்தார்.
  2. அவ்வமைப்புக்கள் மற்றும் அறிஞர்களுக்கிடையிலான தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்பு; சவூதி அரேபிய மூத்த அறிஞர்கள் சங்க உறுப்பினர் ஜிப்ரீல் அல்புஸைலீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் கலாநிதி அம்ஜத் ராஸிக் அவர்கள் மேற்படி அமைப்புக்களுக்கிடையில் சர்வ ஒருமைப்பாடு இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
  3. மேற்கூறிய அமைப்புக்களும் அறிஞர்களும் பல்லின மக்கள் மத்தியில் சகிப்புத்தன்மையையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதில் செய்துள்ள பங்களிப்புக்கள்.
  4.  அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளைப் பற்றிப் பிடித்தல்
  5. அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் அடிப்படையில் நடுநிலை பேணல்.
  6. மேற்கூறிய அமைப்புகள் மற்றும் அறிஞர்கள் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் மேற்கொண்டுள்ள பணிகள்.
  7. கட்டுப்பாடற்ற தன்மை, இறைமறுப்பு என்பவற்றிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதில் அவை செய்துள்ள முயற்சிகள்.

மாநாட்டின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன:

  1. இந்த மாநாட்டை நிகழ்த்த அனுமதி வழங்கிய மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களுக்கும் அவரது இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் அவர்களுக்கும் நன்றி நவிலல்.
  2. இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சேவை செய்வதிலும், இஸ்லாமிய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதிலும் பிளவு மற்றும் பிரிவினைகளை எதிர்ப்பதிலும், நடுநிலை பேணல், பல்லின மக்களுக்கு மத்தியில் சகவாழ்வையும் சகிப்புத்தன்மையையும் விட்டுக் கொடுப்பையும் வளர்த்தல் போன்றவற்றிலும் இஸ்லாமிய விவகார அமைப்புக்கள் மற்றும் அறிஞர்கள் செய்துள்ள பங்களிப்பைப் பாராட்டுதல்.
  3. இஸ்லாமிய ஒருமைப்பாட்டை நிறுவுவதற்கான முதல் அடிப்படை அல்லாஹ்வின் தூதர்கள் போதித்த ‘ஓரிறைக் கோட்பாடே’ என்பதை உறுதிப்படுத்தல்.
  4. மார்க்கத் தீர்ப்புக்கள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தல், நலன்களை ஏற்படுத்தும் விதத்திலும், குழப்பங்களைத் தவிர்க்கும் விதத்திலும் இருக்குமாறு மார்க்க ஆதாரங்கள் அடிப்படையில் பத்வாக்களை நெறிப்படுத்தல்.
  5. நாஸ்திகம், கட்டுப்பாடின்மை போன்றவற்றிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் விதத்தில், இஸ்லாமிய அடிப்படைகளை உறுதிப்படுத்தலும், அவ்வடிப்படைகளில் பிள்ளைகளை வளர்த்தெடுத்தலும், குடும்பக் கட்டமைப்பைப் பாதுகாப்பதும் முக்கியமானவை என்பதை உறுதிப்படுத்தல்.
  6. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் அல்குர்ஆன் பிரதிகளை எதிர்த்தல் போன்ற இஸ்லாமிய எதிர்ப்பு செயற்பாடுகளைக் கண்டித்தல். இவ்வாறான செயற்பாடுகள் மனித பெறுமானங்களோடு முரண்படும் வெறுப்பு, இனவாதம் போன்றவற்றையே வளர்க்கும் என்பதையும் உறுதிப்படுத்தல்.
  7. சவூதி அரேபிய அரசு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் மற்றும் இஸ்லாமிய ஒற்றுமைக்கும் செய்துள்ள சேவைகளைப் பாராட்டுதல்.
  8. மேற்கூறிய அமைப்புக்கள் மற்றும் அறிஞர்கள் மத்தியில் தொடர்பாடலையும், நெருக்கத்தையும் மேலும் பலப்படுத்தல்.
  9. அல்குர்ஆன், ஸுன்னாவைப் பற்றிப்பிடிப்பதே மார்க்கத்தின் அடிப்படை என்பதையும், அதுவே வழிகேட்டிலிருந்து பாதுகாக்கும் என்பதையும் உறுதிப்படுத்தல்.
  10. அழைப்புப் பணியிலும், கற்பித்தலிலும் நடுநிலை பேணுதல், தீவிரவாதத்தைத் தவிர்த்தல் ஆகிய அடிப்படைகளை வலியுறுத்துவது இஸ்லாமிய விவகார அமைப்புக்கள் மற்றும் அறிஞர்களின் பொறுப்பாகும். அதற்காக இமாம்களையும், கதீப்மார்களையும் பயிற்றுவித்தல்.
  11. இஸ்லாத்தைத் தவறாக சித்தரிக்கும் முயற்சிகளுக்கு எதிராக செயற்படல், இஸ்லாத்தின் அன்பு, விட்டுக்கொடுப்பு என்பவற்றைத் தெளிவுபடுத்தல், தீவிரவாத அமைப்புக்களின் வழிகேட்டையும் அவை சமூகத்திற்கு செய்துள்ள அநியாயங்களையும் தெளிவுபடுத்தல்.
  12. இஸ்லாமிய விவகார அமைப்புக்கள் மற்றும் அறிஞர்கள் மத்தியில் தொடர்பாடலையும் ஒன்றிணைப்பையும் ஏற்படுத்துவதற்காக சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைப்பு செய்துள்ள முயற்சிகளைப் பாராட்டுதல்.

அஷ்ஷெய்க் ழபர் அஜ்வாத் ( B.A ) மதனி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT