Sunday, May 12, 2024
Home » 150 மார்க்க அறிஞர்களின் பங்களிப்புடன் சவூதியில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு

150 மார்க்க அறிஞர்களின் பங்களிப்புடன் சவூதியில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு

- இலங்கையில் இருந்து 3 அறிஞர்கள் பங்கேற்பு

by Rizwan Segu Mohideen
August 11, 2023 12:34 pm 0 comment

சவூதி அரேபியா இஸ்லாமிய மத விவகாரங்கள் அமைச்சு “உலக இஸ்லாமிய நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 12,13 ஆம் திகதிகளில் ஒரு இஸ்லாமிய மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இம் மாநாடு மக்கா முக்கர்மாவில் நடைபெற உள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுமார் 85 நாடுகளிலிருந்து 150 மார்க்க அறிஞர்களை சவூதி அரேபியா வரவழைத்துள்ளது. உலகெங்கிலும் இருக்கும் இஸ்லாமிய மார்க்க நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி நடைபெறும் இம்மாநாட்டில் பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இலங்கையில் இருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று மார்க்க அறிஞர்கள் மக்கா சென்றுள்ளார்கள்.

ஓகஸ்ட் 12 13-ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில், உலக இஸ்லாமிய மத நிறுவனங்கள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் வழங்கும் பங்களிப்பு, இந்நிறுவனங்களுக்கு மத்தியில் காணப்படும் தொடர்புகள், விட்டுக் கொடுப்பும் சகவாழ்வும், குர்ஆனையும் ஹதீஸையும் பற்றிப் பிடிப்பதன் அவசியம், தீவிரவாதத்தை களைவதில் இஸ்லாமிய நிறுவனங்களின் பங்களிப்புகள், ஒழுக்க சீர்கேடுகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்தல் போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இம்மா நாட்டை சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் வழிகாட்டலில் சவூதி அரேபிய மத விவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

உலக முஸ்லிம்களின் கல்விக்கும் கலாச்சாரத்திற்கும் உறுதுணையாக திகழும் சவூதி அரேபியாவின் இம்மாநாடு சமகாலத்தில் அவசியமான ஒன்றாகும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை.

தற்காலத்தில் ஏற்படும் நவீன பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் இஸ்லாமிய நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் மார்க்க அறிஞர்களின் பங்களிப்பு பற்றியும் விரிவாக ஆராயப்படவுள்ளது. முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒற்றுமை பேணுதல், இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் விடயத்தில் சவூதி அரேபியாவின் அனுபவங்கள் போன்ற விடயங்களும் இம்மாநாட்டில் ஆராயப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

அஷ்ஷெய்க் பௌஸுல் அலவி(மதனி)
செயலாளர்
தாருல் இமான் நிறுவனம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT