Monday, May 20, 2024
Home » இறையச்சத்தின் மகத்துவம்

இறையச்சத்தின் மகத்துவம்

by sachintha
August 4, 2023 11:49 am 0 comment

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ‘மறுமை நாளில் நல்ல வாட்ட சாட்டமான இளைஞர் ஒருவர் வருவார். (அல்லாஹ்விடத்தில்) அவருக்கு கொசுவுக்கு உள்ள மதிப்பு கூட இருக்காது. (என்று கூறியதோடு) ‘மேலும் மறுமையில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் நாம் அளிக்கமாட்டோம்’ (18:105) என்ற அல் குர்ஆன் வசனத்தையும் ஓதிக்காட்டியுள்ளார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்)

இந்நபிமொழியின் ஊடாக மிகவும் அடிப்படையான ஓர் உண்மை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒருவர் நல்ல உடற்கட்டுடனும் திடகாத்திரத்துடனும் வாட்டசாட்டமாகவும் கம்பீரமான தோற்றத்துடனும் இருக்கலாம். ஆனால் அல்லாஹ்விடத்தில் கண்ணியமும் மதிப்பும் கிடைப்பதற்கு அவை மாத்திரம் போதுமானவை அல்ல. அல்லாஹ்விடத்தில் மதிப்பையும் மாண்பையும் வரையறுக்கின்ற அளவுகோலாக இருப்பவை ஒழுக்கமும் நடத்தையுமாகும். ஈமானும், இறைவழியில் நற்செயலாற்றுதலும் இரு முக்கிய அளவு கோலாக உள்ளது.

அதேநேரம் ‘எவர் மறுமையில் மரியாதையையும் மதிப்பையும் விரும்புகிறாரோ அவர் உலக வனப்புகளையும் ஒப்பனைகளையும் கைவிடட்டும்’ (அல் ஹதீஸ்) என்றும் ‘ஒருவர் அறியாதவராக இருந்தார் என்பதற்காக அவருக்கு அல்லாஹ் கண்ணியம் அளிக்க மாட்டான். ஒருவர் நிதானத்துடனும் சுய உணர்வோடும் சுய கட்டுப்பாட்டோடும் செயல்பட்டார் என்ற காரணத்திற்காக அல்லாஹ் அவரை அவமதிப்புக்கு ஆளாக்க மாட்டான்’ என்றும் (அல் ஹதீஸ்) ‘அடிமைகளும் பணியாளர்களும் தன்னை மதிக்க வேண்டும், கண்ணியப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற நபரை அல்லாஹ் அவமதித்து விடுவான்’ (அல் ஹதீஸ்) என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

‘உண்மையில் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் (தக்வா) கொண்டவர்கள் தாம்’ (49:13) என்று அல் குர்ஆன் சுட்டிக்காட்டி இருப்பதன் ஊடாக இறையச்சத்தின் முக்கியத்துவம் தெளிவாகிறது.

‘மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள். (அவ்வாறு செய்வதால் மட்டுமே நீங்கள் ‘தக்வா’ இறையச்சமுள்ள(முத்தகீ)வர்களாக திகழ முடியும்’. (2:21)

வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் அல்லாஹ்வின் விதிமுறைகளைப் பேணி முழு வாழ்வையும் அவன் விரும்புகின்ற முறையில் அமைத்துக் கொண்டு, வாழ்வின் எந்தத் துறையிலும் அல்லாஹ் விரும்பாத எதுவும் நடைபெற அனுமதிக்கக்கூடாது. மிகுந்த எச்சரிக்கையுடனும் பயபக்தியுடனும் வாழ்க்கையை மேற்கொள்வது இதற்குப் பெயர் தான் ‘தக்வா’ எனும் இறையச்சம். இவ்வாறு வாழ்பவர்கள் யாரோ அவர்கள் தான் இறையச்சம் உடையவர்கள் என்ற உண்மையையே மேற்கூறிய அல்குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன. ஏதேனும் தவறுகள் செய்து விட்டால் பாவமன்னிப்புக் கோரித் திரும்புதல் என்ற பண்பு நம்மிடம் இருந்ததெனில் அந்தப் பாவங்கள் ‘தக்வா’வை சேதப்படுத்தாது.

அதேநேரம் இறையச்சத்தின் முக்கியத்துவம் குறித்து அல் குர்ஆன் பல இடங்களில் எடுத்துக்கூறியுள்ளது. அதாவது

‘இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தீர்களாயின் உங்களுக்கு (சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடிய) ‘உரை கல்லை’ வழங்குவான். மேலும் உங்களுடைய தீமைகளை உங்களை விட்டு நீக்கி விடுவான். மேலும் உங்களை மன்னித்துவிடுவான். அல்லாஹ் மாபெரும் அருளுடையவனாக இருக்கிறான்’ (8:29), ‘யாரேனும் அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் செயல்படுவாரானால் அல்லாஹ் அவருக்(குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்)கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். மேலும் அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான்’ (65:2-3), ‘யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றாரோ அவருடைய விவகாரத்தில் அல்லாஹ் இலகுவை ஏற்படுத்தியிருக்கின்றான்’ (65:5), ‘மறுமையோ உம் அதிபதியிடத்தில் இறையச்சம் ‘தக்வா’ உடையவர்களுக்கே உரியதாகும்’ (43:35).

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT