உடல் எடை அதிகரிக்க வழிகோலும் காரணிகள் | தினகரன்


உடல் எடை அதிகரிக்க வழிகோலும் காரணிகள்

உப்பு அதிகம் உள்ள உணவு வகைகள் உடல் எடையை அதிகரிக்கும். இந்த தகவல் பலரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கலாம். ஆனால் அது தான் உண்மை என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  

அதாவது அதிகப்படியான சோடியம், உடலின் நீர்ச்சத்தைத் தேக்கி வைத்து, உடல் எடையை அதிகரித்துக் காட்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டாலும், நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடாவிட்டாலும் வயிறு கனத்து உப்புசமும் மலச்சிக்கலும் ஏற்படும். குடலைச் சுத்தப்படுத்தி, கழிவுகளை அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவும். அதனால் அன்றாட உணவில் முழு தானியங்கள், நார்ச்சத்துள்ள பழங்கள், மரக்கறிகள் என்பன அவசியம் இடம்பெற வேண்டும்.  

ஆனால் அரிசி, கிழங்கு வகை போன்ற மாப்பொருள் அதிகமுள்ள உணவு வகைகள் ஆற்றலுடன், நீர்ச்சத்தையும் உடலில் சேமித்து வைக்கக் கூடியவை என்பதை மறந்துவிட முடியாது. இவ்வாறு சேமித்து வைக்கப்படுபவை தான் கார்போஹைட்ரேட் ‘கிளைகோஜன்’ ஆகும். அதாவது ஒவ்வொரு கிராம் கார்போஹைட்ரேட்டுடன் 3கிராம் நீர்ச்சத்தும் சேமித்து வைக்கப்படும். இதுவும் உடல் எடையை அதிகரித்துக் காட்டும். ஒவ்வொரு முறையும் ஒரே நேரத்தில் எடையைச் சரிபார்க்க வேண்டும். காலை முதல் இரவு வரை எடையில் மாறுதல்கள் காணப்படும். அத்தோடு ஹோர்மோன்களும் உணவு வகைகளும் கூட எடையை பாதிக்கலாம்.  

அதேநேரம் மனநல பிரச்சினைகள், குழந்தையின்மை போன்றவற்றுக்கு பாவிக்கும் மருந்துகளும் கூட உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கலாம். கடுமையான ஒவ்வாமை காரணமாக வயிற்று உப்புசமும், கனத்த உணர்வும் ஏற்படும். இதன் விளைவாகவும் உடல் எடை அதிகரிக்கலாம்.  

ஆனாலும் மதுப்பழக்கம் காணப்படின் கொழுப்பு உடைகின்ற செயல்பாடு சீராக இடம்பெறாது. சிந்தனை மாறும். அதனால் ஹோர்மோன் கோளாறு உள்ளவர்கள் மது பழக்கத்தை தவிர்ப்பது மிகவும் அவசியம். உடலில் சேரும் நச்சு பொருட்களாலும், அதிகப் படியான இரசாயனங்களாலும் எடை கூடலாம். இதற்கு பிளாஸ்ரிக்கில் உள்ள பிஸ்பெனல் ‘ஏ’ ஓர் உதாரணம். டெஸ்ட்டோஸ்டீரான், இன்சுலின், தைரொய்ட் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன்களின் செயல்பாடுகளை இது பாதிக்கும். மரக்கறிகள், பழங்கள், மசாலா பொருட்கள், நிறத்துக்காக உணவில் சேர்க்கப்படும் பொருட்கள் போன்றவற்றிலும் இரசாயனங்கள் இருக்கின்றன. இவற்றின் பயன்பாடு ஹோர்மோன்களின் இயக்கத்தை பாதித்து, எடையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.  

ஆனால் தடையில்லாத, ஆழ்ந்த உறக்கம் எடையைக் குறைக்க பெரிதும் உதவும். அப்படிப்பட்ட தூக்கம், உடலையும் மனதையும் சீரமைக்கும். குருதியில் குளுக்கோஸின் அளவைச் சமநிலையில் பேணும். குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, உடல் எடை அதிகரிக்காது காக்கும். சிறந்த தூக்கத்துக்குக் காரணமான மெலட்டோனின் ஹோர்மோன் சுரப்பு அதிகரிப்பதற்கு கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி என்பவற்றின் பாவனையையும் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக படுக்கை அறையில் வெளிச்சம் ஊடுருவுவதைத் தவிர்க்க அடர்நிற திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.  

இவ்வாறான ஏற்பாடுகளின் ஊடாக உடல் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். 


Add new comment

Or log in with...