கணினி பாவனையால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள் | தினகரன்


கணினி பாவனையால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் கணினியை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் கண்கள் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து 'கம்பியூட்டர் விஷன் சின்ட்ரோம்' என அழைக்கப்படுகின்றது. இந்தப் பாதிப்பு உள்ளவர்களிடம் முக்கியமாகப் பின்வரும் அறிகுறிகள் காணப்படும். குறிப்பாக கண் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், பார்வை கோளாறு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி ஆகியனவை சுட்டிக்காட்டத்தக்கவையாகும்.  

பொதுவாக இப்பிரச்சினைக்கு தினமும் 3 -- 4மணி நேரத்திற்கு மேல் கணினியை உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு இப்பாதிப்பு ஏற்படலாம். இவ்வாறு கணினியினால் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவற்றில் கம்பியூட்டர் மற்றும் அருகில் உள்ள விளக்குகளில் இருந்து ஏற்படும் ஒளி சிதறல்கள் முக்கியமானவை . அத்தோடு கண் சிமிட்டாமல் கணினி திரையைப் பார்த்தல், கண் பார்வைக் கோளாறு உள்ளவர்கள் அதற்குரிய சரியான கண்ணாடி அணியாமல் வேலை செய்தல் போன்றனவும் காரணமாக அமைகின்றன.  

அதன் காரணத்தினால் கணினி திரையானது கண்களில் இருந்து 25அங்குலத்திற்கு மேலான தொலைவில் இருக்க வேண்டும். கணினி திரை கண்களின் மட்டத்தில் இருந்து 6அங்குலங்கள் பதிவாக இருக்க வேண்டும். 

அதேநேரம் கணினியில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் 20நிமிடத்திற்கு ஒரு தடவை 20வினாடிகளுக்கு, 20அடிக்கு மேலான தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். தொலைவில் பார்ப்பது கண்களுக்கு ஓய்வு தரும்.

அருகாமையில் உள்ளவற்றைப் பார்ப்பது கண்களுக்கு அதிக வேலை கொடுப்பதற்கு சமமாகும். 

அதனால் கணினிகளை பாவிக்கும் போது மின் விளக்குகள் மற்றும் ஜன்னல்கள் கண்களுக்கு எதிராக இருப்பதை தவிர்க்க வேண்டும். அத்தோடு குளிரூட்டியின் காற்று நேராக முகத்தில் அல்லது கண்களில் படும் படியாக அமரவும் கூடாது. 

என்றாலும் கணினியில் பணியாற்றும் போது கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இதன் ஊடாக கண்கள் உலர்ந்து போவதை தவிர்த்துக் கொள்ள முடியும். இருக்கைகளும் பின்னால் சாய்ந்து அமர வசதியாக இருக்க வேண்டும். பாதங்கள் தரையில் படும் படியாக இருக்க வேண்டும்.  எல்லோருக்கும் பொருந்தக்கூடிய கணினிக் கண்ணாடி என்று எதுவும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் இயற்கையாக ஏதாவது பார்வை கோளாறு உள்ளதா? என்பதைக் கண்டறிந்து அவரவர் தேவைக்கு ஏற்பவும், வயதிற்கு ஏற்பவும் கண்ணாடிகளை அணிந்து கொள்ள வேண்டும்.

கண்ணில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் உலந்து இருப்பது போல் உணருதல் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் தகுதி வாய்ந்த கண் மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோனை பெற்றுக்கொள்ளத் தவறக்கூடாது.  

கணினியைப் பாவிப்பதன் மூலம் சில பாதிப்புகளுக்கு உள்ளாகவே நேரிடும். அதற்காகக் கணினிப் பாவனையைத் தவிர்த்துக் கொள்வது மிகவும் கடினமானதாகும்.

ஆனால் கணினி பாவனையால் ஏற்படக்கூடிய கம்பியூட்டர் விஷன் சிண்ட்ரோம் பாதிப்பை நிச்சயம் தவிர்த்துக் கொள்ளலாம். ஆகவே கணினிகளை கவனமாப் பாவித்து கண்களைப் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும்.  

 


Add new comment

Or log in with...