பிச்சமூர்த்தியின் 'மன நிழல்' மீண்டும் வெளியீடு | தினகரன்

பிச்சமூர்த்தியின் 'மன நிழல்' மீண்டும் வெளியீடு

தமிழகத்தின் பன்முக எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தியை அகற்றி விட்டு  நவீன தமிழ் இலக்கியம் பற்றி எழுதிவிட முடியாது. புதுக்கவிதையின் நதிமூலம் ந.பிச்சமூர்த்திதான் .

தமிழில் வெளிவந்த  முதல் புதுக்கவிதைத் தொகுப்பு அவருடையது.  புதுக்கவிதை என்கிற கவிதை பாணியை தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்கள் ந.பிச்சமூர்த்தியும், கு.ப.ராஜகோபாலனும் தான்.

புதுக்கவிதையின் நதிமூலம் என்று ந.பிச்சமூர்த்தியை குறுக்கி விட முடியாது. அகவை 70-ஐக்  கடந்து அவர் மறையும் காலம் வரை புதுக்கவிதையை அடுத்தடுத்த கட்டத்துக்கு ஏற்றதாகப் பக்குவப்படுத்தும் படைப்புகளை அவர் படைத்துக்கொண்டிருந்தார்.  புதுக்கவிதையுடன் நின்று விடாமல் சிறு கதைகளிலும் தடம் பதித்தவர் அவர். சிறுகதைகளிலும் பல புதிய உத்திகளைக் கையாண்ட பெருமைக்குரியவர். புதுக்கவிதை, சிறுகதை என்று  நின்றுவிடாமல் கட்டுரை இலக்கியத்திலும் புதிய ஒளி பாய்ச்சிய பெருமை  அவருக்குண்டு.

தமிழகத்தின் மணிக்கொடி, கலா மோகினி, கிராம ஊழியன், சிவாஜி உள்ளிட்ட இதழ்களில் ந.பிச்சமூர்த்தி பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். "தினமணி'யில்  வ.ராமசாமி ஐயங்கார் நடைச் சித்திரங்கள் என்று ஒரு வித்தியாசமான தமிழ் உரைநடை உத்தியை அறிமுகப்படுத்தினார் என்றால் ந.பிச்சமூர்த்தி அதை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்று புது மெருகேற்றினார்.

ந.பிச்சமூர்த்தி "மன நிழல்' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தார். கட்டுரையின் அடிப்படை இலக்கணத்தில் அமைந்திருந்தாலும், ஒரு புதுமைப் பாங்கை  அவற்றில் காண முடிகிறது. மன   ஓட்டங்களையும் இயற்கை வர்ணனைகளையும் தத்துவ நோக்கையும் கதை அம்சத்தையும்  ஒன்று கலந்து புதியதொரு பாணிக்கு "மன நிழல்' வழிகோலுகிறது.

ந.பிச்சமூர்த்தி தான் வாழ்ந்தபோதே அந்தக் கட்டுரைகளின் தொகுப்பை  வெளியிட வேண்டும் என்று விரும்பினார்.

ஆனால் நிறைவேறவில்லை.  அவர் டிசம்பர் 1976-இல் மறைந்த சில மாதங்களில்  "மன நிழல்' கட்டுரைத் தொகுப்பின் முதல் பதிப்பு 1977-ஆம் ஆண்டு வெளிவந்தது.

நினைவுப் பதிப்பாக  "மன நிழல்' மீண்டும்  வெளியிடப்பட்டிருக்கிறது. 32கட்டுரைகளை உள்ளடக்கிய "மன நிழல்'  தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ளோர் படிக்க வேண்டிய குறிப்பிடத்தக்க புத்தகங்களில் ஒன்று.

சிரேஷ்ட தமிழக எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மூத்த படைப்பாளி பிச்சமூர்த்தி பற்றி குறிப்பிடுகையில்:  1936முதலே நான் பிச்சமூர்த்தியின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன்.

மணிக்கொடி பத்திரிகையில் வெளிவந்திருந்த அவருடைய சிறுகதைகளும் வசன கவிதைகளும் என்னை வசீகரித்திருந்தன. 1937இல் தினமணி ஆண்டு மலரில் வெளிவந்த  கிளிக்கூண்டு என்ற வசன கவிதை என்னில் தாக்கம் ஏற்படுத்தியது. நானும் கவிதை எழுதவேண்டும் என்ற உந்துதலை அது என்னுள் தந்தது.

ஆகவே பிச்சமூர்த்தியின் அறிமுகமும் அவருடன் பேசிப்பழகும் வாய்ப்பும் கிட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

நீண்ட முடியும் தாடியுமாக அவர் ஒரு ரிஷி போல் காட்சியளித்தார். அவருடைய முகத்தோற்றம் கவி தாகூரின் சாயலைக் கொண்டிருந்தது. அவர் என்னிடம் சகஜமாகப் பழகினார். வயது வித்தியாசத்தைக் கருதாது அவர் ஒரு நண்பனாகவே நடந்து கொண்டார். ந. பிச்சமூர்த்தி கிராம ஊழியன் இதழுக்குத் தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகள் எழுதி உதவினார். மனநிழல்' என்கிற புதுரகமான- கதையும் அல்லாத கட்டுரையுமில்லாத, ஆயினும் இரண்டின் தன்மைகளையும் கொண்டிருந்த வாழ்க்கைச் சித்திரங்களை எழுதினார். (ஸ)


Add new comment

Or log in with...