வடகொரியா புதிய ஆயுத சோதனை | தினகரன்

வடகொரியா புதிய ஆயுத சோதனை

சக்திவாய்ந்த போர் ஆயுதத்துடன் புதிய ஆயுதம் ஒன்று சோதிக்கப்பட்டதாக வட கொரியா அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையிலான சந்திப்பு உடன்பாடு இன்றி முடிவுற்ற நிலையிலேயே வட கொரியா புதிய ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான விபரங்களை அரச ஊடகம் வெளியிட்டபோதும், அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலான நீண்ட தூர ஏவுகணை சோதனையை திரும்ப கொண்டுவருவதாக இது அமைய வாய்ப்பு இல்லை என்று நிறுபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக பார்க்கப்பட்ட இதேபோன்ற சோதனை ஒன்று கடந்த நவம்பரிலும் இடம்பெற்றது.

கடைசியாக இடம்பெற்ற உச்சிமாநாட்டை அடுத்து அணு ஆயுத பேச்சுவார்த்தையில் மிகக் குறைந்த அளவு முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரியில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜொங் உன் சந்தித்து அணு ஆயுதக் களைவு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும் அந்தப் பேச்சுவார்த்தை முறிந்ததோடு இரு தலைவர்களும் சடுதியாக பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டனர். பேச்சுவார்த்தையை தொடர, டிரம்ப் சரியான நடத்தையை வெளிப்படுத்த வேண்டும் என்று கிம் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய ஆயுத சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாக வட கொரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு இலக்குகள் மீது பல வடிவங்களில் தாக்குதல் நடத்தி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது. எனினும் இது பற்றி தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை.


Add new comment

Or log in with...