மன்னார் மனித புதைகுழி விவகாரம்; 14ஆம் திகதி அறிக்கை வௌியாகும் | தினகரன்


மன்னார் மனித புதைகுழி விவகாரம்; 14ஆம் திகதி அறிக்கை வௌியாகும்

மன்னார் மனித புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இதன் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரே  வெளிவரும் என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார். 

மன்னார் மனித புதைகுழியில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டு அமெரிக்காவிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு மாதிரிகளின் ஆய்வு அறிக்கை தொடர்பாக அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

மனித எலும்புக் கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு 6பொதிகள் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு மறு நாள் 24ஆம் திகதி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு 25ஆம் திகதி புளோரிடாவிலுள்ள ஆய்வு கூடத்திற்கு கார்பன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டது. 

அவர்கள் வழங்கிய கால அவகாசத்திற்கு அமைய எதிர்வரும் 14ஆம் திகதி அல்லது அதற்கு பின்னரே ஆய்வு அறிக்கை கிடைக்கும். 

குறித்த அறிக்கை 14ஆம் திகதிக்கு பின்னர் மன்னார் நீதிமன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு,அதன் பிரதிகள் எங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்திருந்தார். 

தபால் மூலமாக நீதி மன்றத்திற்கு அனுப்பி வைத்தால் 14ஆம் திகதிக்கு பின் ஒரு சில தினங்களில் அறிக்கை கிடைக்கும். குறித்த அறிக்கையினை தனக்கு அனுப்பி வைக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ கோரியிருந்தார்.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக சென்ற சட்டத்தரணிகளான நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தோம். 

அறிக்கை நீதிமன்றத்திற்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கோரியிருந்தோம். 

அதற்கு அமைவாக மன்னார் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு,அதன் பிரதிகள் எமக்கும் அனுப்பி வைக்கப்படும். 

குறித்த ஆய்வு அறிக்கையின் பின்னரே மன்னார் மனித புதை குழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் தொடர்பான உண்மை விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக வாதிடும் சட்டத்தரணி வி.ஸ்.நிரைஞ்சன் மேலும் தெரிவித்தார்.   

மன்னார் குறூப், தலைமன்னார் நிருபர்கள்  


Add new comment

Or log in with...