மாலைதீவு சிறையிலுள்ள இளைஞரை விடுவிக்க நடவடிக்கை | தினகரன்

மாலைதீவு சிறையிலுள்ள இளைஞரை விடுவிக்க நடவடிக்கை

மாலைதீவு சிறையிலுள்ள லஹிரு மதுஷான் என்ற சிங்கள இளைஞரை விடுதலை செய்ய, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

மாலை தீவின் புதிய ஜனாதிபதி இப்றாஹீம் மொஹமட் சாலிஹ்வின் பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக (16) வெள்ளிக்கிழமை மாலைதீவுக்குச் சென்றவேளையிலே அமைச்சர் இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான லஹிரு மதுஷான் (27 வயது) எனும் இவ் விளைஞர், மாலைதீவிலுள்ள மாபுசி சிறைச்சாலையில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல், சுமார் மூன்று வருட காலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமீன் அப்துல் கையூமை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று வருடகாலத்திற்குள் சிறையில் எதுவித பிணையோ அல்லது அவகாசங்களோ வழங்கப்படாத நிலையில் லஹிரு மதுஷான் மாலைதீவில் சிறைவாசம் அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மாலைதீவு சென்றுள்ள அமைச்சர் இவரை விடுதலை செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் அவசரமாக இறங்கியுள்ளார். இது தொடர்பில் புதிதாகப் பதவியேற்ற மாலைதீவு ஜனாதிபதி இப்றாஹீம் மொஹமட் சொலிஹ்வுடனும், முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத்துடனும் அமைச்சர் மாலை தீவில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அமைச்சர் சிறைச்சாலைக்குச் சென்று லஹிரு மதுஷானை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவரை மிக அவசரமாக விடுதலை செய்வதற்கான ஒழுங்குகளைச் செய்வதாகவும் இதன்போது உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி இன, மத, மொழி பேதங்களின்றி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டு வருவதையிட்டு தான் இச்சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். வெள்ளிக்கிழமையன்று மாலை தீவு சென்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா திங்களன்று நாடு திரும்பினார்.


Add new comment

Or log in with...