Friday, April 26, 2024
Home » மழைக் காலத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

மழைக் காலத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

- கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவல் அதிகரிப்பு

by Rizwan Segu Mohideen
December 6, 2023 1:48 pm 0 comment

– அரச நிறுவனங்கள், படகு துறைகள், பாடசாலைகள் போன்ற பொது இடங்களில் குடம்பிகள் பெருக்கம்

மழைக் காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையை கருத்தில் கொண்டு அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவுடன், சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நோய்ப் பரவல் அதிகரித்து வருவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டதோடு, அரச நிறுவனங்கள், படகு துறைகள், பாடசாலைகள் போன்ற பொது இடங்களில் குடம்பிகள் பெருக்கம் அதிகரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த முப்படையினரின் உதவியுடன் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சாகல ரத்நாயக்க பொலிசாருக்கு அறிவிறுத்தினார்.

நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான விரைவான நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க நிறுவனங்களை அறிவுறுத்தும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து அறிவிப்பொன்றை விடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல் பொலிஸார் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன இணைத்து இது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதற்கான விரைவான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் சாகல ரத்நாயக்க அறிவுறுத்தினார்.

இந்தச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்கான திங்கட்கிழமையன்று டெங்கு ஒழிப்பு பிரிவை மீண்டும் கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணதர்ன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டவர்களும் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, கொழும்பு மாநகர சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT