உ.பியில் ரயில் தடம் புரண்டு 7 பேர் பலி; பலர் காயம் | தினகரன்

உ.பியில் ரயில் தடம் புரண்டு 7 பேர் பலி; பலர் காயம்

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே டெல்லி நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மேற்குவங்க மாநிலம் மொல்டாவில் இருந்து டெல்லி நோக்கி நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் ஹர்சந்த்பூர் ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது நேற்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில் 6 பெட்டிகள் அடுத்தடுத்து தடம் புரண்டு கவிழ்ந்தன. இதனால் அந்தப் பெட்டிகளில் இருந்த பயணிகள் உருண்டு விழுந்தனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். லக்னோ, வாரணாசியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் அங்கு விரைந்தனர்.

அதிகாலை நேரம் என்பதால் பலர் தூக்கத்தில் இருந்துள்ளனர். விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 25 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தர்வர்கள் ரேபரேலி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் பலரது நிலைமை கவலைககிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Add new comment

Or log in with...