கதிர்காமம் - கிரிவெஹர விகாராதிபதி மீது துப்பாக்கிச்சூடு | தினகரன்

கதிர்காமம் - கிரிவெஹர விகாராதிபதி மீது துப்பாக்கிச்சூடு

 

  • கொழும்பு வைத்தியசாலைக்கு ஹெலிகொப்டரில் அனுப்பி வைப்பு
  • ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் தனியார் மருத்துவமனையில் அனுமதி
  • கதிர்காமம், மஹசென் தேவாலய உரித்து தொடர்பில் பிரச்சினை

கதிர்காமம், கிரிவெஹர ரஜமஹா விகாரையின், விகாராதிபதி, வணக்கத்திற்குரிய கொபவக தம்மிந்த தேரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (12) இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மற்றுமொரு தேரரும் காயமடைந்துள்ளார். பலத்த காயங்களுக்குள்ளான குறித்த இருவரும், தெபருவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

விகாராதிபதியின் வயிற்றுப் பகுதியில் பல முறை துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் தனுஷ்க பெரேரா தெரிவித்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஜனாதிபதியின் பணிப்பின் கீழ், மேலதிக சிகிச்சைக்காக ஹெலிகொப்டர் மூலம் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று (12) இரவு விகாராதிபதி கொபவக தம்மிந்த தேரரும் விகாரையிலுள்ள மற்றுமொரு தேரரான, வீதாபொல சோபித தேரரும், விகாரையின் மேல் மாடியில், சமய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் இருவர் மீதும் துப்பாக்கிச்சூட்டு நடாத்தப்பட்டுள்ளது.

கீழ் மாடியில் ஒளித்திருந்த அடையாளம் காணப்படாத மூவரால், இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதோடு, சந்தேகநபர்கள் பயன்படுத்திய, அதி சொகுசு ஜீப் வண்டி, கிரிவெஹர விகாரையின் அருகில் விட்டுச் சென்ற நிலையில் கண்டுபிடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் உள்ளிட்ட ஏனையோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு 08 பொலிஸ் குழுக்களால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம், மஹசென் ஆலயத்தின் உரிமை தொடர்பிலான பிரச்சினையின் அடிப்படையிலேயே குறித்த கொலை முயற்சி இடம்பெற்றுள்ளதாக, பொலிசார் இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

மஹசென் ஆலயத்தின் பிரதான ஆலய குருவான, மஹேஷ் பண்டார மற்றும் அவரது குடும்பத்தினராலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என, கதிர்காமம், கிரிவெஹர ரஜமஹா விகாரையின் தேரர்களில் ஒருவரான, தலகல ஞாநேந்திர தேரர் சாட்சியமளித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...