Sunday, May 5, 2024
Home » காசா மருத்துவமனைகளை முற்றுகையிட்டு இஸ்ரேலிய இராணுவம் பயங்கரத் தாக்குதல்

காசா மருத்துவமனைகளை முற்றுகையிட்டு இஸ்ரேலிய இராணுவம் பயங்கரத் தாக்குதல்

பல்லாயிரம் பேர் உயிராபத்தில்: தெற்கை நோக்கி மக்கள் ஓட்டம்

by damith
November 13, 2023 6:00 am 0 comment

இஸ்ரேலிய படை மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே மோதல் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் உயிரச்சுறுத்தலுடன் காசா மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். போர் நிறுத்தப்படாத பட்சத்தில் மருத்துவ வசதிகள் முடங்கிய நோயாளிகள் உயிரிழக்கக் கூடும் என்று மருத்துவ மற்றும் உதவிப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் காசா நகரில் திப்பிழம்புகள் வெளியாவது மற்றும் அந்த நகர் எங்கும் வெடிப்புச் சத்தங்கள் எதிரொலிப்பது ஏ.எப்.பி தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் காட்சிகளில் தெரிகின்றன. இந்நிலையில் அங்கு தரைவழி மோதல் மருத்துவமனைகளை சூழவிருக்கும் பகுதிகளுக்கு பரவியுள்ளன.

“போர் நிறுத்தம் அல்லது குறைந்தபட்சம் நோயாளிகளை மருத்துவ ரீதியில் அப்புறப்படுத்தி இந்த இரத்த வெள்ளத்தை உடன் நிறுத்தாவிட்டால் இந்த மருத்துவமனைகள் பிணவறையாக மாறிவிடும்” என்று மருத்துவ உதவி அமைப்பான எல்லைகளற்ற மருத்துவக் குழு நேற்று (13) எச்சரித்தது.

காசா நகரில் இருக்கும் அந்த முற்றுகைப் பகுதிக்கான மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனை சுற்றிவளைக்கப்பட்டிருப்பதோடு அந்த மருத்துவமனைக்கு அருகில் குண்டுகள் வீசப்பட்டு வருவதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் முஹமது அபூ சல்மியா குறிப்பிட்டுள்ளார்.

“மருத்துவக் குழுவால் வேலை செய்ய முடியாதிருப்பதோடு அங்கிருக்கும் டஜன் கணக்கான உடல்களை நிர்வகிக்கவோ அல்லது அடக்கம் செய்யவோ முடியாதுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனைக்குள் இருக்கும் எல்லைகளற்ற மருத்துவக் குழுவவைச் சேர்ந்த அறுவைச் சிகிச்சை நிபுணரான முஹமது உபைத் கூறியதாவது, “சத்திரசிகிச்சைக்குப் பின்னரான சுமார் 600 நோயாளர்கள், 37-40 குழந்தைகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் 17 பேருக்கு நீர், மின்சாரம், உணவு அல்லது இணையதன வசதிகள் இல்லை” என்றார். தவிர மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானவர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அடைகாப்பு கருவியில் பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தது இரு சிசுக்கள் உயிரிந்ததோடு செயற்கை சுவாசக்கருவி நிறுத்தபட்டதால் ஆடவர் ஒருவரும் உயிரிழந்ததாக மருத்துவர் ஒருவர் சனிக்கிழமை வெளியிட்ட ஓடியோ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மருத்துவமனையை சூழ புகையை எம்மால் பார்க்க முடிகிறது. மருத்துவமனையை சூழவிருக்கும் அனைத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்துவதோடு மருத்துவமனை மீதும் பல தடவைகள் தாக்குதல் நடத்தினர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனைக்குள் நான்கு நோயாளர்கள் மீது ஸ்னைப்பர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கும் அந்த மருத்துவர், அதில் ஒருவரின் கழுத்துக்கும் மற்றவர்களின் வயிற்றுப் பகுதிக்கு தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக அவர் கூறினார்.

பாதுகாப்புத் தேடி காசாவில் மேலும் தெற்காக செல்ல முயல்பவர்களும் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பெரும் கவலை

அல் ஷிபா மருத்துவமனையின் நிலை குறித்து ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு பெரும் கவலையை வெளியிட்டுள்ளது.

“சுகாதார ஊழியர்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான நோயுற்ற மற்றும் காயமடைந்த நோயாளர்கள் மற்றும் மருத்துவமனைக்குள் தொடர்ந்தும் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு பெரும் கவலை அடைந்துள்ளது” என்று அந்த அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரொஸ் அதனொம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.

அல் ஷிபா மருத்துவமனை மீதான முற்றுகை மற்றும் தாக்குதல்களை மறுக்கும் இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் மருத்துவ வசதிகளை கட்டளையகங்களாகவும் மறைந்திருப்பதற்கான பகுதிகளாகவும் பயன்படுத்துவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளை ஹமாஸ் மறுத்துள்ளது. மருத்துவமனைகளின் குழந்தைகள் பிரிவில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. காசாவில் இருக்கும் 36 மருத்துவமனைகளில் இருபது மருத்துவமனைகள் இயங்கவில்லை என்று ஐ.நா மனிதாபிமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசா நகரில் இருக்கும் மற்றொரு மருத்துவமனையான அல் குத்ஸ் மருத்துவமனையில் உள்ள மக்களை பாதுகாக்க ‘அவசமாக மற்றும் உடனடியாக’ தலையிடுவதற்கு சர்வதேச சமூகம் மற்றும் மனிதாபிமான அமைப்புகளிடம் பலஸ்தீன செம்பிறை சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அருகில் இடம்பெறும் பீரங்கிக் குண்டு தாக்குதல்கள் மருத்துவமனையை அதிரச் செய்வதாக செம்பிறை சங்கம் கடந்த சனிக்கிழமை (11) கூறியிருந்தது. இந்த மருத்துவமனையில் சுமார் 500 நோயாளர்கள் மற்றும் 14,000க்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் இருக்கும் நிலையில் மருத்துவமனை மீது தீவிர துப்பாக்கிச் சூடுகளும் இடம்பெற்று வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

தாய்ப்பாலுக்கு மாற்றானவை போதிய அளவில் இல்லாததால் சிசுக்கள் நீரிழப்பை எதிர்கொள்ளும் நிலைக்கு முகம்கொடுத்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் இருக்கும் மற்றொரு மருத்துவமனையான இந்தோனேசிய மருத்துவமனையும் இந்த உக்கிர மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. போதுமான எரிபொருள் இல்லாததால் அங்குள்ள உப்பு நீக்கி ஆலை, மருத்துவ ஸ்கேனர்கள் மற்றும் மின்தூக்கிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் அலெப் அல் காலொட் தெரிவித்துள்ளார்.

“இந்த மருத்துவமனையின் 30-40 வீத செயற்பாடுகளே தற்போது இயங்கி வருகின்றன” என்று அல் காலொட் தெரிவித்துள்ளார்.

தொடரும் பேரணிகள்

ஹமாஸ் போராளிகள் கடந்த ஒக்டோபர் 7 ஆம் தகிதி இஸ்ரேலுக்கு ஊடுருவி நடத்திய தாக்குதலில் சுமார் 1200 பேர் கொல்லப்பட்டதோடு சுமார் 240 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர் என்று இஸ்ரேல் அண்மையில் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸை ஒழிப்பதாகக் கூறி இஸ்ரேல் ஆரம்பித்த இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 11,000 ஐ தாண்டி இருப்பதோடு பெரும்பாலும் பொதுமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சிறுவர்களே கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவில் மருத்துவ சேவைகள் முடங்கிய நிலையில் கடந்த இரு தினங்களாக அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை பற்றி புதிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை டெல் அவிவில் தமது வேதனையை வெளியிடும் வகையில் பேரணி ஒன்றை நடத்தி இருந்தனர்.

“ஏற்கனவே 35 நாட்களாக எம்முடன் இல்லாத காசாவில் கடத்தப்பட்ட எனது பெற்றோருக்காக குரல் எழுப்பவே நான் இங்கு வந்தேன். அவர்களின் நிலைமை என்னவென்று எமக்குத் தெரியவில்லை என்பதோடு அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்” என்று தெற்கு இஸ்ரேலில் வைத்து தமது பெற்றோர்கள் இருவரும் கடத்தப்பட்டிருக்கும் நிலையில் யயிர் மோசஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு காசாவுக்குள் தரைவழி மோதல்கள் தீவிரமடைந்ததை அடுத்து தெற்கு காசாவை நோக்கி மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

இஸ்ரேல் இராணுவம் முன்னெடுத்து வரும் வெளியேற்ற நடவடிக்கை மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்காக பலஸ்தீனர்கள் தெற்கை நோக்கி வெளியேறி வருவதாக ஐ.நா மனிதாபிமான விவராக அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களில் மோதல் கடுமையாக உள்ள வடக்கு காசா பகுதியில் இருந்து தெற்கை நோக்கி சுமார் 200,000 பலஸ்தீனர்கள் வெளியேறி இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமை கூறியிருந்தது.

எவ்வாறாயினும் காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரபாவிலும் கட்டடங்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இங்கு ஏற்கனவே வடக்கில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் அடைக்கலம் பெற்று அதிக சனநெரிசல் மிக்க பகுதியாக மாறியுள்ளது.

“அவர்கள் எம்மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்துவதோடு இவர்கள் அப்பாவி பொதுமக்கள்” என்று தாக்குதலில் அழிக்கப்பட்ட கட்டடத்தின் இடிபாடு ஒன்றுக்கு அருகில் இருந்து ஹார்ப் பொஜு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் கிட்டத்தட்ட 1.6 மில்லியன் மக்கள் காசாவுக்குள்ளேயே இடம்பெயர்ந்திருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது காசா மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்காகும்.

போர் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றைக் கோரி உலகெங்கும் தொடர்ந்தும் பலஸ்தீன ஆதரவு பேரணிகள் இடம்பெற்று வருகின்றன.

லண்டனில் நேற்று இடம்பெற்ற பேரணியில் சுமார் 300,000 பேர் வரை பங்கேற்றிருந்ததாக பொலிஸார் கணித்துள்ளனர். ‘காசாவில் குண்டு வீச்சை நிறுத்து’, ‘போர் நிறுத்தம் வேண்டும்’ மற்றும் ‘பலஸ்தீன விடுதலை’ போன்ற பாதகைகளை இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் ஏந்தி இருந்தனர்.

பிராந்திய பதற்றம்

இந்த மோதல் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதோடு அது அண்டை நாடுகளுக்கு பரவும் அச்சம் அதிகரித்துள்ளது.

கோலன் குன்றை இலக்கு வைத்து எல்லை கடந்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக சிரியாவுக்குள் ‘பயங்கரவாத கட்டமைப்பை’ இலக்குவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது.

லெபனான் முன்னரங்களில் தொடர்ந்தும் பரஸ்பர தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

சவூதி தலைநகர் ரியாதில் இடம்பெற்ற அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் மாநாட்டில் பேசிய ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இஸ்ரேலிய இராணுவத்தை ‘ஒரு தீவிரவாத அமைப்பாக முஸ்லிம் நாடுகள் அறிவிக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார்.

இந்த மாநாட்டில் காசா மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் கூறும் தற்பாதுகாப்பு என்ற நியாயம் நிராகரிக்கப்பட்டதோடு காசாவில் இராணுவ நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கும்படி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போர் ஒன்றை ஆரம்பித்தால் அது காசாவை போன்று லெபனானிலும் பரந்த அளவு அழிவை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யொவான் கல்லன் சனிக்கிழமை எச்சரித்திருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT