Friday, April 26, 2024
Home » காசா மருத்துவமனைகளின் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல்

காசா மருத்துவமனைகளின் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல்

போர் குறித்து ஈரான் எச்சரிக்கை: மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரிப்பு

by gayan
November 11, 2023 6:34 am 0 comment

இஸ்ரேலின் காசா மீதான போரில் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பாதிப்பு தவிர்க்க முடியாத வகையில் இந்த மோதலின் விரிவாக்கத்திற்கு காரணமாகும் என்று ஈரான் எச்சரித்திருப்பதோடு காசாவில் உள்ள மருத்துவமனைகள் அல்லது அதற்கு அருகில் இஸ்ரேல் வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொஸைன் ஆமிர் அப்துல்லாஹியான் வெளியிட்டிருக்கும் கருத்து பிராந்தியத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் பிராந்தியத்தில் பரவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா மத்தியதரைக் கடலின் கிழக்கில் விமானதாங்கிக் கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்தி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

“காசாவின் சாதாரண பொதுமக்களுக்கு எதிரான போரின் தீவிரம் அதிகரிப்பதால், போரின் எல்லை விரிவடைவது தவிர்க்க முடியாதது” என்று கட்டார் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் கடந்த வியாழக்கிழமை இரவு (09) பேசிய அப்துல்லாஹி தெரிவித்துள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் ஈரான் தொலைக்காட்சியான பிரெஸ் டிவி வெளியிட்ட செய்தியில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

காசா மீது இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முழு முற்றுகையை மேற்கொண்டு இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அங்கு பெரும் மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தி இருப்பதோடு அந்த குறுகலான நிலத்தில் தொடர்ந்து ஒருசில மருத்துவமனைகளே செயற்பட்டு வரும் நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு சிகிச்சைக்காக அல்லது அடைக்கலம் பெற்றுள்ளனர்.

போர் வலயங்களில் இயங்கும் இவ்வாறான மருத்துவமனைகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.

“கடந்த சில மணி நேரங்களில் பல மருத்துவமனைகள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்” என்று காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா, அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு நேற்று தெரிவித்தார்.

இஸ்ரேலிய தரைப்படையின் முற்றுகையில் இருக்கும் காசா நகரில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையின் முற்றவெளியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் உயிரிழப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் கித்ரா தெரிவித்தார். இந்தோனேசிய மருத்துவமனை போன்று ஏனைய மருத்துவமனைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

அல் ஷிபா மருத்துமனையில் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் வாகன தரப்பிடத்தில் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பின்னரான வீடியோ காட்சிகளை பலஸ்தீன ஊடகம் நேற்று வெளியிட்டிருந்தது. அதில் தூக்குப்படுக்கையில் உயிரிழந்தவர் ஒருவரின் உடல் இருப்பது அதற்கு அருகில் இரத்தக் குளமாக இருப்பதும் தெரிகிறது.

“தற்போது இடம்பெற்று வரும் தாக்குதல்கள் மற்றும் (அல் ஷிபா மருத்துவமனைக்கு) அருகில் நீடிக்கும் மோதல்கள் சிகிச்சைக்காகவும் அடைக்கலத்திற்காகவும் வந்திருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பல சிறுவர்கள் தொடர்பில் கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்று மனித உரிமை கண்காணிப்பகம் எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள்ளது.

அல் ரன்டிசி சிறுவர் மருத்துமனை மற்றும் அல் நாசிர் சிறுவர் மருத்துவமனைகள் மீதும் வெள்ளிக்கிழமை (நேற்று) நேரடித் தாக்குதல்கள் இடம்பெற்றதாக கித்ரா தெரிவித்துள்ளார். அல் ரன்டிசி மருத்துவமனையில் தரைப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததாக தெரிவித்தார்.

வடக்கு காசாவில் அமைந்துள்ள இந்தோனேசிய மருத்துவமனை மீதான தாக்குதலில் அந்த மருத்துவமனைக்கு சேதம் ஏற்பட்டிருப்பதை இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு நேற்று உறுதி செய்தது.

“பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் பொருட்கள், குறிப்பாக காசாவில் உள்ள மனிதாபிமான வசதிகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை இந்தோனேசியா மீண்டும் ஒருமுறை கண்டிக்கிறது” என்று அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குண்டுவீச்சுகளால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது எரிபொருள் இல்லாததன் காரணமாக 35 மருத்துவமனைகளில் 18 மருத்துவமனைகளும் மேலும் 40 சுகாதார நிலையங்களும் செயலிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தினசரி சண்டை நிறுத்தம்

மத்திய காசா நகரில் இஸ்ரேலிய தரைப்படை முன்னேற்றம் கண்டு வரும் நிலையில் அதன் டாங்கிகள் அல் ஷிபா மருத்துவமனையில் இருந்து சுமார் 1.2 கிலோமீற்றர் வரை நெருங்கி வந்திருப்பதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இது பொதுமக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் அல்லது மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் மருத்துவ நிலையத்தை பாதுகாப்பது தொடர்பிலான சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறுவதாக உள்ளது.

ஏற்கனவே அகதி முகாம்கள், மருத்துவ வாகனங்கள் மற்றும் மருத்துமனைகளுக்கு அருகில் இஸ்ரேல் தொடர்ந்தும் வான் தாக்குதல்களை நடத்தி வருவது இஸ்ரேலின் மேற்கத்தேய கூட்டணி நாடுகள் இடையிலும் கூட விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காசா மீது நடத்தும் தாக்குதலை மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கா அளித்த நெருக்கடிக்குப் பின் இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் (9) தெரிவித்தார்.

பொதுமக்கள் தாக்குதலிலிருந்து தப்பிக்கவும் உதவி நாடவும் தற்காலிகச் சண்டைநிறுத்தம் துணைபுரியும் என்றார் அவர்.

ஒவ்வொரு நாளும் காசாவின் வட பகுதியில் 4 மணி நேரத்துக்கு சண்டை நிறுத்தப்படும் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டது. 3 மணி நேரத்துக்கு முன் தற்காலிகச் சண்டை நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படும் என்றது வெள்ளை மாளிகை.

எனினும் சண்டை கைவிடப்பட்டதற்கான அறிகுறியும் தெரியவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சண்டை நிறுத்தம் இரு மனிதாபிமான பாதை வழியாக வடக்கு காசாவில் உள்ள மக்கள் தெற்கை நோக்கி செல்ல அனுமதிப்பதோடு பணயக்கைதிகள் விடுவிக்கப்படுதற்கும் பயன்படுத்த முடியும் என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.

எனினும் எந்த ஒரு போர் நிறுத்தமும் அங்கொன்று இங்கொன்றுமாக இடம்பெறும் ஒன்றாக இருக்கும் என்றும் தொடர்ச்சியான போர் நிறுத்தம் ஒன்று உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மோதல் நிறுத்தம் ஒன்று பற்றி நெதன்யாகுவிடம் பொக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் கேட்டபோது, “இல்லை. ஹமாஸ் எதிரிகள், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதல் தொடர்ந்து இடம்பெறும். ஆனால் குறிப்பிட்ட இடங்களில் ஒருசில மணி நேர காலத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சண்டை நிறுத்தம் இருக்கும். போர் வலயங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கான பாதுகாப்பான வழியை ஏற்படுத்த விரும்புகிறோம். அதனையே நாம் செய்கிறோம்” என்று பதிலளித்தார்.

இந்நிலையில் வடக்கு காசாவில் இருந்து கடந்த புதன்கிழமை தொடக்கம் பொதுமக்கள் கால்நடையாகவும், கழுதை வண்டிகளிலும் தெற்கை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

எனினும் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்கள் மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் வீதிகள் சேதமடைந்திருக்கும் நிலையில் மக்கள் வெளியேறுவதிலும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும் எண்ணிக்கையானோர் தெற்கில் உள்ள பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் ஏனைய இடங்களில் அடைக்கலம் பெற்று பெரும் நெரிசலை உருவாக்கியுள்ளது.

மறுபுறம் தெற்கு மற்றும் மத்திய காசாவிலும் இஸ்ரேல் தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தெற்கின் பிரதான நகரமான கான் யூனிஸில் மக்கள் தினசரி இஸ்ரேலிய தாக்குதலில் தகர்க்கப்பட்ட கட்டடங்களில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுபுறம் வடக்கு காசாவை மையப்படுத்தி பலஸ்தீன போராளிகள் மற்றும் இஸ்ரேலிய தரைப்படைகள் இடையிலான மோதல் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்த மோதலில் நேற்றும் ஒரு இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.

21 வயதான போர் மருத்துவ பிரிவைச் சேர்ந்த சார்ஜென்ட் கிலாட் ருசன்பிலிட் வடக்கு காசாவில் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய படையினரின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளது. இதில் காசாவில் தரைவழி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின் 41 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

மறுபுறம் மேற்குக் கரையிலும் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடக்கில் உள்ள அகதி முகாம் மற்றும் ஜெனின் நகரில் இஸ்ரேல் இராணுவம் நேற்று முன்தினம் நடத்திய சுற்றிவளைப்புகளில் குறைந்தது 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த முகாமில் கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் நகருக்கு மேலால் கறும்புகை வெளியாவது தெரிந்ததோடு துப்பாக்கி மற்றும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.

இதன்படி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

மேற்குக் கரையின் பல நகரங்களிலும் இஸ்ரேல் இராணுவம் தினசரி சுற்றிவளைப்புகளை நடத்தி வருவதோடு அங்கிருக்கும் சட்டவிரோத குடியேறிகளின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT