ஜனநாயகப் பாரம்பரியத்துக்கு பிரதமரின் முன்னுதாரணம் | தினகரன்

ஜனநாயகப் பாரம்பரியத்துக்கு பிரதமரின் முன்னுதாரணம்

இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் நிறைவடைவதற்கு இன்னும் இரு மாதங்கள் தான் உள்ளன. இந்த ஏழு தசாப்த காலப் பகுதியில் இடம்பெறாத வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வொன்று நேற்றுமுன்தினம் நடந்தேறியுள்ளது. அதுதான் இந்நாட்டின் எந்தவொரு அரசியல் தலைவரும் செய்யாத காரியத்தை ஆற்றி, இந்நாட்டு வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்திருக்கின்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

பிணைமுறி வழங்கல் சர்ச்சை தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ஆஜராகி சாட்சியமளித்து, ஜனநாயகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியை வழங்கி உள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. எதுவிதக் கட்டாயப்படுத்தல்களும் இன்றி சுயவிருப்பின் பேரில் ஆணைக்குழு முன்பாக ஆஜராகி சாட்சியமளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆணைக்குழு தலைவரும் சட்ட மாஅதிபரும் தொடராகக் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் முழுமையான ஒத்துழைப்புடன் தெளிவாகப் பதில்களை அளித்துள்ளார்.

அத்தோடு அரச நிதிக்கொள்கை, திறைசேரி முறி மற்றும் நிதி விடயங்கள் தொடர்பாக அமெரிக்க நிபுணர்களின் பரிந்துரைகள், சர்வதேச நாணயத்தின் சிபாரிசுகள் அடங்கலான அறிக்கைகள் என்பவற்றையும் அவர் ஆணைக்குழுவுக்கு வழங்கினார்.

இந்நாட்டில் பெரும் சர்ச்சையாக்கப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கி பிணைமுறி ஏல விற்பனை தொடர்பில் அவர் இந்த சாட்சியத்தை அளித்து வரலாற்றுத் தடத்தை பதித்திருக்கின்றார். பிரதமர் ரணிலின் இந்நடவடிக்கை இந்நாட்டு வரலாற்றில் தனியான இடத்தை பெற்றுக் கொண்டதோடு நாட்டில் நீதிச் சுதந்திரம் தழைத்தோங்கி இருப்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டும் கூட.

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவரும், ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ஆஜராகி சாட்சியம் அளித்ததற்கான எந்தத் தடயமும் கிடையாது. அதனால் பிரதமரின் இந்நடவடிக்கையை சட்டம் ஒழுங்கையும், நீதித்துறை சுயாதீனத்தையும் மதித்துக் செயற்படும் சகலரும் வரவேற்றுள்ளனர்.

இந்த அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு வந்த சொற்ப காலத்தில், அதாவது 2017 பெப்ரவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற இப்பிணைமுறி ஏலவிற்பனை விவகாரம் கூட்டு எதிரணியினரால் பெரும் சர்ச்சைக்குரிய ஒன்றாக பூதாகரப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்கீடுகளை மேற்கொள்ளாது ஒப்பந்தங்களை வழங்கி ஆரம்பித்த திட்டங்களுக்கு கடன்களைச் செலுத்துவதும், ஏனைய கடன்களை வழங்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பு என்றவகையில் நிதி திரட்டவே இப்பிணைமுறி வழங்கல் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் இதனை சர்ச்சைக்குரிய ஒன்றாகப் பூதாகரப்படுத்திய கூட்டு எதிரணி இதனை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் எடுத்துச் சென்றது. பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற கணக்கு குழுவுக்கு (கோப்) கொண்டு சென்றனர்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிணைமுறி வழங்கல் சர்ச்சை தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார்.இப்பிணைமுறி வழங்கலின் பின்னணியில் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் பதவி விலகினார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா அமைச்சு பதவியை இராஜிநாமா செய்தார்.

இவ்வாறான சூழலில், இந்த ஜனாதிபதி- ஆணைக்குழு பிணைமுறி ஏல விற்பனை விவகாரம் தொடர்பில் பிரதமரிடம் தெளிவு பெற எதிர்பார்த்தது. இதனடிப்படையில் கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஒரு தொகுதி வினாக்கள் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவ்வினாக்களுக்கான பதில் ஒக்டோபர் 20 ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் மற்றொரு தொகுதி வினாக்கள் இம்மாதம் 10 ஆம் திகதி பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட, அவற்றுக்கான பதில் 18 ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இவ்வாறு 48 வினாக்களுக்கு பிரதமர் முழுமையான பதில்களை சத்தியக் கடதாசி மூலம் உறுதிப்படுத்தி ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்தார்.

இவ்வாறான நிலையில் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 20வது வினாவுக்கான விளக்கத்தையும், 28 வது வினாவுக்கான தெளிவையும் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை ஜனாதிபதிஆணைக்குழுக்கு ஏற்பட்டது-.இந்தப் பின்புலத்தில்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுயமாக முன்வந்து இவ்வாணைக்குழுவுக்கு முன் ஆஜராகி சாட்சியம் அளித்திருக்கின்றார்.

பிரதமரின் முன்னுதாரணம் மிக்க இந்நடவடிக்கைக்கு ஆணைக்குழுத் தலைவரான உச்ச நீதியரசர் கே.ரி. சித்ரசிறி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நாட்டு நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் பிரதமரின் இந்நடவடிக்கை நாட்டின் ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் ஜனநாயகப் பாரம்பரியத்திற்கும் நல்ல முன்னுதாரணமாகும்.


Add new comment

Or log in with...