சவூதியில் இருந்து விரைவில் நாடு திரும்ப லெபனான் பிரதமர் உறுதி | தினகரன்

சவூதியில் இருந்து விரைவில் நாடு திரும்ப லெபனான் பிரதமர் உறுதி

தனது ராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக கையளிப்பதற்கு சில தினங்களில் நாடு திரும்புவதாக சவூதி அரேபியாவில் தங்கி இருக்கும் லெபனான் பிரதமர் சாத் ஹரிரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்ட பின் ரியாதில் இருந்து பொது மக்களுக்கு தொலைக்காட்சி ஊடே கருத்து வெளியிட்டபோதே ஹரிரி இதனை தெரிவித்தார்.

எனினும் ஹரிரியின் அமைச்சரவை சகாக்கள் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறியபோதும், ஹரிரி அதனை மறுத்துள்ளார்.

தனது ராஜினாமாவுக்கு ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு மீது குற்றம்சாட்டிய அவர், தனதும் குடும்பத்தினரதும் பாதுகாப்பை கருதியே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார். லெபனானை பிராந்தியத்தின் மறைமுக யுத்தத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளன.

சுன்னி அரசியல் தலைவரும் வர்த்தகருமான ஹரிரி, 2016 ஆம் ஆண்டு லெபனானில் ஆட்சி அமைக்க பரிந்துரைக்கப்பட்டார்.

“நான் ராஜினாமா செய்துவிட்டேன். விரைவில் லெபனான் சென்று முறைப்படி எனது ராஜினாமாவை மேற்கொள்வேன்” என்று அவர் ஞாயிறன்று ‘பியூச்சர் டிவி’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். எனது ராஜினாமா லெபனான் விழித்துக்கொள்வதற்கான அழைப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஹரிரியை சவூதி பணயக்கைதியாக வைத்திருப்பதாக ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியுள்ளன. ஆனால் தான் சுதந்திரமாக இருப்பதாக ஹரிரி கூறியுள்ளார். “நான் இங்கே சுதந்திரமாக உள்ளேன். நாளை வேண்டுமென்றாலும் எனக்கு பயணிக்க முடியும்” என்று ஹரிரி கூறினார்.

முன்னாள் லெபனான் தலைவரான ஹரிரியின் தந்தை ரபிக் ஹரிரி 2005 ஆம் ஆண்டு கார் குண்டு தாக்குதல் ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார்.

அரபு நாடுகளில் ஈரான் தலையிடுவதே பிராந்தியத்தின் மிகப்பெரிய பிரச்சினை என்று ஹரிரி குறிப்பிட்டுள்ளார்.

“லெபனானை அரபு நாடுகளுடன் மோதலுக்கு கொண்டு செல்வதை என்னால் பொறுப்பேற்க முடியாது” என்று ஹரிரி குறிப்பிட்டுள்ளார். யெமனில் இருந்து சவூதி மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலை சுட்டிக்காட்டியே ஹரிரி இதனை தெரிவித்தார்.

ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா முகவர்கள் யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுடன் இணைந்தே இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக சவூதி தலைமையிலான கூட்டுப்படை குற்றம்சாட்டியுள்ளது. 


Add new comment

Or log in with...