இலங்கை − பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி இன்று துபாயில் | தினகரன்

இலங்கை − பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி இன்று துபாயில்

பாகிஸ்தான் அணியுடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று துபாயில் நடைபெறும் முதல் போட்டியுடன் ஆரம்பமாகின்றது.

இரு அணிகளும் கடைசியாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சம்பியன் கிண்ணத் தொடரின் பின்னர் மோதும் முதல் போட்டி இதுவாகும். விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் இலங்கை அணி களத்தடுப்பில் சொதப்பியதால் பாகிஸ்தான் அணி அப்போட்டியில் வெற்றிபெற்று பின் பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியை அரையிறுதியிலும், ஆரம்பம் முதலே கிண்ணம் வெல்லும் என்று ஆரூடம் கூறப்படடு வந்த இந்திய அணியை இறுதிப் போட்டியிலும் வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

அதுவரை பாகிஸ்தான் அணி விளையாடிய பல ஒருநாள் தொடர்களில் தோல்வியைச் சந்தித்து பின்னடைவிலேயே இருந்து வந்த அவ்வணி அடுத்த உலகக் கிண்ணத் தொடரில் நேரடியாக பங்குபற்றுவதற்கு அவதானமாக இருந்த அணியாகவே கருதப்பட்டது. இலங்கையுடனான ஒரே போட்டியின் வெற்றி அவ்வணியை உச்சத்துக்குக் கொண்டு சென்று தரவரிசையில் முன்னிலை பெற்றது. ஆனால் அதன் பின் அவ்வணி இன்று நடைபெறும் போட்டிவரை எந்தவொரு ஒரு ஒருநாள் போட்டியிலும் விளையாடியதில்லை. எனவே தற்போதைய நிலையில் அவ்வணி சம்பியன் கிண்ணம் வென்ற உற்சாகத்தில் உள்ளதா என்று கூற முடியாது.

சம்பியன் கிண்ணம் வெல்லக் காரணமாயிருந்த அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பகர் சமான் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டி/டுவெண்டி போட்டியில் சுமாராகத்தான் துடுப்பெடுத்தாடியிருந்தார். மேலும் மற்றொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் அஷார் அலிக்கு இத்தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் டுபாயில் நடைபெற்ற 2வது டெஸ்டின் போது காயமடைந்தால் இப்போட்டியில் விளையாடுவது சந்தேகமே. என்றாலும் அவ்வணியில் இடம்பெறவுள்ள ஜுனைட்கான், ஹசன் அலி, நுக்மான் ரயிஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலாக பந்து வீசக் கூடியவர்களே. பாபர் அசாம், சொஹைப் மலீக் மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மீண்டும் களமிறங்கவிருக்கும் அஹமட் செஷாட், இமாத் வஸீம், சடாட் கான், தலைவர் சப்ராஸ் அஹமட் ஆகியோர் துடுப்பாட்டத்தில் ஒருநாள் போட்டிகளில் மிளிரக் கூடியவர்களே.

இலங்கை அணியைப் பொறுத்த வரையில் அவ்வணி சம்பியன் தொடருக்குப் பின் நடைபெற்ற அநேகமான ஒருநாள் போட்டிகளில் படுமோசமதகத் தோல்வியுற்று ஒருநாள் தரவரிசையிலும் பின்னடைவிலுள்ள அணி. கத்துக்குட்டியாகக் கருதப்படும் சிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை மண்ணில் நடைபெற்ற தொடரிலும் தோல்வியடைந்தது.

அதன் பின் பலம்வாய்ந்த இந்திய அணியுடன் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரையும் முழுமையாக இழந்தது. மேலும் அத் தொடரில் இலங்கை அணியின் எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் துடுப்பாட்டத்தில் நிலைத்து நின்று ஆடவில்லை. அத் தொடரில் இலங்கை 4 போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடினாலும் ஒரு போட்டியில் கூட 240 ஓட்டங்களைக் கடந்து பெறவில்லை. அத்தொடரில் இலக்கைத் துரத்திய போட்டியில் கூட பாரிய தோல்வியைச் சந்தித்தது.

இதற்கு முக்கிய காரணம் இலங்கை அணியின் துடுப்பாட்டமே. அத்தொடரில் இந்திய வீரர்கள் 5 சதமடிக்க இலங்கையினரால் தொடர் முழுவதும் 4 அரைச்சதங்களே பெறமுடிந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வரும் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல சில போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாடினாலும் திடீரென சொதப்புகிறார். இந்தியாவுடனான தொடரில் சுமாராக ஓட்டங்கள் குவித்த முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸும் காயம் காரணமாக இத் தொடருக்குத் தெரிவு செய்யப்படவில்லை.

மேலும் தனுஷ்க குணதிலக்க தடை காரணமாகவும், இலங்கை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் லசித் மலிங்கவும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. இவர் கடந்த காலங்களில் சிறப்பான திறமையை வெளிக்காட்டமையும் இவர் தெரிவு செய்யப்படாமைக்குக ஒரு காரணமாகும். அவர் கடைசியாக விளையாடமிய 12 ஒருநாள் போட்டிகளிலும் 10 விக்கெட்டுகளையே கைப்பற்றியுள்ளார். எதிரணிக்கு சராசரியாக 6 ஓட்டங்களுக்கு மேல் வாரி வழங்கியுள்ளார்.

ஒருநாள் அணிக்கு தினேஷ் சந்திமால். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள சாமர கபுகெதர, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், லஹிரு திரிமான்ன போன்ற துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து நின்று ஆட முயற்சித்தால் வெற்றிபெறக்கூடிய இலக்கை அடையலாம். முக்கியமாக இளம் வீரர் குசல் மெண்டிஸ் அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் மந்த நிலையிலேயே உள்ளார். முடிவுற்ற டெஸ்ட் போட்டிகளில் கூட பிரகாசிக்கவில்லை.

ஆனால் ஒருநாள் தொடரில் அவரின் பங்களிப்பு முக்கியமானது என்பதை உணர்ந்து விளையாட வேண்டும். பாகிஸ்தானுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டித் தொடரைப் பார்க்கும் போது இலங்கை வேகப் பந்து வீச்சு சற்று பலமாகவே உள்ளது. காயத்திலிருந்து மீண்டு வந்த சுரங்க லக்மால் சிறப்பாகப் பந்து வீசிவருகிறார்.

இவருடன் நுவன் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர மற்றும் சுழற்பந்து விச்சாளர்களான அகில தனஞ்ஜய, மிலிந்த சிறிவர்தன, அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற டி/டுவெண்டி போட்டியில் மிளிர்ந்த சகலதுறை வீரர் திஸர பெரேரா மற்றும் சீக்குகே பிரசன்னவும் அணியில் இடம் பெறுவதால் சமபல அணியாக களமிறங்கும் இவ்விருவணிகளுக்கும் இத்தொடர் கடும் சவால்மிக்கதாகவே அமையும்.

இலங்கை -− பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் போட்டி 1975ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியுடன் ஆரம்பமானது. சுமார் 45 வருடகால ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுவரை 148 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இவற்றில் 85 போட்டிகளில் பாகிஸ்தானும், 58 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளது. நான்கு போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மண்ணில் இரு அணிகளும் 28 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 26 போட்டிகளிலும் இலங்கை அணி 12 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இலங்கை மண்ணில் நடைபெற்ற 41 போட்டிகளில் இலங்கை 20 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி 18 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

2009 ஆண்டு பங்கரவாதத் தாக்குதலின்பின் அங்கு போட்டிகள் நடைபெறுவதில்லை. அதன் பின் பாகிஸ்தான் பங்குபற்றும் போட்டிகளின் மத்தியஸ்தமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸே உள்ளது. இம்மைதானத்தில் இலங்கை பாகிஸ்தான் அணிகள் 45 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 28 போட்டிகளிலும் இலங்கை அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...