கிழக்கில் கூட்டாட்சி: சம்பந்தனும், ஹக்கீமும் இன உறவுகளை பலப்படுத்த வேண்டும் | தினகரன்

கிழக்கில் கூட்டாட்சி: சம்பந்தனும், ஹக்கீமும் இன உறவுகளை பலப்படுத்த வேண்டும்

கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சி நடத்தும்,தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் தழிழ், முஸ்லிம் சமூகங்களின் உறவுகளைப் பலப்படுத்த வேண்டுமென தேசிய சகவாழ்வு, தேசிய கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின், பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் (05) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் மனோகணேசன் மேலும் தெரிவித்ததாவது: அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள், அபிவிருத்தி.ஆலோசனைகள் என்ற இரு இரண்டு பிரதான விடயங்களை கொண்டுள்ளன. அபிவிருத்திகள் சகல சமூகங்களுக்கும் சமமான அளவில் வழங்கப்படவேண்டும்.

அரசியல் ஆதாயங்களுக்காக சமூகங்களை மோதவிடும் கருத்துக்களை வெளியிடும் சில மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளை முஸ்லிம் காங்கிரஸும்,தமிழ் தேசிய கூட்டமைப்பும் கண்டிக்க வேண்டும். உள்ளூர் ,பிரதேச அரசியல்வாதிகளின் செயற்பாடுகளால், தமிழ்,முஸ்லிம் உறவுகள் சீர்குலைந்துள்ளன.

இந்த பாரதூரமான விடயங்களை எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனும்,அமைச்சர் ரவூப்ஹகீமும் கண்டுகொள்ளவில்லை.இது சமூகங்களின் புரிதலில் பாரிய விபரீதங்களை ஏற்படுத்தலாம். அபிவிருத்திக்குழு கூட்டங்கள், ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் தலைமைப் பதவிகளுக்காக தமிழ்,முஸ்லிம் தலைமைகள் மோதிக்கொள்வதால் கிழக்கு மாகாணத்திலுள்ள எந்த சமூகங்களும் நன்மையடையப் போவதில்லை.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமி,முஸ்லிம் சமூகங்களின் உறவுகள் நல்ல நிலையில் இல்லை.

மத ஸ்தலங்கள் தாக்கப்படுவதையும்,இனத்துக்கெதிரான வன்முறைகளையும்,கிழக்கிலுள்ள பிரதான சமூகங்கள் இணைந்து எதிர்க்கின்ற மனநிலைகளை வளர்ப்பதனூடாகவே உண்மையான இன நல்லுறவுகளை கட்டி எழுப்ப முயுமென்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும்,அபிவிருத்திப் பணிகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பது நியாயமான சிந்தனைதான். எல்லோரும் நினைத்தது போல் அபிவிருத்திகளைமுன்னெடுத்தால் கவனிக்கப்பட வேண்டிய பிரிவுகள், கிடப்பிலிருந்துவிடும். எனவே அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் பொதுவான திட்டத்தில் செயற்படுவதே வெற்றியை ஈட்டித்தரும். ஒருங்கிணைப்புக் குழு செயற்பாடுகளில் ஆலோசனை சார் வேலைகளில் பிரச்சினைகள் இருக்காதென நினைக்கிறேன்.

கடந்த காலங்களில் உள்ளுர் நிறுவனங்கள் துரோகிகளாகவும் சர்வதேச நிறுவனங்கள் எதிரிகளாகவும் பார்க்கப்பட்டன. அவ்வாறான நிலைமைகள் இன்று மாற்றப்பட்டுள்ளது.

நிறுவனங்களிடையே நட்பு ரீதியான முரண்பாடுகள் இருக்கலாமே தவிர, பகைமை ரீதியான முரண்பாடுகள் இருக்க கூடாது. புதிய ஒரு நிறுவனத்தினைப் பதிவு செய்வதாக இருந்தாலும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்த நடைமுறையும் மாறியுள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாணம் சார்பாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்காக ஒருவர் இருக்க வேண்டும் என்பது ஒரு விடயமல்ல. தேசிய செயலகம் இருக்கிறது. அது அனைத்தையும் வசதிப்படுத்தும் அமைப்பாகவேயுள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு, பிரதேச ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றின் ஊடாக நாட்டின் அபிவிருத்திகள் நடைபெறுகின்றன. இவற்றுக்கு பாராளுமன்றம், மாகாண சபைகள், நிதி ஒதுக்குவதுடன், அரசாங்கமும் நிதி ஒதுக்கீடுகளை வழங்குகின்றது. இந்த நிதி ஒதுக்கீடுகளை, வெறுமனே அரசாங்க அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் மாத்திரம் கலந்து பேசி மேற்கொள்கின்றமை பிழையானது. அதில் சிவில் அமைப்புக்களும் பங்கெடுக்க வேண்டும்.

கொள்ளையடிக்கப்படாவிட்டாலும், வீணடிக்காவிட்டாலும், தவறான நிருவாகச் செயற்பாடுகளினாலும் மக்கள் பணம் விரயமாகிறது. அந்த வகையில் தான் இந்த தேசியக் கவுன்சில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சில நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. சில நிறுவனங்கள் கம்பனிச்சட்டத்திற்குக் கீழும் இயங்குகின்றன. அவற்றின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்குரிய செயற்பாட்டினை கவுன்சில் மேற்கொள்ளும். அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததும் அதனை மேற்கொள்ளமுடியும்.

நன்கொடை வழங்குபவருக்கு அதனை சுதந்திரமாக மேற்கொள்ள முடியும். இது போன்ற விடயங்களை ஒழுங்குபடுத்த முனைந்தால்,தனியார் நிறுவனங்களை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் வரும். மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்களிடையே உறவுகள், சீரின்றி சென்று கொண்டிருப்பதை பார்க்கக்கூடியதாக உள்ளது. இது முக்கயமான பிரச்சினை ஒன்று. இதை நீங்கள் கவனத்தில் எடுத்து சீர் செய்ய வேண்டும்.

அதற்கு முன்னர், இந்த சமூக உறவுகள் ஏன் சீர்குலைந்தன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இப்படியொரு பிரச்சினை இருப்பதைத் தெரிந்திருந்தும் அதை சீர்செய்ய முயலாது ஒதுங்கியிருக்க முயல்வது தவறானது.

சில வேளைகளில் கண்முன்னே பிரச்சினைகள் இருக்கும், அதனைப்பற்றிப் பேசமாட்டோம். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒத்துழைப்புடன் செயற்படாவிட்டால் பெரும்பான்மை சிங்கள சமூகத்திடமிருந்து எவ்வாறு நியாயத்தை எதிர்பார்ப்பது. சகோதர இனங்கள், சமூகங்கள் கொல்லப்படுவதையும்,சக மதஸ்தலங்கள் தாக்கப்படுவதையும்,சகலரும் ஒன்றாக இணைந்து எதிர்த்தாலே உண்மையான சமூக உறவுகள் ஏற்படும்.

இந்தியாவில் ஜல்லிக்கட்டு நடக்கும், அல்லது பலஸ்தீனத்தில் வன்முறைகள் வெடிக்கும். இந்நேரங்களில் கண்முன்னே இடம்பெறும் சகோதரப் படுகொலைகளை சிலர் கண்மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டு மௌனியாக இருப்பர்.இந்த நிலைமைகளை எதிர்ப்பதில் தான் மனிதாபினம் வளர வாய்ப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...