லண்டனில் பள்ளிவாசலுக்கு அருகில் தாக்குதல்; ஒருவர் பலி | தினகரன்

லண்டனில் பள்ளிவாசலுக்கு அருகில் தாக்குதல்; ஒருவர் பலி

 
வட லண்டன் பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகில் பள்ளிவாசலுக்கு வந்தோர் மீது வேனின் மூலம் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
 
இத்தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
செவன் சிஸ்டர்ஸ் வீதியில் உள்ள பின்ஸ்பரி பார்க்கிலுள்ள குறித்த பள்ளிவாசலுக்கு நோன்பு துறந்துவிட்டு, தொழுகைக்காக வந்தவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த வேன் வேண்டுமென்றே வழிபாட்டாளர்கள் மீது மோதியதாக, பிரிட்டனின் இஸ்லாமிய கவுன்சில், அறிவித்துள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பாக குறித்த வேனை செலுத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
சம்பவத்தின்போது, "அனைத்து முஸ்லிம்களையும் நான் கொல்லப் போகிறேன்" என அவர் சத்தமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்கு பலர் உதவிகள் செய்வது போன்ற பல்வேறு காட்சிகளைக் கொண்ட வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.
 
 
இது மிக "மோசமான சம்பவம்" என தெரிவித்துள்ளா பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, காயமடைந்தவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.
 

வீடியோ: பி.பி.சி

"வேன் வந்து மோதிய போது தான் அதிலிருந்து எவ்வாறு விலகினேன் என இன்னும் புரியவில்லை" என சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
"வேன் நேராக வந்து எங்கள் மீது மோதியது; நிறைய பேர் இருந்தனர். எங்களை உடனடியாக நகர்ந்து போகும்படி கூறினர்".
 
"நான் மிகவும் அதிர்ச்சியடைந்து விட்டேன் என்னைச் சுற்றி உடல்கள் கிடந்தன."
 
"கடவுளுக்கு நன்றி; நான் வேன் வந்த பாதையில் இருந்து நகர்ந்து விட்டேன். அனைவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் அதிகமான காயம் ஏற்பட்டுள்ளது." என அவர் தெரிவித்தார்.
 
சம்பவ இடத்திற்கு அருகாமையில் வசிக்கும் மற்றொருவர், மக்கள் "கூச்சலிட்டுக் கொண்டும் கதறிக் கொண்டும்" இருந்ததாக தெரிவித்தார்.
"பார்பதற்கு கொடுமையாக இருந்தது" என்றார்

 

 


Add new comment

Or log in with...