Sunday, May 19, 2024
Home » வெளித்தலையீடுகள் இல்லாமல் அதிகாரங்களை பகிர்ந்தளித்தல்

வெளித்தலையீடுகள் இல்லாமல் அதிகாரங்களை பகிர்ந்தளித்தல்

அரசின் நிலைப்பாடுகள் ஜப்பான் அமைச்சருக்கு எடுத்துரைப்பு

by damith
May 6, 2024 8:00 am 0 comment

ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கம் என்பவற்றை முன்னிறுத்தி, வெளித்தலையீடுகள் இல்லாத நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவி, அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை அமைச்சர் அலிசப்ரி ஜப்பானிய அமைச்சரிடம் தௌிவுபடுத்தியுள்ளார்.இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவுடன் இணைந்து அமைச்சர் அலிசப்ரி நடத்திய ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அலிசப்ரி:

ஜப்பான், இலங்கைக்கிடையில் 72 வருடகால நெருங்கிய நட்புறவு பேணப்பட்டு வருகிறது.

இரு நாடுகளுக்குமிடையில் அண்மையில் இடம்பெற்ற உயர்மட்ட விஜயங்களால், இந்த உறவுகள் மேலும் நெருக்கமடைந்தன. இந்நிலையில், நானும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவும் பரந்துபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினோம். பொருளாதார நெருக்கடி காலத்தில் ஜப்பான் வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்தோம்.

கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் ஜப்பான் பாரிய பங்களிப்பு வழங்கி வருகிறது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், கடன் உறுதிப்பாட்டை விரிவுபடுத்தவும், வளர்ச்சியை மையமாகக் கொண்ட மறுசீரமைப்பு செயன்முறைகளை நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கும் ஜப்பான் உதவியது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மாத்திரம் இலங்கை மீளவில்லை.இலங்கையரின் மீண்டெழும் தன்மையையும் இந்த மீட்சி வெளிப்படுத்துகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மீளாய்வுக்குள், கடன் மறுசீரமைப்பு செயன்முறை பூர்த்தி செய்யப்படுமென எதிர்பார்க்கிறோம்.இலங்கையின் பொருளாதார உறுதிப்பாடு, மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்து ஜப்பான் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மின்சாரம், உட்கட்டமைப்பு, துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முதலீட்டுத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு ஜப்பானுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.இலகு ரயில் சேவையை மீள ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.இவ்வாறு அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT