Sunday, May 19, 2024
Home » நாகப்பட்டினம், காங்கேசன்துறை கப்பல் சேவை மே 13இல் ஆரம்பம்

நாகப்பட்டினம், காங்கேசன்துறை கப்பல் சேவை மே 13இல் ஆரம்பம்

by damith
May 6, 2024 6:45 am 0 comment

நாகப்பட்டினம், காங்கேசன்துறைக்கிடையில் இம்மாதம் 13ஆம் திகதி கப்பல் சேவைகள் ஆரம்பமாகும் என, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கப்பல் சேவையை தனியார் நிறுவனமே இயக்கவுள்ளது. இந்தியாவின் ஷிப்பிங் கோர்ப்பரேசனும் இலங்கை அரசாங்கமும் இணைந்து, இந்த தனியார் நிறுவனத்தை தெரிவுசெய்துள்ளன.

இச்சேவை, மலிவானதாகவும் பொதுமக்களுக்கு ஏற்ற விதத்திலும் நடத்தப்படும். இதற்காக ஒரு வருடகாலத்துக்கு மாதத்துக்கு 25 மில்லியன் ரூபாவுக்கு மேலான செலவை இந்திய அரசாங்கம் ஏற்க முடிவு செய்துள்ளது.

இலங்கையிலிருந்து வெளியேறும் பயணிகளிடம் தற்போது அறவிடப்படும் வரியை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா 63.35 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்க தீர்மானித்துள்ளது.

முன்னர், நிதியை கடனாக வழங்கவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றப் பயணத்துக்கான இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதத்தில், இது உதவியாக வழங்கப்படுகிறது. இலங்கை ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது (2023) இரு நாடுகளதும் நிலப்பிணைப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மக்களை மையமாகக் கொண்ட இந்திய அரசின் கொள்கைகளை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.

நகரங்களை நெருக்கமாகக் கொண்டுவருவது மட்டுமன்றி நாடுகளையும் மக்களையும் நெருக்கமாகக் கொண்டுவருவதே இக்கப்பல் சேவையின் நோக்கம். ஜி,20 உச்சிமாநாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் மூலம் இலங்கை மக்கள் பயனடைவர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT