Monday, May 6, 2024
Home » தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

- பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை 29இல் ஆரம்பம்

by Gayan Abeykoon
April 24, 2024 6:34 am 0 comment

நாட்டின் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ்  மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு   பட்டதாரிகள் இலங்கை  ஆசிரியர் சேவையின் மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.

இந்த ஆட்சேர்ப்புக்காக  5316  பேர் மும்மொழிகளிலும் நாடளாவியரீதியில்  நேர்முகப் பரீட்சைக்கு தெரிவாகியுள்ளனர். நேர்முகப் பரீட்சை  இம்மாதம் 29ஆம் திகதி  முதல் கல்வியமைச்சில் நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் பதினேழாம் திகதிய (17.11.2023)  அரச வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் கோரப்பட்ட  ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கே இந்த ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது. பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக தகைமையை  பரீட்சிப்பதற்கான பொது நேர்முகப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சை ஆகியனவும் இம்மாதம் 29 ஆம் திகதி முதல் பத்தரமுல்ல இசுருபாய,  கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது.

மேற்படி ஆசியர் ஆட்சேர்ப்புக்காக இரசாயனம், பௌதீகவியல், உயிரியல், விவசாய விஞ்ஞானம், இணைந்த மொழி, அறபு, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மொழிகள், தொழில்வாய்ப்பு கல்வி உள்ளிட்ட நாற்பத்தினான்கு பாடங்கள் ரீதியாக குறித்துரைக்கப்பட்டு நேர்முகப்பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது நேர்முகப் பரீட்சையில் தகைமை பெற்ற விண்ணப்பதாரர்கள் அன்றைய தினமே நடைபெறும் செயன்முறைப் பரீட்சையிலும் பங்கேற்றல் வேண்டும். நேர்முகப் பரீட்சைக்கு தகைமை பெற்றவர்கள் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் மூலப்பிரதிகள் மற்றும் நகல் பிரதிகளை தனித்தனியாக இணைத்து தயாரிக்கப்பட்ட இரண்டு கோவைகளுடன் நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பின்னர் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டதெனவும் அமைச்சின் செயலாளர் ஜே.எம். திலகா ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT