Monday, May 6, 2024
Home » உமாஓயா அபிவிருத்தித் திட்டம் மக்கள்வசம் இன்று ஒப்படைப்பு

உமாஓயா அபிவிருத்தித் திட்டம் மக்கள்வசம் இன்று ஒப்படைப்பு

by Gayan Abeykoon
April 24, 2024 10:07 am 0 comment

மாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் நாளை 24 ஆம் திகதி மக்கள் வசம் ஒப்படைக்கப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்துறை,வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சட்டத்தரணி திருமதி பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். 

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அண்மையில் உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அவதானித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை இன்று 24 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தலைமையில் ஆரம்பிக்க அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பவித்ரா வன்னியாராச்சி, இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து அதன் பலனை மக்களுக்கும் நாட்டிற்கும் பெற்றுக் கொடுக்க முடிந்தமை பெருவெற்றி எனத் தெரிவித்தார்.

அமைச்சர் முதலில் உமாஓயா திட்டத்தின் மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நீரை சேமித்து வைக்கும் நீர்த்தேக்கங்களான பண்டாரவளை, வெலிமடை பிரதேசத்தில் அமைந்துள்ள டயரபா நீர்த்தேக்கம் மற்றும் புஹுல்பொல நீர்த்தேக்கத்தின் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

பின்னர் எல்ல கரந்தகொல்ல பகுதியில் உள்ள நிலத்தடி மின் உற்பத்தி நிலையத்திற்குச் சென்ற பவித்ரா வன்னியாராச்சி, அங்குள்ள மின்சார உற்பத்தி நடவடிக்கைகளை அவதானித்தார்.

கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய மின்னுற்பத்தி தொகுதியுடன் இணைக்க முடிந்துள்ளது ஒரு பெரிய சாதனை.

பரிசோதனை நிலை நடவடிக்கைகளின் போது தினமும் 800 இலட்சம் தொடக்கம் 1000 இலட்சம் ரூபா மதிப்பிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் இது எரிபொருளில் இருந்து மின்சாரம் தயாரிக்க செலவிடப்படும் பணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மின்சாரம் தயாரித்த பிறகு, அந்த நீர் மொனராகலை மற்றும் பதுளை மாவட்டத்தில் 15000 ஏக்கர் நெற்பயிர்களுக்கு பெரும்போகம் மற்றும் சிறுபோக சாகுபடி இரண்டுக்கும் நேரடியாக தண்ணீர் வழங்கக் கூடியதாக இருக்கும். இது விவசாயத்துறையின் வளர்ச்சிக்கும் சாதகமாக அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் மொனராகலை, பதுளை, பண்டாரவளை பிரதேச மக்களின் குடிநீர் வினியோக தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக் கூடியதாகவும் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

பதுளை, மொனராகலை, பண்டாரவளை, ஹம்பாந்தோட்டை பிரதேச மக்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் உதவும் மாபெரும் திட்டம் இதுவாகும் எனவும் அவர் கூறினார்.

அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சியுடன் உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை கண்காணிப்பதற்காக திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் டி.சி.எஸ்.அலகந்தா, குடியிருப்பு திட்ட பொறியியலாளர் பிரியந்த நாணயக்கார, ஈரான் ஃபராப் கட்டட நிர்மாண நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் பி. தேஷ்ஃபுலி (Mr P. Dezfuli- Project Manager), அந்நிறுவனத்தின் தள முகாமையாளர் எம். மாலேக்பூர், (Mr.M.Malekpour – Site Manger) உள்ளிட்ட குழுவினர் இணைந்திருந்தனர்.

இத்திட்டம் அதிகாரபூர்வமாக 2010 இல் தொடங்கப்பட்டது. அதற்காக மதிப்பிடப்பட்ட தொகை 514 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஈரானிய அரசாங்க ஒப்பந்த நிறுவனமான ஃபராபினால் அனைத்து கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படுவதோடு நீர்ப்பாசனத்துறை அமைச்சின் சார்பில் (Centrel Engineering Consultancy Bureau) பொறியியல் பணிகள் குறித்த மத்திய ஆலோசனை நிறுவனம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முதலில் புஹுல்பொல நீர்த்தேக்கத்தில் அணை ஒன்று கட்டப்பட்டு அங்கு சேமிக்கப்படும் நீர் 4 கிலோமீட்டர் சுரங்கப்பாதை ஊடாக

டயராபா நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப்படுகிறது. டயரபா நீர்த்தேக்கத்தில் அணை ஒன்று கட்டப்பட்டு புஹுல்பொல நீர்த்தேக்கத்தில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் அங்கு தேக்கி வைக்கப்பட்டு பின்னர் 15.5 கி.மீ சுரங்கப்பாதை ஊடாக எல்ல கரந்தகொல்ல பகுதியில் நிலத்தடியில் அமைந்துள்ள இரண்டு விசையாழி இயந்திரங்களுக்கு கொண்டுவரப்படுகிறது. அந்த இரண்டு விசையாழிகளின் மூலம் 60 மெகாவாட் நீர்மின்சாரம் தனித்தனியாக உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன் மூலம் தேசிய மின்கட்டமைப்பு தொகுதிக்கு 120 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உயர்அழுத்த மின்கம்பிகள் கொண்ட 65 கோபுரங்களின் துணையுடன் 23 கிலோமீட்டர் பதுளை வரை கொண்டு செல்லப்பட்டு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும்.

மின்உற்பத்தியின் பின்னர் அந்த நீர் மற்றொரு 04 கி.மீ சுரங்கப்பாதையூடாக அலிகோட்டா ஆரா நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அந்நீரானது ஹந்தபானாகல மற்றும் குடாஓயா நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப்படும். அந்த நீரின் மூலம் பழைய நெற்காணிகள் 1500 ஹெக்டேயார்களுக்கும் புதிய நெற்காணிகள் 4500 ஹெக்டேயர்களுக்கும் இரண்டு போகங்களின் போதும் நீர் விநியோகிக்கப்படும்.

மேலும், பயிர்ச்செய்கையின் பின்னர் வெளியேற்றப்படும் மேலதிக நீர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள லுனுகம் வெஹெர பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு முப்பதாயிரம் ஏக்கர் நெற்செய்கைக்கு தண்ணீர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிந்திஓயா ஊடாக பதுளை ஊவா வெல்லஸ்ஸ விவசாய நிலத்தை வளமாக்குவதுடன்,

மொனராகலை மற்றும் பண்டாரவளை பிரதேச மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்.

சிசிர விஜேசிங்க…

தமிழில்: வீ.ஆர்.வயலட்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT