Home » மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை 300க்கு மேல் இலக்கை எட்டியது இலங்கை
சமரியின் 195 ஓட்டங்களின் உதவியுடன்:

மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை 300க்கு மேல் இலக்கை எட்டியது இலங்கை

by Gayan Abeykoon
April 19, 2024 6:02 am 0 comment

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை 300க்கும் அதிகமான வெற்றி இலக்கை எட்டிய இலங்கை அணி தென்னாபிரிக்காவை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி தொடரை 1–1 என சமநிலையில் முடித்தது.

இதன்போது அபாரமாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து ஆட்டமிழக்காது 195 ஓட்டங்களை பெற்று மகளிர் கிரிக்கெட்டில் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்றார்.

பொட்செப்ஸ்ரூமில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க மகளிர் அணி 50 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 301 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப வீராங்கனையாக வந்த அணித் தலைவி லோரா வொல்வாட் 147 பந்துகளில் ஆட்டமிழக்காது 184 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இலங்கை அணிக்கு சமரி கைகொடுத்தார். ஆரம்ப வீராங்கனையாக அவர் கடைசி வரை களத்தில் இருந்து இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன்போது சமரி மற்றும் நிலக்ஷிகா சில்வா ஐந்தாவது விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 176 ஓட்டங்களை பெற்றனர். நிலக்சிகா ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றார்.

சமரி தனது 195 ஓட்டங்களை பெறுவதற்கு 139 பந்துகளுக்கு முகம்கொடுத்து 26 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார்.

அவரது இந்த ஓட்டம் நியூசிலாந்தின் அமெலி கெர் (2018 இல் அயர்லாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காது 232) மற்றும் அவுஸ்திரேலியாவின் பெலின்டா கிளார்ச் (1997 இல் டென்மார்க்கிற்கு எதிராக ஆட்டமிழக்காது 229) ஆகியோரின் இரட்டைச் சதத்திற்குப் பின்னர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் பெறப்பட்ட மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களாகும்.

இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 44.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 304 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. மகளிர் கிரிக்கெட்டில் இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி 289 ஓட்ட வெற்றி இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது.

இதன்படி தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 2–1 என கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரையும் 1–1 சமநிலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்து இலங்கை மகளிர் அணி டி20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்காக அங்கிருந்து நேரடியாக அபூதாபி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT