Home » அனுமதியற்ற கடைகள் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர் குழு
கொழும்பு புறக்கோட்டை Floating Market

அனுமதியற்ற கடைகள் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர் குழு

by Gayan Abeykoon
April 19, 2024 11:00 am 0 comment

கொழும்பு புறக்கோட்டையில் அனுமதியற்ற விதத்தில் கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர் குழுவொன்று, இருப்பதாக கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மிதக்கும் சந்தைக்கு முன்பாக இடித்து அகற்றப்பட்ட 21 கடைகளும் கடத்தல்காரர்களால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களே என, கொழும்பு மாநகர சபையின் நகர அழகுபடுத்தல் திட்ட இணைப்பாளர் பொறியியலாளர் குமுது போகஹவத்த தெரிவித்தார்.

கடத்தல்காரர்கள் கடைகளை தினசரி வாடகைக்கு வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சட்டவிரோத கட்டுமானம் குறித்து முதன்முறையாக முறைப்பாடு கிடைத்தால், அதனை அகற்றுவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

எனவே, இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்களுக்கு இரையாகி பணத்தை வீணடிக்க வேண்டாமென, கொழும்பு மாநகர சபையும் நகர அபிவிருத்தி அதிகார சபையும் மக்களிடம் கேட்டுள்ளன.

அனுமதி பெறாத கடைகளை அகற்றும் முன், கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான முதல் அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 20 இல்,நகர அபிவிருத்தி அதிகாரசபையால் வெளியிடப்பட்டது. இதையடுத்து,ஜனவரி (02)  அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் 14 நாட்களுக்குள் கடைகளை அகற்றுமாறு கொழும்பு மாநகர சபை எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது. பல தடவைகள் இந்த கடைகளின் உரிமையாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு, வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிடுகின்றன.

ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றப்படாததால் கடந்த 16, 17 ஆகிய இரு தினங்களில் இந்த அனுமதியற்ற கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொறியியலாளர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இந்த கடைகளை அவற்றிலிருந்து அகற்றுவதற்கு நகர சபையினால் செலவிடப்படும் பணத்தை, மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படுமென கொழும்பு மாநகர சபையின் நகர அழகுபடுத்தல் திட்ட இணைப்பாளர் பொறியியலாளர் குமுது போகஹவத்த தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT