Thursday, May 2, 2024
Home » ரஷ்ய படையில் கூலிவேலைக்கு ஓய்வுபெற்ற படைவீரர்கள்

ரஷ்ய படையில் கூலிவேலைக்கு ஓய்வுபெற்ற படைவீரர்கள்

முகவராக செயற்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ மேஜரும் முகவரும் கைது

by Gayan Abeykoon
April 19, 2024 11:00 am 0 comment

ஷ்ய இராணுவத்தில் கூலி ஆட்களாக  தொழில்புரிவதற்காக இலங்கையிலிருந்து ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு  அனுப்பும் திட்டமிட்ட வர்த்தகத்திலீடுபட்டு வந்த ஓய்வுபெற்ற மேஜர் ஒருவரும்  மற்றுமொரு முகவரும் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் விசேடசெயலணியில் பணி புரிந்து  ஓய்வுபெற்றுள்ள இராணுவ மேஜரை வாரியபொலயில் வைத்து கைதுசெய்துள்ளதுடன் மற்றைய  நபரான முகவரை கண்டி, திகனையில் வைத்து கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இந்த இருவருக்கும் மேலதிகமாக மேலும்  சிலரும் இந்த வர்த்தகத்தில் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர்களைக் கைதுசெய்வதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்கள  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ மேஜர்,  விஜேபண்டார எனவும் முகவர், பந்துல எனவும் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம்  தெரிவித்துள்ளது. இந்த சட்டவிரோத வர்த்தகத்தை முன்னெடுத்துச்  செல்வதற்காக கண்டி, கட்டுகஸ்தொட்டை வீதியில் பாரியளவில் முகவர் நிலையமொன்று  நடத்தப்பட்டுவந்துள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய சத்துரங்க என்ற நபர் ரஷ்யாவுக்கு  தப்பிச்சென்று அங்கு மறைந்து வாழ்வதாகவும் அவரே அங்கிருந்து இந்த வர்த்தகத்தை  முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றத்தடுப்பு விசாரணைத்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர் இந்நாட்டில் வசித்தபோது முகவர்  நிலையத்தை முன்னேற்றும் வகையில் யுவதியொருவர் மற்றும் ஜனரஞ்சக தொலைக்காட்சி நாடக  நடிகர் உள்ளிட்ட மேலும்  சிலரும் அதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள்  கிடைத்துள்ளன.

மேற்படி நபர் ஐரோப்பாவில் தொழில்வாய்ப்பு  பெற்றுத்தருவதாக தெரிவித்து கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்தவரென்றும்  விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. ரஷ்ய இராணுவ முகாம்களை சுத்தம் செய்தல், பங்கர்களை திருத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கே இலங்கை ஓய்வுபெற்ற இராணுவ  வீரர்களை ரஷ்யாவுக்கு அழைத்துச்சென்றுள்ளதாகவும் தகவல்கள்  கிடைத்துள்ளதாகவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய இராணுவ சேவையில் 500 க்கும் மேற்பட்ட இலங்கையர் உள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரியபொலயை  வசிப்பிடமாகக் கொண்ட ஓய்வுபெற்ற மேஜர் மூலம் மேற்படி நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  கோப்ரல் ஒருவர் உட்பட 37 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா சென்றுள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள்  என்றும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT