Home » ஐக்கிய அரபு இராச்சியத்தின் அறக்கட்டளை ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் உலருணவுப் பொதிகள் அன்பளிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அறக்கட்டளை ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் உலருணவுப் பொதிகள் அன்பளிப்பு

by mahesh
April 17, 2024 11:00 am 0 comment

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் இஃஷான் ஏ. ஹமீத்தின் வழிகாட்டலுடன் நற்குண முன்னேற்ற அமைப்பு ஏற்பாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மன்னர் ஸாயத் சமூக நல மனிதாபிமான அறக்கட்டளையினால் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 600 வறிய குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாள் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் வைபவம் மன்னார் முசலி தேசிய பாடசாலையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசிய தலைவர் சஹீட். எம். ரிஸ்மி மற்றும் முன்னாள் தேசியத் தலைவர் எம். என். எம். நபீழ், நற்குண முன்னேற்ற அமைப்பு ஆர்னோல்ட்,ஜேம்ஸ், முசலி பிரதேச வை. எம். எம். ஏ உயர் பீட உறுப்பினர்கள் எனப் பல கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி இங்கு உரையாற்றும் போது;

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் பாரியளவிலான மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகின்றன. அந்த வகையில் வடபுலத்தில் மீள் குடியேற்றப்பட்ட மன்னார் மாவட்டத்தில் முசலிப் பிரதேசத்திலுள்ள வறுமைக்குட்பட்ட மக்களுக்கு நோன்புப் பெருநாள் உலருணவுப் பொதிகள் வழங்கி வைத்தமையிட்டு அந்நாட்டு மன்னர் ஸாயத் அறக்கட்டளைக்கும், இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல் அமிரி அவர்களுக்கும் நற்குண முன்னேற்ற அமைப்பின் நிறுவனர் குஷால் குணசேகரவுக்கும் அதன் உதவியாளர்கள் ஆகிய அனைவருக்கும் நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஸாயத் அறக்கட்டளையானது மனிதாபிமான நடவடிக்கைகளின் குறிக்கோள்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகள், இயற்கைப் பேரழிவுகளின் போதும் அதற்குப் பிறகும் உயிர்களைக் காப்பது துன்பங்களைக் குறைப்பது மற்றும் மனித கண்ணியத்தைப் பேணுவது மற்றும் இவை போன்ற சூழ்நிலைகள் ஏற்படுவதைத் தடுத்தல் பலப்படுத்தல் போன்ற பணிகளை நோக்காகக் கொண்டு செயற்படுகிறது.

இந்த உதவியினைப் பெற்றுக் கொள்வதற்கு துணை நின்ற மன்னார் மாவட்ட முன்னாள் வை. எம். எம். ஏ. பணிப்பாளர் சபீர், இங்குள்ள வை. எம். எம். ஏ. கிளையின் முக்கியஸ்தர்கள், நற்குண முன்னேற்ற அமைப்புகள் ஆகியன ஒருங்கிணைந்து இந்த உதவியைப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க விடயம் ஆகும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இத்தகைய நல்ல மனிதாபிமானச் செயற்பாட்டின் மூலம் இலங்கைக்கும் அந்நாட்டுக்குமிடையே காணப்படும் உறவு மேலும் வலுப்படுத்தப்படுகின்றது. கடுமையான வெப்ப வரட்சி நிலவுகின்ற காலத்தில் இப்பிரதேச மக்கள் நோன்பினை நோற்றுக் கொண்டு தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். ஒரு இக்கெட்டான கால கட்டத்தில் பெருநாளைக் கொண்டாடுவதற்கு இத்தகையதொரு பெறுமதிமிக்க உலருணவுப் பொதிகள் வழங்கி வைத்தமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

எமது கோரிக்கையின் மூலம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஸாயத் அறக்கட்டளையின் ஊடாக இப்பிரதேசத்தில் தொழில் நுட்ப நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதுவும் இந்த வை. எம். எம். ஏ. கிளையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நற்குண அமைப்பினர்களும் ஏனைய துறை சார்ந்தவர்களும் உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

எப்பொழுதும் ரழமான் மாத காலத்தில் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற வகையில் உதவி செய்பவர்களாக உள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கடுமையான வெப்ப வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது வை. எம். எம். ஏ. அமைப்பு உலருணவுப் பொதிகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றது. எனினும் இவ்வாறான பாரியதொரு திட்டத்தை முசலிப் பிரதேசத்தில் செய்து வருகின்றோம். அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவைக்கு 179 கிளைகள் உள்ளன.

75 ஆம் ஆண்டைக் கடந்து கொண்டிருக்கின்ற கால கட்டத்தில் இப்பிரதேசத்தில் ஆரம்ப கால கட்டத்தில் வை. எம். எம். ஏ. இருந்தாலும் 1990 களில் மக்கள் இடம்பெயர்ந்து சென்றமையால் அவை இல்லாமற் போயிற்று. சகோதரர் எம். என். எம். நபீழ் தேசிய தலைவராக இருக்கின்ற கால கட்டத்தில் 2018 ஆம் ஆண்டு நான் தேசிய பொதுச் செயலாளராக இருந்தேன். அந்தக் கால கட்டத்தில் முசலிப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மறிச்சிக்கட்டிக்கு முதன் முதலாக வந்து இந்த மாவட்டத்தில் கிளைகளை உருவாக்குவதற்கான வேலைகளைச் செய்தோம். நாங்கள் விட்ட இடத்தில் இருந்து மாவட்டப் பணிப்பாளர்களான சபீர் மற்றும் ஆரிபும் செய்து கொண்டிருக்கின்றார். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு கட்டடத்திற்கு அத்திவாரமாக இருந்து ஒற்றுமையாகச் செயற்படுகின்றார்கள். நாங்கள் ஒன்றுபட்டுச் செயற்படும் போதுதான் எமக்கு தேவையான எல்லா வகையிலான வளங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

நற்குண அறக்கட்டளையினர்களும் எம்மோடு சேர்ந்து இயங்குகின்றார்கள்.

நாங்கள் நாட்டின் சுவிட்சத்திற்காகவும் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் பிரார்த்தனை செய்வோம். எல்லோரும் ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அகில இலங்கை வை. எம்.எம்.ஏ முன்னாள் தேசியத் தலைவர் எம். என். எம். நபீழ் உரையாற்றும் போது;

ஐக்கிய அரபு இராச்சியத்தின் மன்னர் ஸாயத் அறக்கட்டளை தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கும், இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல்அமிரி அவர்களுக்கும் நற்குண அமைப்பின் பணியாளர்களுக்கும் மற்றும் எமது வை. எம். எம். ஏ. கிளையின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் மன்னர் ஸாயத் அறக்கட்டளை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பணியின் மூலம் எமது நாட்டுக்கு மேலும் பல உதவிகள் கிடைக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்களுக்கும் மன்னருக்கும் இலங்கை நாட்டு தூதுவருக்கும் எமது பிரார்த்தனைகளைச் செய்து கொள்கின்றோம் என்று அவர் மேலும் தொவித்தார்.

முசலி பள்ளிவாசலின் பிரதம கதீப் மௌலவி லரீப் உரையாற்றும்போது,

ஐக்கிய அரபு இராச்சியத்தின் மன்னர் ஸாயித் அவர்களுக்கும் அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அவர்களும், இவ்வுணவுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வர துணை நின்ற தொண்டு நிறுவனத்தினர்களுக்கும்

இந்த புனிதமான மாதத்தில் கடுமையான வெப்பமான கால நிலையினால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற கால கட்டத்தில் இத்தகைய உணவுப் பொருட்களைத் தந்துதவிய, அதற்காகப்பாடுபட்ட சகலருக்கும் இந்த முசலிப் பிரதேச மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு இந்த உலருணவுப் பொதிகளை வழங்கிய ஐக்கிய அரபு இராச்சிய மன்னர் சேகு சாயத் அறக்கட்டளை அந்நாட்டு மக்கள், அந்நாட்டுத் தூதுவர், இதற்காக முழு முயற்சியாகப்பாடுபட்ட , சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம்.

முசலி தேசிய பாடசாலை அதிபரும் முசலி வை.எம். எம். ஏ. கிளையின் தலைவருமான எம். கே. எம்.லாபீர் உரையாற்றும் போது;

இந்த ரமழான் மாதத்தில் இந்த உலருணவுப் பொதிகளை வழங்கி வைப்பது என்பது ஒரு நன்றி பாராட்டி போற்றத்தக்க விடயமாகக் காணப்படுகின்றது. இந்த உணவுப் பொருட்களைக் கொண்டு வருவதற்கு இங்குள்ளவர்கள் பல்வேறு பிரயத்தனங்களைக் மேற்கொண்டு இருக்கின்றார்கள். வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட மக்களே இந்தப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். எமது பிரதேசத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களின் ஊடாக இந்த மக்களைத் தெரிவு செய்தோம். கடந்த 30 வருட கால யுத்தத்தில் இப்பிரதேசம் பாதிக்கப்பட்ட பிரதேசம்.இப்பொழுதுதான் ஓரளவு முன்னேறி வருகின்ற நிலையில் இவ்வாறான உதவிகள், குடிநீர், மலசல கூட வசதிகள், வீட்டு வசதிகள், போன்றவைகள் எல்லாம் மிகவும் குறைந்த நிலையில் இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

நற்குண முன்னேற்ற அமைப்பின் முக்கியஸ்தர் ஆர்னோல்ட் உரையாற்றும் போது;

இந்த உணவுத் திட்டத்தை வழங்குவதற்கு ஒழுங்குபடுத்தியது எமது நிறுவனம் ஆகும். இதற்கான சகல அனுசரணையை வழங்கியது ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள ஸாயத் அறக்கட்டளை நிறுவனம் ஆகும். ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் அப்போது இப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்திருந்தார். அந்த கோரிக்கைக்கு இணங்க ஸாயத் அறக்கட்டளையின் அனுசரணையுடன் இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.

முஸ்லிம்கள் ரமழான் பண்டியினை சிறந்த முறையில் கொண்டாட வேண்டும் என்பற்காக தாங்களால் வழங்கப்படும் உலருணவுப் பொதிகளை வழங்கி வைக்குமாறு எம்மிடம் கேட்டுக் கொண்டார்கள். இந்த உலருணவுப் பொதிகளை வழங்கி வைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முசலி வை. எம். எம். ஏ கிளையினருக்கும் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

மன்னார் மாவட்டப் பணிப்பாளர் ஆரிப் உரையாற்றும் போது;

நோன்பு காலத்தில் நோன்பைப் பிடித்துக் கொண்டு கொழும்பில் இருந்து மிக தூண்ட தூரத்தில் அமைந்துள்ள எமது முசலிப் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ள முன்னாள் வை. எம. எம். ஏ. இன் தேசிய தலைவர்களுக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தப் பொதிகளைப் பெற்றுத் தருவதற்கு பாடுபட்ட முன்னாள் வை. எம். எம். ஏ. இன் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி மற்றும் முன்னாள் முசலி மாவட்டப் பணிப்பாளர் ஆகிய இருவரும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டமையால் முசலிப் பிரதேசத்திற்கு இப்படியான உதவியைப் பெற்றுக் கொள்ள கிடைத்தமையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். அதுவும் முசலி வை. எம். எம். ஏ. கிளையின் ஊடாக இப்பொருட்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கூறி அவர்களும் எம்மோடு கலந்து கொண்டு வழங்கி வைக்க வருகை தந்தமையானது மிகவும் வரவேற்கத்தக்க அம்சமாகும்.

நற்குண முன்னேற்ற அமைப்பின் பணிப்பாளர் இதற்கு முன்னரும் இப்பிரதேசத்திற்கு வருகை தந்து இப்பிரதேசத்திலுள்ள 200 பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிச் சென்றுள்ளார். இவ்வமைப்பினர் பிற சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் முஸ்லிம்களுடைய நோன்பு பெருநாளை சிறந்த முறையில் கொண்டாட வேண்டும் என்ற வகையில் ஒரு நல்ல நோக்கத்திற்காக இந்த உணவுப் பொதிகளை நமக்குப் பெற்றுத் தருவதற்கு துணை நின்றுள்ளார்கள். ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள ஸாயத் என்ற நிறுவனம் சுமார் 30 இலட்சம் பெறுமதியான உலருணவுப் பொதிகளை வழங்கி இருக்கின்றார்கள் இவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT