Thursday, December 12, 2024
Home » அல்லாஹ்வின் நிழல் தரும் காரியம்

அல்லாஹ்வின் நிழல் தரும் காரியம்

by sachintha
April 12, 2024 12:43 pm 0 comment

எ ல்லாம் வல்ல கண்ணியமிக்க அல்லாஹ் மனிதனைப் படைத்து, அவன் இந்த உலகில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக செல்வம், பெற்றோர், உறவினர், மனைவி, மக்கள் என்ற எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான்.

அவை மட்டுமின்றி அவனுக்கு வரவிருக்கும் மற்றொரு வாழ்க்கையிலும் அவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக நன்மை தரும் பல காரியங்களைத் தனது தூதர் (ஸல்) அவர்கள் மூலம் எடுத்துரைத்து வழிகாட்டியுள்ளான். அதில் ஒன்று தான் தர்மம். தனது தேவைக்கு மிஞ்சிய செல்வம் படைத்தவர்கள், தனக்குக் கீழுள்ள கஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுத்து அதன் மூலம் அவர்களது சிரமத்தை நீக்க வேண்டும்.

அல்லாஹ் நமக்குக் காட்டித் தந்த எத்தனையோ நற்காரியங்களுக்கு கணக்கின்றி எண்ணற்ற நன்மைகளை அல்லாஹ் அள்ளிக் கொடுக்கின்றான். அதேபோன்று தர்மத்திற்கும் எண்ணற்ற பலன்கள் உண்டு. இப்பலனை அறியாத மக்கள் தர்மம் செய்வதில் ஆர்வம் காட்டாதுள்ளனர்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ‘தேவை போக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். இதனை உங்கள் வீட்டாரிடமிருந்து ஆரம்பம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி)

அதேநேரம், ‘ஆதமின் மகனே! நீ மற்றவர்களுக்காகச் செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்’ என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி)

இந்த நபிமொழிகள் தர்மம் செய்வதை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளன. அதிலும் அல்லாஹ் குறிப்பிடுவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கும் வாசகம் தர்மம் செய்வதை எவ்வளவு தூரம் ஊக்குவிக்கிறது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். ‘உன்னிடம் இருப்பதை நீ மற்றவர்களுக்குக் கொடுத்தால் உன் பசியை நான் போக்குவேன்’ என்பதே அந்த வாக்குறுதியாகும்.

இந்த உலகில் நாம் நன்றாக வாழ்வதற்குத் தர்மம் வழிவகுப்பது போன்றே மறுமை வாழ்க்கையும் நன்றாக அமைய துணைபுரிகிறது.

மறுமை என்பது, மனிதர்களின் அழிச்சாட்டியங்கள் அடங்கி ஒடுங்கி பரிதாபத்துடன் நிற்கும் வாழ்க்கை! அவ்வாழ்க்கையின் கடுமைகளில் ஒன்று தான் வெப்பம், வியர்வை! மனிதன் இவ்வுலகில் செய்த பாவத்திற்கேற்ப அவன் வியர்வையில் மூழ்கும் நேரம். அந்த நேரத்தில் அவன் எப்பேற்பட்ட செல்வாக்கு மிக்கவனாக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாது. இந்நிலையில் அந்தக் கொடிய வெப்பத்தை விட்டும், வியர்வையை விட்டும் காப்பதற்கு தர்மம் கேடயமாக அமையும்.

இது தொடர்பில் ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கூறும் போது, ‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்களின் ஒருவர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர்’ என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி)

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்: புஹாரி)

இவையும் அல்லாஹ் நமக்குச் செய்யும் மிகப் பெரும் உதவி தான். நாம் நரகத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகத் தான் அனைத்து நற்காரியங்களையும் செய்கிறோம். அந்த நரகத்திலிருந்து காக்கும் கேடயமாக தர்மம் அமைந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!’ என்று கூறுவார். இன்னொருவர், ‘அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!’ என்று கூறுவார் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள் (ஆதாரம்: புஹாரி).

அதனால் நாம் செய்யும் சாதாரண தர்மத்திற்கு அல்லாஹ் மிகப் பெரும் கூலியாக சிறப்பான மறுமை வாழ்வை அளிக்கிறான். அதனால் தர்மம் செய்வதன் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் உணர்ந்து செயற்படுவது அவசியம். ஏனெனில் இவ்வுலகில் இறைவன் நமக்கு அளித்திருக்கும் பொருளாதாரம் தொடர்பில் மறுமை நாளில் அவன் விசாரிக்கவே செய்வான். இதனை அல் குர்ஆன், ‘அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள் (102:8) என்றுள்ளது.

இவ்வசனத்தில் இடம்பெற்றுள்ள அருட்கொடை என்பது பொருட் செல்வம், மக்கட் செல்வம் என மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்துச் செல்வங்களையும் குறிக்கும். இந்தச் செல்வங்களைப் பற்றி மறுமையில் அவன் விசாரிக்காமல் இருக்கப்போவதில்லை.

எனவே இந்த அற்ப உலகில் ஆடம்பரமாகச் செலவு செய்வதைத் தவிர்த்து, வறுமையிலும் பசியிலும் வாழும் மக்களுக்கு அதிகமதிகம் தர்மம் செய்து மறுமையில் அல்லாஹ்வின் நிழலில் மறுமையில் ஒன்று கூட முயற்சிப்போம்.

மின்ஸார் இப்றாஹீம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT