Monday, May 20, 2024
Home » இறை சிந்தனையுடனான மகிழ்ச்சிக்குரிய நாள்

இறை சிந்தனையுடனான மகிழ்ச்சிக்குரிய நாள்

by Gayan Abeykoon
April 10, 2024 6:26 pm 0 comment

அல்லாஹுத்தஆலா எமக்களித்த மாபெரும் அருளின் காரணமாக ஒரு மாத காலம் நோன்பு இருந்து விட்டு புனித ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை கொண்டாடுகிறோம். இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலக முஸ்லிம்களும் ஒரு மாத காலமாக பகற்காலங்களில் பசித்திருந்தும் இரவு வேலைகளில் விழித்திருந்தும் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருந்த ரமழான் எம்மை விட்டு பிரிந்ததும், புனித நோன்புப் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் பொன்னான நாள் இது.

பெருநாள் என்பது இறைவனை நினைவு கூறும் புனித திருநாள். இது மிக மகிழ்ச்சியாக இருக்கும் வேளையிலும் இறைவனை தொழுதே அந்நாளைத் தொடங்குகிறார்கள்.

அல்லாஹ் தங்களுக்கு அருளியவைகளை நினைவு கூறும் வகையில் அவனைத் தொழுது, அவனது திருநாமத்தைப் போற்றி புகழ்கின்றோம். அது மட்டுமல்லாது மண்ணறை வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் தம் உற்றார் உறவினர்களையும் நினைவு கூர்ந்து அவர்களது ஆத்மா நலனுக்காகவும் இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள். வறிய மக்களுக்கு உதவுகிறார்கள். துன்பங்களில் உழல்பவர்களுக்கு கருணை காட்டுகிறார்கள். நோயுற்றவர்களை சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். எம்மைப் பிரிந்து வெளிநாடுகளில் உள்ள நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி அவர்களை எண்ணிப்பார்க்கிறார்கள். இவ்வாறு நினைவு கூறும் நாளாக ஈத் பெருநாள் விளங்குகின்றது. மேலும் நல்வாழ்த்துக்களை பரிமாற்றிக் கொள்ளல் மூலம் இணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் வலிமையாக்கிக் கொள்ளல், பகைமை களைந்து உற்றார் உறவினர்களை சந்தித்து உறவுகளை பலப்படுத்திக் கொள்ளல் அண்டை, அயலவர்களுடன் பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்ளல். பகை கொண்ட உள்ளங்களை சேர்த்து வைத்தல், பெற்றவர்களை மனம் குளிரச் செய்தல் போன்ற நற்செயல்கள் மூலம் இந் நந்நாளை அலங்கரிப்பதை இஸ்லாம் வரவேற்கின்றது.

மேலும் பெருநாள் தினத்தில் எமது உற்றார் உறவினர்கள், இனபந்துக்கள் போன்றோரை அரவணைத்து, ஆதரிப்பது அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவது, அவர்களுடன் உறவைப் பலப்படுத்திக் கொள்வது, பகைகளை களைத்து கொள்வது போன்றவற்றில் கூடிய கவனம் செலுத்தி உன்னத கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். குடும்ப உறவை முறித்துக் கொண்டவன் சுவனம் நுழைய மாட்டான். என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டுமாயின் மற்றும் வாழ்வாதாரத்தில் பரக்கத் கிடைக்க வேண்டுமாயின் இனபந்துக்களை சேர்ந்து, அவர்களோடு நெருக்கமான உறவை பேணி வருவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இன்றைய இப் புனித பெருநாளை அதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வது சிறப்புடையது.

அண்டை வீட்டாருடனான உறவு தொடர்பில் மிக இறுக்கமான கொள்கையை கடைபிடிக்கும் மார்க்கம் இஸ்லாம் அண்டை வீட்டார் என்ற பதம் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர் என்று வேறுபடுத்தப்பட்டு இல்லை. கொண்டாடப்படும் இப் பெருநாளில் அண்டை வீட்டார் மீது அதிகம் கவனம் செலுத்துவது அவசியம்.

அன்பு, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, இன நல்லிணக்கம் போன்ற பண்புகளால் மக்களிடையே சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இப்பெருநாளை எடுத்துக் கொள்வது அவசியம். ஒரு முறை யூதர் ஒருவரின் பிரேதம் ஒன்று வீதியில் சென்ற போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். அது யூதனின் சடலம் அல்லவா என்று குறிப்பிடப்பட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அது ஓர் ஆத்மா அல்லவா’ என விளக்கமளித்தார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்) இவ்வாறு நபி ( ஸல் ) அவர்கள் பிற மதத்தவர்களை மதித்து நடந்திருக்கிறார்கள்.

இத் தினத்தில் எம்மை விட்டு பிரிந்து மண்ணறை வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள், இனபந்துக்கள், உற்றார் உறவினர்கள், அயலவர்கள், மற்றும் நண்பர்கள் அனைவரது கப்ருகளை சியாரத் செய்து அவர்களுக்கு ஸலாம் கூறி அவர்களுக்கு பிரார்த்தனை செய்வது முக்கிய விடயமாகும். குறிப்பாக பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், மஹ்ரமான ஆண்கள் பெண்கள், ஆசிரியர்கள் உஸ்தாத்மார்கள் மற்றும் நண்பர்களோடும் முஸாபஹா செய்து எமது பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் உறவை பலப்படுத்திக் கொள்ள முடியும். ஈத் முபாரக்

எம்.யூ.எம்.வாலிஹ் 

(பாரி, அல்- அஸ்ஹரி)

வெலிகம

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT