Sunday, May 19, 2024
Home » இறைத்தூதரின் நகரில் ஒரு பெருநாள்

இறைத்தூதரின் நகரில் ஒரு பெருநாள்

by Gayan Abeykoon
April 10, 2024 7:12 pm 0 comment

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட சமயம் அங்குள்ள மக்கள் இருநாட்களைப் பெருநாட்களாய் எடுத்து மகிழ்வோடு கொண்டாடுவதைக் கண்டார்கள். அப்பொழுது நபிகளார் “இந்த இரண்டு நாட்களதும் சிறப்பு என்ன?” என வினவ அதற்கு மதீனாவாசிகள் “இந்த இரு நாட்களும் ஜாஹிலிய்யா காலத்தில் எங்களுக்கு திருநாட்களாய் இருந்து வந்தவை. அவற்றில் நாங்கள் விளையாடி மகிழ்ந்துகொண்டிருந்தோம்” என பதிலளித்தனர். அப்போது நபிகளார் “அவ்விரு நாட்களுக்குப் பகரமாக அவற்றினை விட சிறந்த இருநாட்களை அல்லாஹ் உங்களுக்கு பெருநாட்களாக வழங்கியுள்ளான். அவைதான் நோன்புப்பெருநாளும் ஹஜ்ஜுப்பெருநாளும்” என பதிலளித்தார்கள்.

இதுவே முஸ்லிம்களாகிய நாம் கொண்டாடும் இருபெருநாட்களும் உருவாகிய சரிதை. இன்று உலக முஸ்லிம்கள் அவர்கள் வாழும் பிரதேசத்திற்கேற்ப பல்வேறு வித்தியாசமான கலாசாரங்களை பின்பற்றுகின்றனர். அதற்கேற்றார்போன்று அவர்களது பெருநாட்களும் அமையப்பெறுகின்றன. பிரதேசத்திற்கு பிரதேசம் எமது கலாசாரங்கள் வேறுபட்டாலும் பெருநாட்களை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டல்கள் நபிகளாரையும் அவரது தோழர்களையும் நோக்கியே மீளுகின்றன. அவ்வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டு எமது கலாசாரங்களுக்கேற்ப நாம் எவ்வாறு எமது பெருநாட்களை அமைத்துக்கொள்ளலாம் என்பது தொடர்பாக ‌நாம் அறிவது அவசியமாகிறது. எனவே நபிகளார் காலத்து மதீனாவில் ஒரு பெருநாள் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை நோக்குவது சிறந்தது.

மதீனாவில் ஒரு பெருநாள் தினம் அதிகாலை விழிப்போடே ஆரம்பித்து விடுகிறது. பெருநாள் தினமன்று தொழுகைக்காக வெளிச்செல்லமுன் குளித்து மணம் பூசுபவராக இருந்தார் நபிகளார். அவற்றையே குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் பரிந்துரை செய்தார். தொடர்ந்து தன்வசமிருக்கும் ஆடைகளில் மிகவும் அழகானதை பெருநாளன்று அணிவதை நபிகளார் வழக்கமாகக் கொண்டிருந்தார். இஸ்லாம் பொதுவாக தூய்மையாக இருத்தலை வலியுறுத்துவதோடு பெருநாளன்று இன்னும் கூடுதல் கவனம் செலுத்துமாறும் வேண்டிக்கொள்கிறது.

நபிகளார் நோன்புப்பெருநாள் தொழுகைக்கு வெளிச்செல்ல முன் பேரீத்தம் பழங்களை ஒற்றைப்படையில் உண்பவராக இருந்தார். அதேநேரம் பெருநாள் தொழுகைக்கு முன்னரும் பின்னரும் எந்தவொரு சுன்னத்தான தொழுகைகளிலும் நபிகளார் ஈடுபடவில்லை.

வீட்டிலிருந்து தொழுகைக்காக வெளிக்கிளம்பும் நபிகளார் போகும்போது ஒரு வழியையும் திரும்பும் போது மற்றொரு வழியையும் செல்லும் பாதைகளாக எடுத்துக்கொண்டார். வெவ்வேறான வழிகளில் செல்லும்போது பல்வேறு நபர்களை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளலாம் என்பதே இதற்கான காரணம்.

பெருநாள் தொழுகை பள்ளிவாயலில் அல்லாமல் திடலில் அமையப்பெற்றது. அங்கு வயது, பால் வேறுபாடின்றி எல்லோரையும் அழைத்தார் நபிகளார். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் முதற்கொண்டு மதீனாவிலுள்ள அனைவரும் அழைக்கப்பட்டதாக உம்மு அதிய்யா (ரழி) கூறுகிறார். எல்லோரும் பெருநாள் என்ற உணர்வை பெற வேண்டும். அங்கு இடம்பெறும் அமல்களில் பங்காளர்களாக வேண்டும் என்பதற்காகவே அனைவரும் அழைக்கப்பட்டனர்.

பெருநாட்கள் என்பவை மகிழ்ச்சியை வெளிப்படுத்த இறைவன் அருளியவை. நபிகளாரும் அன்றைய மதீனாவில் விளையாட்டுக்களிலும் கலைநிகழ்ச்சிகளிலும் ஈடுபட அனுமதியளித்தார்கள். புஹாரியில் பதியப்பட்டுள்ள ஆயிஷா(ரழி) அறிவிக்கும் சம்பவமொன்று, நபிகளார் இசையுடனான பாடலை பெருநாளன்று அனுமதித்ததாகவும், இன்னொரு சம்பவம் ஹபஷி நாட்டவர்கள் தோலினால் செய்யப்பட்ட மத்தளங்களையும் ஈட்டிகளையும் கொண்டு மஸ்ஜிதில் நடனமாடி சில விளையாட்டுகளில் ஈடுபட்டதாகவும் அதை பார்க்க நபியவர்கள் ஆயிஷா (ரழ) அவர்களை அழைத்துச் சென்றதாகவும் பதிவாகியுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் இஸ்லாம் அழகியலை விரும்பும் மனித இயல்போடிணைந்த மார்க்கம் என்பதை தெளிவுபடுத்துகின்றன. ஆனால், இஸ்லாம் கலைகளிலும் விளையாட்டுக்களிலும் வரையறைகளை விதித்துள்ளமையையும் நாம் மறந்துவிடலாகாது.

மேலும் பெருநாள்தின வாழ்த்துப்பரிமாறல் மிக முக்கியமானது. அவ்வாறான‌ வாழ்த்துப்பரிமாறல் எம்மிடையேயுள்ள அன்பையும் உறவையும் அதிகரிக்கும். ‘இறைவன் உங்களிடமிருந்தும் எங்களிடமிருந்தும் (நல்லறங்களை) ஏற்றுக்கொள்வானாக… என்ற வாழ்த்தை நபித்தோழர்கள் பெருநாளன்று சந்தித்துக்கொள்ளும்போது பரிமாறுபவர்களாக இருந்துள்ளார்கள். மட்டுமன்றி, இறைநினைவை ஏற்படுத்தவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவுமென என்ற தக்பீர் மொழியப்பட்டன.

அதேநேரம், இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பெருநாட்கள் என்பவை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய நாட்களாகும். எனவேதான் நோன்புப்பெருநாளுடன் ஸக்காதுல் பித்ரை இஸ்லாம் இணைத்து வைத்துள்ளது. பெருநாளன்று தொழுகைக்கு செல்லமுன் ஸக்காதுல் பித்ரை வழங்குமாறு நபிகளார் வேண்டியுள்ளமை அன்றைய தினம் அனைத்து வீடுகளிலும் சந்தோசம் வெளிப்பட வேண்டும் என்ற நோக்கத்தை காட்டுகிறது.

இறைத்தூதரின் நபிமொழியொன்றிலிருந்து ஸக்காதுல் பித்ருக்கான தெளிவான நோக்கங்களாக வீண்பேச்சுக்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தல், ஏழைகளின் உணவாக அமைதல் என்ற இரு பரிமாணங்களை காணமுடிகிறது. இறைத்தூதர் (ஸல், அவர்கள் அதனை வழங்குபவர், பெறுபவர் இருவரும் பலனடையும் வகையில் எமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

இவ்வாறாக இஸ்லாத்தின் பெருநாட்கள் என்பவை சமூகசார் நலன்களையும் தனிநபர்சார் நலன்களையும் கருத்திற்கொள்வதாக அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் முஸ்லிம்களாகிய நாம் பெருநாட்களை மகிழ்வுடனும் இலக்குசார் நோக்குடனும் கொண்டாட முயல்வோம்.

ஷம்லான் ஜாபிர்…

விடுகை வருடம்,

ஜாமிஆ நளீமிய்யா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT