Thursday, May 16, 2024
Home » நோன்புப் பெருநாளுக்கான நபிகளாரின் வழிகாட்டல்கள்

நோன்புப் பெருநாளுக்கான நபிகளாரின் வழிகாட்டல்கள்

by Gayan Abeykoon
April 10, 2024 6:24 am 0 comment

ஈகைத் திருநாளாம் ஈதுல் பித்ரும் தியாகத் திருநாளாம் ஈதுல் அழ்ஹாவும் (ஹஜ்) முஸ்லிம்களின் வாழ்வில் மிக முக்கியமான இரு பெருநாட்களாகும். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது அங்குள்ள யூத மக்கள் பல்வேறு தினங்களை பெருநாட்களாக அனுஷ்டித்து வந்தனர். இதனை அவதானித்த நபியவர்கள் ஒவ்வொரு சமூகத்தவருக்கும் சில பெருநாட்கள் உள்ளன. முஸ்லிம்களான நமக்குரிய பெருநாட்கள் ஈதுல் பித்ர் மற்றும் ஈதுல் அழ்ஹா ஆகும் என்றார்கள். (ஆதாரம்: புஹாரி).

இந்த மகத்துவம் மிக்க நன்நாளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அன்னார் எடுத்தியம்பியுள்ளார்கள். அந்த வகையில் பெருநாளன்று காலையில் நன்றாக குளித்து புதிய ஆடைகளை அணிந்து தன்னை அழகுபடுத்திக் கொள்ளுதல் நபிவழியாகும்.  நபியவர்கள் பெருநாள் தினத்தில் சிவப்பு நிற கோடு போட்ட ஆடையை அணியும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (ஆதாரம்: சில்சிலா)

அதேநேரம், நோன்புப்பெருநாள் தொழுகைக்காக செல்லமுன் சில பேரீச்சம் பழங்களை உண்ணுதல் சுன்னத்தாகும். நபியவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு செல்ல முன் ஒன்றோ அல்லது மூன்று, ஐந்து பேரீச்சம் பழங்களையோ உண்ணாமல் இருந்ததில்லை. (ஆதாரம்: பைஹகி).

மேலும் பெருநாள் தொழுகைக்கு கால்நடையாக செல்வதும் சுன்னத்தாகும். (ஆதாரம்: திர்மிதி) அத்தோடு ஒரு பாதையால் சென்று வேறொரு பாதையால் திரும்பி வருவதும் நபி வழியாகும். (ஆதாரம்: புஹாரி).

இவை இவ்வாறிருக்க, ஸக்காத்துல் பிதர் எனும் பெருநாள் தர்மத்தைப் பெருநாள் தொழுகைக்கு செல்ல முன்னர் கொடுத்துவிட்டுச் செல்வது மிகச் சிறந்த சுன்னாவாகும். பெருநாள் பிறை கண்டதிலிருந்து இந்த தர்மத்தை கொடுக்கலாம். இரண்டு தினங்களுக்கு முன்னதாக கொடுப்பதற்கும் ஆதாரம் உண்டு. இதன் அளவு அண்ணளவாக பிரதான உணவாகக் கொள்ளப்படும் தானியமான சாதாரண அரிசியிலிருந்து ஒரு தலைக்கு இரண்டு கொத்து வீதம் (இரண்டரை கிலோ) வழங்க வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள ஆண், பெண் சிறுவர், அடிமை அனைவருக்கும் பெருநாளன்று உண்ணும் உணவுத் தேவைக்கு மேலதிகமாக வைத்திருக்கும் அனைவர் மீதும் இது கட்டாயக் கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஆண், பெண் சிறுவர் அடிமை அனைவருக்காகவும் ஸக்காத்துல் பித்ர் கொடுக்கப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். இதைத் தொழுகைக்கு செல்ல முன்னர் கொடுத்துவிட வேண்டும். தாமதித்தால் அது சாதாரண தர்மமாகவே அமையும். ஸக்காத்துல் பித்ர் கடமையை நிறைவேற்றியதாக ஆகாது என்பது ஹதீஸ் ஆகும்.

மேலும் பெருநாளுக்கான பிறை கண்டது முதல் பெருநாள் தொழுகை முடியும் வரை தக்பீர் சொல்வது சுன்னாவாகும். அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர்… லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து…’ என்பது ஸஹாபாக்கள் பிரயோகித்த தக்பீர் வாசகமாகும். (ஆதாரம்: இப்னு ஹிப்பான்).

பெருநாள் தொழுகையைத் திடலிலோ திறந்த வெளியிலோ நிறைவேற்றுவதும் சுன்னத்தாகும். பள்ளிவாயில்களிலும் நிறைவேற்ற முடியும். இத்தொழுகைக்கு அதானும் இகாமத்தும் கிடையாது, முந்திய பிந்திய சுன்னத்துகளும் கிடையாது. முதலில் தொழுகையும் பின்பு குத்பாவும் நிகழ்த்தப்படும். இத்தொழுகைக்கு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் கலந்து கொள்வது நபி வழியாகும். தொழமுடியாத நிலையிலுள்ள பெண்கள் கூடத் திடலுக்கு வந்து தொழும் பகுதியை விட்டு சற்று ஒதுங்கியிருக்க வேண்டுமென்பது நபியின் உத்தரவும், நபியின் காலத்து நடைமுறையுமாகும். (ஆதாரம்: புஹாரி)

பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துகளைக் கொண்டது. முதல் ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்கு பின் ஏழு தடவைகளும் இரண்டாவது ரக்காத்தில் ஃபாத்திஹாவுக்குப் பின் ஐந்து தடவைகளும் தக்பீர்கள் சொல்ல வேண்டும். பின்னர் முதல் ரக்அத்தில் ஸூரா அஃலாவையும் இரண்டாவது ரக்அத்தில் ஸூரா காஷியாவையும் ஓதி வழக்கம் போல தொழ வேண்டும். முதலாம் ரக்அத்தில் ஸூரா காஃப்வையும் இரண்டாம் ரக்அத்தில் ஸூரா கமரையும் நபியவர்கள் ஓதியதாகவும் ஹதீஸ்களில் குறிப்பிடப்படுகின்றன. அதன் பின்பு இமாம் பெருநாள் கொத்பாவை நிகழ்த்துவார்.

பெருநாள் தொழுகையின் நேரம் ழுஹா தொழுகையின் நேரத்தை ஒத்ததாகும். அதாவது சூரியன் உதித்து ஒரு ஈட்டுயளவு உயர்ந்ததிலிருந்து ளுஹருக்கு முன்னால் வரைக்கும் உண்டான நேரமாகும். இத்தொழுகையை ஒரே தடவையில் ஜமாஅத்தாக கூட்டாக நிறைவேற்றுவதே ஸூன்னத். தொழுகை தவறியவர்கள் வேறு இடத்துக்குச் சென்று அல்லது தனியாகத் தொழுவதைத் தவிர வேறுவழியில்லை.

பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சலாம் கூறி முஸாபஹா செய்து ஆறத்தழுவி பெருநாள் வாழ்த்துக் கூறுவது சஹாபாக்களின் வழிமுறையாகும். சஹாபாக்கள் பெருநாள் தினத்தில் ஒருவரையொருவர் சந்தித்தால் “த கப்பலல்லாஹூ மின்னா வமிங்கும்” என்று கூறுவார்கள். (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

பெருநாள் தினங்களில் நன்றாக உண்டு உடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் நபிவழியே. ஏழை எளியோர் வசதியற்றோருக்கும் கொடுத்து மகிழ்வது வரவேற்கத்தக்கது. பெருநாள் தினத்தில் சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆகுமான விளையாட்டுக்கள் கேளிக்கைகளில் ஈடுபடுவதும் அனுமதிக்கப்பட்டது. நபியவர்கள் சில சிறுமிகள் தனது வீட்டில் பாட்டுப் பாடி மகிழ்வதை கண்டபோது அபூபக்கர் (ரழி) அவர்கள் அதனை தடுக்க, நபியவர்களோ அபூபக்கர..! இன்று அவர்களுக்கு பெருநாள் தினம் அவர்கள் பாடட்டும் விட்டு விடுங்கள் என்றார்கள் (ஆதாரம்: புஹாரி). ஆனால் பிறருக்கு தொந்தரவை தரும் வீண்விரய செயல்களான புகைத்தல், பட்டாசு வெடித்தல், நெருப்பு  மத்தாப்பு விளையாட்டுகளில் ஈடுபடுதல் போன்றன தடுக்கப்பட்டவைகளாகும்.

அண்மைக் காலமாக பெருநாள் தினங்களில் மாத்திரம் மரணித்தவர்களின் கப்ர்களைத் தரிசிக்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகின்றது. கப்ர்களைத் தரிசித்தல் பொதுவான சுன்னத்தாகும். அவற்றை பெருநாள் தினங்களோடு மட்டுப்படுத்துவது சிறந்ததல்ல.

அவ்வாறே பெருநாள் தினங்களில் உற்றார் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று நலன் விசாரித்தல் பரஸ்பரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தல், உணவுப் பண்டங்களை அன்பளிப்பு செய்து மகிழ்தல், குடும்பத்துடன் பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்லல், சுற்றுலா, குடும்ப ஒன்றுகூடல் மேற்கொள்ளல் போன்ற அனைத்தும் மார்க்க வரையறைக்கு உட்பட்ட வகையில் அமைத்துக்கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதிண்டு.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரினதும் ரமழானிய நல்லமல்களைக் அங்கீகரித்து இறையச்சத்துடன் எமது நோன்புப் பெருநாளை உலகெங்கிலுமுள்ள அனைத்து முஸ்லிம் உடன்பிறப்புக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் குதூகலிக்க எம் அனைவருக்கும் அருள்பாலிக்கட்டும்.

மெளலவி ஏ.ஜி.எம் ஜெலீல்…
மதனீ, விரிவுரையாளர், மஃஹதுஸ் ஸூன்னா அரபுக் கல்லூரி, காத்தான்குடி.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT