Tuesday, May 21, 2024
Home » இஸ்லாமிய வறுமை ஒழிப்புத் திட்டம்

இஸ்லாமிய வறுமை ஒழிப்புத் திட்டம்

by Gayan Abeykoon
April 5, 2024 10:34 am 0 comment

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஸக்காத்தும் ஒன்றாகும். இஸ்லாம் ஸக்காத்தை தொழுகைக்கு அடுத்த கடமையாக கருதுகிறது. ‘நீங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள். மேலும் ஸக்காத்தையும் கொடுத்து விடுங்கள்’ என அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் தனது பொருளாதாரம் குறிப்பிட்ட ‘நிஷாபை’ அடையும்போது அதில் ஒரு பகுதியை அல்லாஹ்வுக்காக அல்லாஹ் பெயர் குறிப்பிட்டுக்கூறும் கூட்டத்தினருக்கு மனமுவந்து வழங்குவதே ஸக்காத் எனப்படும். இஸ்லாத்தின் வறுமை ஒழிப்புத் திட்டமே இது.

ஸக்காத்தின் முக்கியத்துவம் குறித்து அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில், ‘நபியே… அவர்களின் சொத்தில் இருந்து ஸதக்காவை அறவீடு செய்யுங்கள். அதன் மூலம் அவர்களை சுத்திகரித்து பரிசுத்தமாக்குங்கள்’ என்று குறிப்பிடுகிறான்.

மேலும் அல்லாஹ் தொழுகையை நிறைவேற்றி ஸக்காத்தையும் கொடுப்போருக்கு இப்பூமியின் ஆட்சி அதிகாரங்களை வழங்குவதாக வாக்களித்திருக்கிறான். நாம் அவர்களுக்கு இப்பூமியை விரிபடுத்திக் கொடுத்தால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தி ஸக்காத்தையும் கொடுத்து நன்மையை ஏவி தீமையை தடுத்து வருவார்கள். (அல்குர்ஆன்.)

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘நான் சத்தியமிட்டு கூறுகின்றேன். மூன்று விடயங்கள் நிச்சயமானதாகும். தர்மம் செய்வதால் பொருளாதாரம் குறைவதில்லை, ஒரு மனிதனுக்கு அநீதி இழைக்கப்பட்டு அதில் அவன் அல்லாஹ்வுக்காக பொறுமை காக்கும் போது அவனை அல்லாஹ் மேலும் உயர்த்தி கண்ணியப்படுத்தாமல் இருப்பதில்லை, பிறரிடம் யாசிக்கும் பழக்கத்தை யார் ஆரம்பிக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் வறுமையின் வாயிலை திறக்காமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

மேலும், அல்லாஹ் ஒரு முஸ்லிம் செய்யும் தர்மத்தை ஏற்றுக்கொண்டு உங்களில் ஒருவர் தனது குதிரைக்குட்டியை பாதுகாப்பாக வளர்ப்பது போல் இவர் செய்த தர்மத்தையும் வளர விடுகிறான். இறுதியில் அது உஹது மலை அளவு பிரமாண்டமானதாக மாறுகின்றது. (ஆதாரம்: புஹாரி)

ஸக்காத் ஒரு கட்டாயக் கடமையாகும். இது கடமை என்பதை மறுத்தால் அவர் தமது கருத்தை மாற்றி தவ்பா செய்து கொள்வது அவசியம். ஸக்காத்தை நிறைவேற்றாதவருக்கு மறுமையில் கிடைக்கவிருக்கும் தண்டனை மிகக் கொடூரமானது.

அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது தங்கம், வெள்ளியினை சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாதிருப்போருக்கு கடும் வேதனை கிடைக்கும். என நபியே… நீ அவர்களுக்கு எச்சரிப்பீராக… அந்நாளில் அவற்றை பழுக்க காய்ச்சி அதனால் அவர்களின் நெற்றியிலும் விலாப் புறங்களிலும், முதுகிலும் சூடு போடப்படும். இதுதான் நீங்கள் சேமித்து வைத்த சொத்து. அதன் சுவையை நன்கு ருசித்துப் பாருங்கள் என்று சொல்லப்படும். (அல்குர்ஆன்.)

நபி (ஸல்) அவர்கள், ஸக்காத்தை நிறைவேற்றாத மனிதனின் சொத்துக்கள் நரக நெருப்பில் பழுக்க காய்ச்சப்பட்டு பாவங்களாக ஆக்கப்பட்டு மறுமையில் அவனது நெற்றியிலும் முதுகிலும் விலாப் புறங்களிலும் சூடு போடப்படும். இத்தண்டனை நியாய தீர்ப்பு வழங்கப்படும் வரை 50,000 வருடங்கள் நீடிக்கும். பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் அவர் தமது இருப்பிடத்தை சுவர்க்கத்திலோ நரகத்திலோ பெற்றுக் கொள்வார். (ஆதாரம்: அஹ்மத்)

அதேநேரம் மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் ஒருவருக்கு செல்வத்தை வழங்கி அவர் அதன் ஸக்காத்தை நிறைவேற்றாது விட்டால் மறுமையில் அச்செல்வம் இரு கொம்பு கொண்ட பயங்கரமான மிருகமாக மாறி அவரை நசுக்கி அதன் இரு கொம்புகளையும் அவரின் வாய்க்குள் விட்டு வாயை கிழித்து எறியும். நான் தான் நீ சேமித்து வைத்த செல்வம். நானே நீ சேமித்து வைத்த செல்வம் என்று கூறும் என்று கூறியதோடு பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

அல்லாஹ் ஒருவருக்கு அருளிய செல்வத்தை கஞ்சத்தனமாக வைத்திருப்போருக்கு அது நலவாக அமையும் என நினைக்க வேண்டாம். மாறாக அது அவருக்கு கேடாகவே அமையும். மறுமையில் தான் கஞ்சத்தனத்தால் சேமித்து வைத்திருந்த சொத்துக்களால் அவர்களை சுருட்டி நசுக்கப்படும்.

மேலும் ஸக்காத் கடமையை நிறைவேற்றுவதற்கான சட்டத்திட்டங்களையும் ஒழுங்குகளையும் இஸ்லாம் தெளிவாக எடுத்தியம்பியுள்ளது. அதற்கேற்ப இக்கடமையை நிறைவேண்டும். அத்தோடு ஸதக்கா தான தர்மங்களில் ஈடுபடவும் வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ரமழான் காலத்தில் காற்றை விடவும் வேகமாக தானதர்மங்கள் செய்யக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.

எனவே இஸ்லாமிய கட்டளைகள் படி ஸக்காத் கடமையை நிறைவேற்றுவதிலும் தானதர்மங்கள் வழங்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்துவோம். அதன் ஊடாக அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.

 

மௌலவி ஏ.ஜி.எம். ஜெலீல்
மதனீ,விரிவுரையாளர்,

மஃஹதுஸ் ஸூன்னா அறபுக் கல்லூரி, காத்தான்குடி

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT