அரபுக் கடலில் இந்திய கடற்படையினருடன் கடல்சார் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்ட பிரித்தானிய ரோயல் கடற்படையின் கப்பல்கள் அத்தியாவசியப் பராமரிப்புகளுக்காக சென்னைக்கு வருகை தந்துள்ளன.
சென்னைக்கு அருகிலுள்ள காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் லார்சென் மற்றும் டுப்ரோ கப்பல் கட்டும் தளத்தில் இக்கப்பல்களுக்கு அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரித்தானியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இணக்கம் காணப்பட்டதற்கு அமைய இக்கப்பல்கள் இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக பல்கூட்டுப் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளதோடு இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பும் விரிவுப்படுத்தப்படவிருக்கின்றன.
இது தொடர்பில் உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில், பிரித்தானியாவின் எல்.ஆர்.ஜி கடற்படைக் கப்பல்களை இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஈடுபடுத்துவதன் முதற்கட்ட நடவடிக்கையாக அவை தற்போது சென்னையை வந்தடைந்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
பிரித்தானியாவும் இந்தியாவும் 2022 இல் கைச்சார்த்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானிய கடற்படைக் கப்பல்கள் இந்தியாவில் பராமரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பிரித்தானியாவின் திறன்களையும் அர்ப்பணிப்புக்களையும் எல்.ஆர்.ஜி. யின் வருகை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் நிக் சாயர், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய பாதுகாப்பு கூட்டாண்மை தொடர்ந்தும் வளர்ந்து வருகிறது. இக்கப்பல்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் முடிவுற்றதும் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் நேச அணிகளுடன் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடும் என்றுள்ளார்.