– ஹைதராபாத் 31 ஓட்டங்களில் வெற்றி
IPL T20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 277 ஊட்டங்களைச் சேர்த்துள்ளது. IPL வரலாற்றில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹைதராபாத் வீரர்கள் 18 சிக்சர்கள் விளாசி மிரட்டினர்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் IPL லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத்துக்கு மயங்க் அகர்வால் – ட்ராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தது. தொடக்கத்திலேயே அதிரடி இந்த பாட்னர்ஷிப்பை 5ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா பிரித்தார். மயங்க் அகர்வால் 11 ஓட்டங்களில் அவுட்.
அடுத்து வந்த அபிஷேக் சர்மா – ட்ராவிஸ் ஹெட்டுடன் கைகோத்தார். 18 பந்துகளில் அரைசதம் கடந்து, ஹைதராபாத் அணியின் அதிவேகமாக அரைசதம் கடந்தவர் என்ற பெருமையை பெற்றார் ட்ராவிஸ் ஹெட். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தவரை ஜெரால்ட் கோட்ஸி விக்கெட்டாக்க, 24 பந்துகளில் 62 ஓட்டங்களை குவித்துவிட்டுச் சென்றார் ஹெட்.
அவர் சென்றதும் அணியின் ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பை ஏற்ற அபிஷேக் சர்மா 7 சிக்சர்கள் அடித்து வான வேடிக்கை காட்டினார். மேலும், 16 பந்துகளில் 50 ஓட்டங்களை குவித்தார். முன்னதாக ட்ராவிஸ் ஹெட் செய்த சாதனையை இதே மேட்சில் முறியடித்து, ஹைதராபாத்தின் அதிவேக அரைசதத்துக்கு சொந்தக்காரரானார் அபிஷேக் சர்மா. மும்பை திணறிக்கொண்டிருந்தது.
ஒருவழியாக பியூஸ் சாவ்லா வீசிய 11ஆவது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி 63 ஓட்டங்களுடன் வெளியேறினார் அபிஷேக் சர்மா. மும்பைக்கு அவரது விக்கெட் பெரும் நிம்மதியாக இருந்தது.
அடுத்து எய்டன் மார்க்ரம் – ஹென்ரிச் கிளாசென் பாட்னர்ஷிப் அமைத்தனர். எல்லா பேட்ஸ்மேனும் அடித்தால் என்ன தான் செய்வது என ரீதியில் மும்பை திணறிக்கொண்டிருக்க ஹென்ரிச் கிளாசென் மட்டும் 7 சிக்சர்ஸ். 18 ஓவர் முடிவில் ஹைதராபாத் 3 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்களை சேர்த்தது.
ஹென்ரிச் கிளாசென் 34 பந்துகளில் 80 ஓட்டங்களை விளாசி மிரள வைக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 277 ஓட்டங்களை குவித்தது.
IPL வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோர் இதுதான். முன்னதாக கடந்த 2013-ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் RCB 263 ஓட்டங்களை எடுத்திருந்ததே IPL தொடரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்நிலையில் தற்போது அதனை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது ஹைதராபாத்.
மும்பை அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா, பியூஸ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.