Thursday, May 16, 2024
Home » ஓய்வு பெற்றிருந்த வனிந்து ஹசரங்க இலங்கை ‘டெஸ்ட்’ குழாத்திற்கு அழைப்பு

ஓய்வு பெற்றிருந்த வனிந்து ஹசரங்க இலங்கை ‘டெஸ்ட்’ குழாத்திற்கு அழைப்பு

இலங்கைக்கு எதிரான பங்களாதேஷ் குழாமும் அறிவிப்பு

by mahesh
March 19, 2024 5:02 pm 0 comment

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற வனிந்து ஹசரங்க பங்களாதேஷுக்கு எதிரான இலங்கையின் 17 பேர் கொண்ட டெஸ்ட் குழாத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதில் புதுமுக வீரராக ஓப் சுழற்பந்து வீச்சாளர் நிஷான் பீரிஸும் இலங்கை டெஸ்ட் குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷ{க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் மிலான் ரத்னாயக்கவுக்கு பதிலாகவே 26 வயது நீஷான் பீரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன்படி அறிவிக்கப்பட்டிருக்கும் டெஸ்ட் குழாத்தில் பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் சகலதுறை வீரர் நிஷான் பீரிஸ் மற்றும் கமிந்து மெண்டிஸுடன் சுழற்பந்து முகாமை மேலும் பலப்படுத்தும் வகையிலேயே வனிந்து அழைக்கப்பட்டுள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவெனக் கூறி ஹசரங்க கடந்த 2023 ஓகஸ்ட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இதுவரை அவர் ஆடிய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் 4 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தியுள்ளார். அவர் கடைசியாக 2021 ஏப்ரல் மாதம் சொந்த மண்ணில் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே ஆடி இருந்தார்.

பங்களாதேஷ{க்கு எதிரான டெஸ்ட் தொடர் ஏப்ரல் 3 ஆம் திகதியே நிறைவடையவிருப்பதால் அவரால் ஐ.பி.எல். தொடரில் தனது சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக முதல் மூன்று போட்டிகளிலும் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உபாதைக்கு உள்ளான அசித்த பெர்னாண்டோவுக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார அழைக்கப்பட்டுள்ளார். குமார இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் 74 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதோடு கடைசியாக கடந்த 2023 மார்ச் மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தார். இத்துடன் விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித்த மற்றும் சாமிக்க குணசேகர ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

தனஞ்சய டி சில்வா தலைமையிலான டெஸ்ட் அணியில் முன்னாள் அணித் தலைவர்களான திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் போன்ற அனுபவ வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதேநேரம் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்காக 15 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அணித் தலைவர் லிட்டோன் தாஸ் அணிக்கு திரும்பியுள்ளார். முன்னர் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மனைவிக்கு குழந்தை பிரசவம் காரணமாக அவர் ஆடவில்லை.

அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் நாஹித் கான் அணிக்கு அழைக்கப்பட்டிருப்பதோடு புதுமுக வேகப்பந்து வீச்சாளர் முஸ்பீக் ஹசனும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) சில்ஹட்டில் ஆரம்பமாகவிருப்பதோடு இரண்டாவது போட்டி சட்டொக்ராமில் எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி ஆரம்பமாகும். இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்சிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்: தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷங்க, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம (வி.கா.), கமிந்து மெண்டிஸ், லஹிரு உதார, வனிந்து ஹசரங்க, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், நிஷான் பீரிஸ், கசுன் ராஜித்த, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, சாமிக்க குணசேகர.

பங்களாதேஷ் குழாம்: நஜ்முல் ஹொஸைன் ஷான்டோ (தலைவர்), சாகிர் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜொய், ஷத்மான் இஸ்லாம், லிட்டோன் குமெர் தாத், மொமினுல் ஹக் ஷோரப், முஷ்பீகுர் ரஹீம், ஷஹதாத் ஹொஸைன் டிபு, மஹதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், ஷொரிபுல் இஸ்லாம், சயித் காலித் அஹமட், முஷ்பீக் ஹசன், நஹித் ரானா.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT